இலங்கை கால்பந்தின் தடுப்புச் சுவர் சாய்ந்தது.
மன்னார் நிருபர்
(01-03-2022)
மன்னார் மாவட்டம் கால் பந்திற்கு ஒரு புகழ் பெற்ற மாவட்டம். இம் மாவட்டத்தில் பல கால்பந்தாட்ட வீரர்கள் உருவாகி உள்ளனர்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்று முக்கிய கால்பந்து வீரராக உருவாகி தனது முயற்சியினால் முன்னேறி,இன்று தேசிய கால்பந்து அணியின் நிரந்தர தடுப்பு வீரராக மாறியவர் டக்ஸன் பியூஸ்லஸ்.
தேசிய மட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவு எல்லோர் மனதிலும் இருக்கும். அவ்வாறான ஒரு கனவுடன் உயரப் பறந்த ஒரு குருவி தான் டக்ஸன் பியூஸ்லஸ்.உள்ளூர் மட்டப் போட்டிகளாக இருந்தாலும் சரி,கழக மட்டப் போட்டிகளாக இருந்தாலும் தன்னை அடையாளப்படுத்திய கால்பந்து வீரன்.
1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மன்னார் பனங்கட்டுகொட்டு கிராமத்தில் பிறந்தவரே டக்ஸன் பியூஸ்லஸ்.
சிறு வயதில் இருந்தே கால் பந்தில் ஆர்வம் கொண்ட பியூஸ்லஸ் தனது முயற்சியினால் மாபெரும் கால்பந்தாட்ட வீரராக திகழ்ந்து கொண்டார்.மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் தனது கல்வி பயணத்தை ஆரம்பித்தார்.
பாடசாலைக் காலத்தில் அனைவரையும் வியப்பூட்டும் வகையில் கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகளை மேற்கொண்டதோடு, தனக்கான ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்துக் கொண்டார்.
இவர் கலந்து கொள்ளும் கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ள ஒரு ரசிகர் கூட்டமே விளையாட்டு மைதானங்களில் அலைமோதிய வரலாறுகளும் உண்டும்.மன்னார் மாவட்டத்தில் பல கால்பந்தாட்ட வீரர்களையும்,ஜம்பவான்களையும் உருவாக்கிய பாடசாலை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை.
தேசிய மட்டத்தில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டிய பாடசாலை.அந்த பாடசாலை உருவாக்கிய ஒரு கால்பந்தாட்ட ஜாம்பவான் தான் டக்ஸன் பியூஸ்லஸ்.பல்வேறு கழகங்களுடன் இணைந்து விளையாடி தனது சாதனைகளை நிலை நாட்டியவர். ஒரு விளையாட்டு வீரனுக்கு அப்பால் சாதனை வீரனாகவும் திகழ்ந்தார்.மன்னார் மாவட்டத்தில் பிறந்து சாதனை படைக்க கூடிய ஒரு வீரனாக திகழ்ந்தவர்,தனக்கென உள்ள ரசிகர் கூட்டத்தை ஆழ்ந்த துயரத்தில் விட்டுச் சென்றுள்ள உயரப் பறந்த ஒரு குருவி தான் டக்ஸன் பியூஸ்லஸ்
-இலங்கை கால்பந்தாட்ட அணியின் முக்கிய ஒரு புள்ளியாக திகழ்ந்துள்ளார்.இலங்கை அணியின் தடுப்புச் சுவராக திகழ்ந்து வந்த டக்ஸன் பியூஸ்லஸ் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.
-கால்பந்து உலகக் கிண்ண போட்டியின் தகுதி கான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அசத்தலை அனைவருக்கும் வெளிப்படுத்தி உள்ளார்.
-கடந்த வருடம் இடம் பெற்ற கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் போது இந்திய அணியுடன் இடம்பெற்ற போட்டியில் சிறந்த வீரருக்கான விருதினையும் தன் வசப்படுத்திக் கொண்டார்.
-குறித்த போட்டி சமநிலையில் நிறைவடைவதற்கு முக்கிய புள்ளியாக டக்ஸன் பியூஸ்லஸ் திகழ்ந்து கொண்டார்.
-மன்னார் மாவட்டத்தில் அடையாளம் மாத்திரம் இல்லை இலங்கை நாட்டின் ஓர் அடையாளமாகவும் திகழ்ந்து கொண்டார்.
-தனது திறமையினால் இலங்கை அணியில் இடம் பிடித்த டக்ஸன் பியூஸ்லஸ் மாலைதீவில் ஒரு விளையாட்டு கழகத்துடன் இணைந்து விளையாட அங்கு சென்றார்.
-அங்கும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
-எதிர் பாராத விதமாக கடந்த சனிக்கிழமை இவர் மரணமடைந்துள்ளதாக கிடைத்த செய்தி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது.இவர் தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
மாலை தீவில் அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியது.அவர் தற்கொலை செய்து கொள்ளக் கூடியவர் இல்லை என உறவுகள் தெரிவிக்கின்றனர்.
-அவரது மரணத்தில் இன்னும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.தற்போது வரை மாலைதீவு பொலிஸார் தற்கொலை என அறிவித்திருந்தாலும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ இரங்கல் செய்தியில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மூலம் மாலைதீவு கால்பந்தாட்ட சம்மேளனம்,மாலைதீவு அரசாங்கம்,மாலைதீவு பொலிஸாருடன் தொடர்பு கொண்டு அவரது மரண விசாரணைகளை துரிதப்படுத்துமாறும், அவரின் மரணத்திற்கான உண்மை காரணத்தை கண்டறியுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்திற்கும்,இலங்கை நாட்டிற்கும் சர்வதேச ரீதியில் பெருமை பெற்று தந்த அந்த வீரனின் மரணத்தின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
டக்ஸன் பியூஸ்லஸ்சிற்கு நாங்கள் விடை கொடுத்தாலும் அவரின் ஆரம்ப போராட்டம்,முயற்சி,அதனூடாக கிடைத்த வெற்றி என்றும் எம் மனதில் இருந்து நீங்கப் போவதில்லை.
அவரைப் போன்று இன்னும் எமது மாவட்டத்தில் உள்ள வீரர்கள் அடையாளம் கண்டு அவர்களின் திறமைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.
டக்ஸன் பியூஸ்லஸ்சின் இடத்தை நிரப்ப முடியாது விட்டாலும் அவர் பயணித்த பாதையில் எமது வீரர்கள் பயணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.