(21-02-2022)
இலங்கையின் தேசிய அபிவிருத்திக்காக தேசிய அறிவியல் அறக்கட்டளையை (NSF) அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழில் நிபுணர்களின் வலையமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (21) முற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையின் சர்வதேச ஒத்துழைப்பை தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்கச் செய்யும் வகையில் தேசிய அறிவியல் அறக்கட்டளையினால் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 950க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது இந்த வலையமைப்புடன் இணைந்துள்ளனர்.
நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்க ஆர்வமுள்ள கல்வி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் துறையில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கு நம்பகமான மற்றும் யதார்த்த பொறிமுறையின் தேவையை பூர்த்தி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
உயர்கல்வி மற்றும் திறனை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புகளை வழங்கல், கல்வி ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரந்த நோக்கத்தின் கீழ் தேசிய அறிவியல் அறக்கட்டளை மற்றும் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM) ஆகியவற்றிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த மும் இதன்போது கையெழுத்தானது.
கலாநிதி பந்துல விஜே (அமெரிக்கா), பேராசிரியர் டிலந்த பெர்னாண்டோ (கனடா), பேராசிரியர் மொன்டி காஸிம் (ஜப்பான்), பேராசிரியர் சாந்தி மெண்டிஸ் (ஸ்விட்சர்லாந்து), பேராசிரியர் டிலந்த அமரதுங்க (ஐக்கிய இராச்சியம்), பேராசிரியர் சமன் ஹல்கமுகே (அவுஸ்திரேலியா) ஆகியோர் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் சேனாரத்ன உள்ளிட்ட தேசிய அறிவியல் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.