சென்னை ராமாவரத்தில் தனியாக பானிப்பூரி சாப்பிடச்சென்ற 8 ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாக மருத்துவ கல்லூரி மாணவர் வசந்த் ஹிரீஷ் , சினிமா உதவி இயக்குனர் சதீஷ்குமார், கல்லூரி மாணவர் விஷால், பகுதி நேர தனியார் கல்லூரி பேராசிரியர் பிரசன்னா ஆகிய 4 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்
இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் பள்ளி மாணவியின் வீட்டுகே சென்று எப்படி அழைத்து செல்ல முடிந்தது ?என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்த போது இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் பின்னணியில் ஹூக்கா போதைக்கு அடிமையான கல்லூரி மாணவிகள் 3 பேர் இருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவ கல்லூரி மாணவர் வசந்த் ஹரீஷின் தோழியான ஒரு கல்லூரி மாணவி தான் அந்த பள்ளி மாணவிக்கு ஹூக்கா போதையை கற்றுக் கொடுத்துள்ளார்.
அந்த மாணவியின் தோழிகளான மேலும் இரு கல்லூரி மாணவிகளை தங்களுடன் அழைத்துச்சென்ற இந்த ஹூக்கா போதை கும்பல், நள்ளிரவு நேரத்தில் கல்லுரி மாணவிகளை பேசவைத்து அந்த பள்ளி மாணவியை மிரட்டி வீட்டில் இருந்து தங்களுடன் அழைத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 மாணவிகளும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போக்சோ வழக்குகளை பொறுத்தவரையில் 18 வயதுக்கு குறைவான பெண்ணுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைக்கு எந்தவகையில் உடந்தையாக இருந்தாலும் அவர்கள் மீதும் போக்சோ வழக்கு பாயும் என்பதால், 3 மாணவிகள் மீதும் போக்சோ வழக்கு பாய வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சினிமா உதவி இயக்குனர் சதீஷ்குமார், தனது வீட்டில் இருந்து தாயும் தங்கையும் வெளியூர் சென்றிருந்த அன்று நள்ளிரவு அந்த மாணவியை மிரட்டி தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
போதிய கண்கானிப்பு இல்லாமல், கேட்பதற்கு ஆள் இல்லாத ஒரு சிறுமி கையில் கிடைத்து விட்டாள் என்பதற்காக அந்த சிறுமியை போதைக்கு அடிமையாக்கி தங்கள் இச்சைகளை இந்த போதைக்கும்பல் தீர்த்துக் கொண்டதாக தெரிவிக்கும் போலீசார் , சென்னையில் ஓட்டல் மற்றும் டிஸ்கோத்தே பார்களில் ஹூக்கா புகைப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவ கல்லூரி மாணவர் வசந்த் ஹிரீஸ் தனது அறையில் சொந்தமாக பைப்புகளை வாங்கி வைத்து அதில் மூலிகை பொடிகளுக்கு பதில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை சேர்த்து ஹூக்கா புகைத்து வந்ததாக சுட்டிக்காட்டுகின்றனர்.
பள்ளிக்கல்லூரிகள் முழுமையாக செயல்பட்டுவரும் இந்த சமயத்தில் மாணவ மாணவிகளிடம் கூடுமானவரை தேவையற்ற செல்போன் புழக்கத்தையும், குரூப் ஸ்டடி என்று கூறிவிட்டு நண்பர்களின் அறையை தேடிச் செல்லும் பழக்கத்தையும் பெற்றோர் மிகுந்த அக்கறையுடன் கண்காணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..!