இந்த மூன்று வார காலப்போராட்டம் உண்மையில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டமா அன்றி தனி மாகாணங்களுக்கு ஆதரவான போராட்டமா என்ற சந்தேகம்
கனடா ஒட்டாவா தலைநகரில் மூன்று வாரங்களுக்கு மேலாக தலை தூக்கி நின்ற ‘சுதந்திர ஊர்வலம்’ ஆர்ப்பாட்டத் ‘தீயை’ நாட்டின் பல பிராந்தியங்களிலிருந்து அவசரமாக அழைக்கப்பெற்ற பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் ஒன்று சேர்ந்து ‘அணைத்தனர்’ என்ற செய்தி நாடெங்கிலும் பரவியதால். அரசியல் தலைவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் அறிவித்துள்ளார்கள்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. அத்துடன் பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கனரக வாகனங்களின் சாரதிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி மிகவும் அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கனடாவின் அரசாங்கம் உறுதியாக அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவின் மேற்கு மாகாணங்களில் இருந்து வந்த சாரதிகள் மற்றும் கனரக வாகனங்களின் உரிமையாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய வீதகளில் தங்கள் கனரக வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
எனவே இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும் வகையில் .அவசரநிலை சட்டத்தை பாரா ளுமன்றத்தில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
இதன் காரணமாக 50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டார்.
இந்நிலையில், கனடிய பாராளுமன்றம் அருகில் முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சில நாட்கள் முயன்று அமைதியாக பொலிசார் கைது செய்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் ஆர்ப்பாட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தினர் நேற்று கனடிய தலைநகரில் அடங்க மறுத்த 200 க்கும் அதிகமானவர்கள் காவல்துறையினரால் பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இதன்போது சுமார் 50க்கும் அதிகமான கனரக வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இந்த கைகலப்பில் ஒரு காவல்துறை அதிகாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக ஒட்டாவா பொலிஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த ‘சுதந்திர ஊர்வலம்’ என்னும் போராட்டம் உண்மையில் தடுப்பூசிகளுக்கு எதிரான போராட்டமா அன்றி மேற்கு கனடாவில் உள்ள சில மாகாணங்களை இணைக்கும் ஒரு சுதந்திரப் போராட்டமா என்ற சந்தேகம் கனடாவின் உயர் மட்ட அரசியல்வாதிகளுக்கும் உயர் புலனாய்வு அதிகாரிகளுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது