ஜூலை மாதம் நடத்தத் திட்டம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் ‘மானுடம் 2022’ என்னும் பெயரிலான சர்வதேச ஆய்வு மாநாடொன்றை எதிர்வரும் ஜூலை மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு: தொடர்ச்சிகள், விலகல்கள், செல்நெறிகள்’ என்னும் கருப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டுத் தொடரின் ஒருபகுதியாகக் கலைப்பீடம் இந்த மாநாட்டை ஒழுங்கமைத்துள்ளது.
இது தொடர்பாக, ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாட்டின் அமைப்புக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் தற்போதைய நிலைமையை அது ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டு கால வரலாற்றின் வெளிச்சத்தில் இருந்து அணுகுவதற்கும், விளங்குவதற்குமான ஒரு முயற்சியாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் சர்வதேச ஆய்வு மாநாடு 2022 (Jaffna University International Conference – JUICE 2022) இன் ஒரு துணைமாநாடாகவும், ‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு: தொடர்ச்சிகள், விலகல்கள், செல்நெறிகள்’ என்ற கருப்பொருளிலே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், ‘மானுடம் ஆராய்ச்சி மாநாடு -2022’ இனை எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
நாடு ஒரு பெருந்தொற்றுநோயின் பிடியிலும், நாட்டினுடைய கல்வி உட்பட பல்வேறு துறைகள் பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடிகளிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலிலே, இலங்கையில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் மூன்றாம் நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்டதன் நூறு ஆண்டுகளின் (1921 – 2021) பூர்த்தி இடம்பெற்றிருக்கிறது.
புரட்சிகரமான திறவுகள் மற்றும் நெருக்கடிமிக்க சவால்களை உள்ளடக்கிய இந்த நூற்றாண்டுகால கால வரலாற்றை மீட்டுப் பார்த்து, அதனை விசாரணை செய்யும் செயன்முறைகளின் ஒரு பகுதியாகவும், மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் தற்போதைய நிலைமையை இந்த வரலாற்றின் வெளிச்சத்தில் இருந்து அணுகுவதற்கும், விளங்குவதற்குமான ஒரு முயற்சியாகவும் இந்த சர்வதேச ஆய்வு மாநாடு அமையும்.
இந்த மாநாட்டுக்காக பின்வரும் உபகருப்பொருட்களில் ஒன்றின் மீதோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றின் மீதோ கவனத்தினைக் குவிக்கும் வகையிலான ஆய்வுக் கட்டுரைகள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் வரவேற்கப்படுகின்றன.
* 1921 ஆம் ஆண்டிற்கு முன்னரும் பின்னரும் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளினதும் அவை சார்ந்த ஆய்வுகளினதும் பரப்பு, உள்ளடக்கம் மற்றும் இயல்புகள்
*இந்தக் கல்விப்புலங்களின் வீச்சுகள் மற்றும் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் இந்தத் துறைகளிலே அவதானிக்கப்படும் தொடர்ச்சிகள், விலகல்கள், செல்நெறிகள் சிலோன்/ இலங்கையில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானத் துறைகளிலே கற்றல், கற்பித்தல் மற்றும் ஆய்வுச் செயன்முறைகளை வடிவமைக்கும் தத்துவங்கள், கட்டமைப்புகள் மற்றும் சட்டகங்கள்
* இலங்கையில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் போக்குகளின் மீது செல்வாக்குச் செலுத்தும் சமூக, அரசியல், பொருளாதார, கலாசாரக் காரணிகள்
* ஜனநாயகமயமாக்கல், சமுதாய அபிவிருத்தி, சமூக நீதி, பால்நிலைசார் நீதி, கலாசார சகவாழ்வு போன்றவற்றினைப் படைப்பதிலும், ஊக்குவிப்பதிலும் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் வகிபாகம்
* பன்மைத்துவம், நிலம், இலவசக்கல்வி, இராணுவமய நீக்கம், நினைவேந்தல், மனித உரிமைகள், நீதி, சமத்துவம், சுயநிர்ணயம், சகவாழ்வு போன்ற இலக்குகளினை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய போராட்டங்களை ஆதரிப்பதிலும், வலுப்படுத்துவதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் அதன் சமூகமும் செய்த முயற்சிகள் மற்றும் செயற்பாடுகள்
* இலங்கையில் இனம், மதம், கலாசாரம், பிராந்தியம், வர்க்கம், சாதி, பாலினம், பாலுணர்வு போன்றவற்றின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்ற மற்றும் ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்துகின்ற, மேலாதிக்க, பேரினவாத மற்றும் நவதாராளவாத நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கைகள் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றமை
*இலங்கையில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கைகளில் அவதானிக்கப்படும் மையங்களும் விளிம்புகளும்; அத்துறைகளிலே நோக்கப்படும் ஆதிக்க நீரோட்டங்களும் எதிர்ப்பு நீரோட்டங்களும்
*மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கைகளிலே பெருந்தொற்று நோய் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் மற்றும் இந்தத் துறைகளும், இந்தத் துறைகளுடன் தொடர்புடைய கற்பித்தல், கற்றல் மற்றும் ஆய்வுச் சமூகங்கள் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதிலே வெளிக்காட்டி வரும் புத்தெழுச்சி.
*இன்றைய இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கைகளின் இடம், வகிபங்கு, மற்றும் எதிர்காலத்தில் இத்துறைகள் செல்ல வேண்டிய திசைகள்
முழுமையான ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியாக மார்ச் 29 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு ஜூலை மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி மார்ச் 29