இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டிருந்த போதிலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் 25வருடங்களின் பின்னரே அது வடக்கு மக்களுக்கு கிடைக்கப்பெற்றதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நேற்றையதினம் (27) இடம்பெற்றன.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
சந்திரிகா அம்மையாரது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முற்றாக பூரணப்படுத்தக் கூடிய வகையில் கொண்டுவரப்பட்ட ஒரு திறமையான வரைபு எரிக்கப்பட்டது. அந்த வரைபை அன்று எதிரணியிலிருந்து எரித்தவர்களின் நிலைப்பாட்டை தவறென்று நான் கருதவில்லை. ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறும் தரப்பினரும் அந்த வரைபை அன்றைய எதிர்த்தரப்பினருடன் இணைந்து எரித்திருந்தனர். அதை அன்று நான் நேரில் காண்டேன்.
அதன்பின்னர் பல முயற்சிகள், யோசனைகள் வந்திருந்தபோதும், கடந்த ஆட்சியில் தமிழர்களுக்கு எல்லா உரிமையும் வருகின்றதென கூறி ஒன்றை கொண்டுவந்தார்கள். அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில் தீர்வு திட்டங்கள் நடைமுறையில் வருவதற்கான வாய்ப்புள்ளதா என்பதை நாம் ஆராய்ந்துகொள்ள வேண்டும்.
இதேவேளை இந்த 13ஆவது திருத்த சட்டத்தில் ஒரு முக்கிய விடயமும் இருக்கின்றது. அதை தமிழ் தரப்பினர்தான் கைநழுவ விட்டுள்ளனர் என்றே கருதுகின்றேன்.
25வருடங்களின் பின்னர் மாகாணசபை அதிகாரத்தை பெற்றுக்கொண்டவர்கள் அதன் அதிகாரத்தை கொண்டு என்ன செய்தார்கள்? அதன் அதிகாரத்தை வலுவாக்குவதில் என்ன பங்களித்தார்கள்?
வெறுமனே 440பிரேரணைகளை கொண்டுவந்து நிறைவேற்றியதை தவிர வேறென்ன செய்தார்கள்?. மாகாண சபையின் அதிகாரத்தை முழுமையாக கொண்டுவர என்ன முயற்சிகளை செய்தார்கள்? எதுவுமே இல்லை.
இது வடக்கின் ஆட்சியாளர்கள் கண்ட தோல்வி அல்லது தவறவிட்ட சந்தர்ப்பம் என ஒப்புக்கொள்ள வேண்டும். சரியானவர்களை அந்த மாகாண சபைக்கு தெரிவு செய்து சரியான வகையில் 13 ஆவது சட்டத்தில் உள்வற்றை உள்வாங்கி அதை எமக்கு ஏற்புடையதாக்கும் வல்லமை மட்டுமல்ல அதில் அக்கறையும் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. இதுவும் எமது தமிழ் மக்களின் தோல்வியாகவே காணப்படுகின்றது.