மன்னார் அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல்.
(மன்னார் நிருபர்)
(01-03-2022)
மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெற்செய்கை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டிசல் மற்றும் ஏனைய எரிபொருட்களை கேன்களில் பெற்றுக் கொண்டு வெளியில் அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று செவ்வாய்க்கிழமை (1) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெற்செய்கை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டீசலை கேன்களில் பெற்றுக் கொண்டு வெளியில் கொண்டு சென்று 135 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்வதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.
-இந்த நிலையில் தற்போது நெல் அறுவடை செய்பவர்களுக்கு என மன்னார் மாவட்டத்தில் எரிபொருளை வழங்க விசேட நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-குறித்த பிரதேசங்களில் விவசாயிகள் பெரும் போக நெல் செய்கை அறுவடையினை மேற்கொள்ள இருக்கும் விவசாய செய்கையின் ஏக்கர் அளவினை குறித்த பகுதிக்கான கம விதானை,விவசாய அமைப்பின் தலைவர், அல்லது செயலாளர் உறுதி படுத்தி வழங்குவதன் ஊடாக நெல் அறுவடையை மேற்கொள்ள உள்ள விவசாயிகள் தமக்கு தேவையான எரி பொருளை பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்விடயம் தொடர்பில் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் உரிய அமைப்புக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
எனவே மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே நெல் அறுவடையை மேற்கொண்ட மன்னார் மாவட்ட விவசாயிகள் மீண்டும் எரி பொருட்களை கொள்வனவு செய்து சேமிக்காது, இச் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.