கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளை திரட்டும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்பதே அது. அப்பொறிமுறையானது மியான்மரில் சிரியாவிலும் அமைக்கப்பட்ட பொறிமுறைகள் போன்று இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.
மேலும் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு வரைந்த ஒரு கடிதத்தில் கேட்டிருந்தது போன்ற ஒரு பொறிமுறை அதுவல்ல என்றும் ஒரு குற்றச்சாட்டும் உண்டு. எனினும் அப்பொறிமுறையானது சான்றுகளை திரட்டுவதற்கான ஒரு கட்டமைப்பாக இயங்கும் என்று கூறப்பட்டது. கூட்டமைப்பு அதை ஒரு முக்கிய அடைவாகக் காட்டியது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த ஐநா கூட்டத் தொடரில் தனது வாய்மூல அறிக்கையில் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்படி பொறிமுறையானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து செயல்பட தொடங்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்பொறிமுறையானது எவ்வாறு கட்டமைக்கப்படும் என்பது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் சரியான விளக்கம் இருக்கவில்லை. அப்பொறிமுறை தொடர்பாக தெளிவற்ற தகவல்களே கடந்த ஓராண்டு முழுவதும் உலவி வருகின்றன. அது ஒரு பொறிமுறை என்று அழைக்கப்பட மாட்டாது என்றும் சான்றுகளை திரட்டுவதற்கான செயலகம் என்றே அழைக்கப்படும் என்றும் ஐநாவுடன் நெருக்கமாக செயற்படும் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகள் கூறின. அப்பொறிமுறைக்குள் மொத்தம் 13 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும், அது லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கக் கூடும் என்றும் முன்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அது ஐநா தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்படும் ஒரு பொறிமுறை என்றபடியால் அது ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் அலுவலகத்தில்தான் இயங்கும் என்று கூறப்படுகிறது. அதற்குத் தேவையான நிதியை ஒஸ்திரேலியாவும் பிரித்தானியாவும் வழங்கும் என்று தொடக்கத்திலிருந்தே கூறப்பட்டது. ஆனால் அந்த நிதி எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு வழங்கப்படவில்லை என்று இப்பொழுது கூறப்படுகிறது. எனினும் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் இருக்கும் அமைப்புக்கள் சில தரும் தகவல்களின்படி அப்பொறிமுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சீனா போன்ற இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அழுத்தங்களை பிரயோகித்து குறைத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் அப் பொறிமுறையின் பருமன் குறைக்கப்பட்டிருப்பதாக இப்பொழுது கூறப்படுகிறது. இது தொடர்பில் ஐநா வட்டாரங்களை மேற்கோள் காட்ட முடியவில்லை.
எனினும் அப்பொறிமுறையானது மனித உரிமைகள் ஆணையர் கடந்த செப்டம்பர் மாதம் தன் வாய்மூல அறிக்கையில் குறிப்பிட்டதுபோல கடந்த ஒக்டோபரில் இருந்து இயங்கத் தொடங்கவில்லை. அது ஆண்டு இறுதியில் இருந்துதான் இயங்கத் தொடங்கியது என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். மேலும் அதற்கு வழங்கப்பட்ட நிதி போதாது என்பதனையும் அவை ஒப்புக்கொள்கின்றன.இது தொடர்பாக அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட இலங்கை தொடர்பான ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. நிதிப்பற்றாக்குறை காரணமாக கட்டுப்பாடுகள் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தரும் தகவல்களின்படி, ஐநாவுக்கான நிதி பொதுவாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், அதிலும் குறிப்பாக மனித உரிமைகள் பேரவைக்கு போதியளவு நிதி கிடைப்பதில்லை என்றும், இது தொடர்பில் இம்முறை கூட்டத்தொடரில் ஆணையர் சுட்டிக்காட்டியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. கிளிநொச்சி மட்டக்களப்பு ஆகிய தமிழ்ப் பகுதிகளில் உள்ள யுனிசெப் அலுவலகங்கள் இந்த ஆண்டு இறுதியுடன் மூடப்பட இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் இலங்கைக்கு சார்பாக மேற்படி பொறி முறையைப் பலவீனப்படுத்தும் வேலையை சீனா ரஷ்யா போன்ற நாடுகள் செய்ய முடியும் என்பதனை
அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
அப்பொறிமுறையானது சுமார் 13 நிபுணர்களை கொண்டதாக இருக்கும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிந்திக் கிடைத்த தகவல்களின்படி அது ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்படும் என்றும் அதில் மூவர் தான் நிபுணர்கள் என்றும் இருவர் இன்ரப்பிரட்டர்கள் என்றும் கூறப்படுகிறது. அதாவது அது ஒப்பீட்டளவில் பலவீனமான ஒரு பொறிமுறையாக அமையப் போகிறது என்று அர்த்தம்.
இப்படி ஒரு பொறிமுறை வேண்டும் என்று தாயகத்தில் அதிகம் வலியுறுத்தியது விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சிகளின் கூட்டும், லண்டனை மையமாகக் கொண்ட பிரிஎப் அமைப்பும்தான்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொன்ற மூன்று கட்சிகளையும் ஐநா வை நோக்கி ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபட்டபொழுது மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி கூறியது விக்னேஸ்வரனின் கூட்டணியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம்தான். தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த கோரிக்கையின்பால் அதிகம் அக்கறை காட்டவில்லை. கிளிநொச்சியில் நடந்த மூன்றாவது சந்திப்பின்போது அக்கோரிக்கையை கஜேந்திரகுமார் நிபந்தனையோடு ஏற்றுக் கொண்டதனால் மூன்று கட்சிகளும் இணைந்து ஒரு கடிதத்தை வரைந்தன.
ஆனால் அக் கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டது போன்ற ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வில்லை. இது முதலாவது. இரண்டாவதாக, ஐநா மனித உரிமைகள் ஆணையர் கூறியதுபோல கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து அது இயங்கத் தொடங்கவில்லை. மூன்றாவதாக அப்பொறிமுறையானது முன்பு கூறப்பட்டது போல கனதியானதாக 13 நிபுணர்களைக் கொண்டதாக அமையவில்லை. ஏனெனில் நிதிப் பற்றாக்குறை காரணம் என்று கூறப்படுகிறது. நாலாவதாக, அப்பொறிமுறையானது இன்னமும் துலக்கமான விதங்களில் இயங்க தொடங்கவில்லை. அது தன்னுடைய வேலையை எப்பொழுது முடிக்கும் என்பதும் தெளிவாக தெரியவில்லை.
தமிழ் கட்சிகள் இது தொடர்பாக தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துவதில்லை. தமிழ் ஊடகங்களும் தெளிவுபடுத்துவதில்லை. கடந்த ஐநா தீர்மானத்தில் அப் பொறி முறை அறிவிக்கப்பட்டதிலிருந்தே அது தொடர்பில் குழப்பமான ஊர்ஜிதமற்ற தகவல்கள்தான் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
தமிழ்த் தரப்பு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஐநாவை ஓரணியாக அணுகவில்லை.ஒரே கட்டமைப்பின் ஊடாக அணுகவில்லை. ஒரு பொதுக்கட்டமைப்போ பொதுப் பொறிமுறையோ இல்லை. பிரித்தானியாவில் உள்ள பி.ரி.எஃப் போன்ற சில அமைப்புகள் ஐநாவுடன் நெருக்கமாக செயல்படுவதாகத் தெரிகிறது. அதேசமயம் ஐநாவை மையமாகக்கொண்டு ஒரு தமிழ் அமைப்பும் செயற்படுகின்றது. இவைதவிர தாயகத்திலுள்ள கட்சிகளும் ஐநாவுடன் தொடர்பில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட தாயகம் மற்றும் புலம் பெயர்ந்த தரப்பில் உள்ள அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு கிடையாது. ஒருவர் மற்றவரை அங்கீகரிக்கும் நிலைமையும் இல்லை.ஒருவர் மற்றவரை அனுசரித்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து செயற்படும் நிலைமை இல்லை.இதில் யார் ஐநாவில் தமிழ்மக்களின் மெய்யான அம்பாசிடர்? இம்மூன்று தரப்புகளையும் இணைத்து இயக்குவதற்கு பொருத்தமான தலைமைகளும் இல்லை.ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் ஒரே குரலில் ஒரே கட்டமைப்பாக இயங்குகிறார்கள். அவர்களிடம் ஒரு பொதுவான வேலைத்திட்டம் உண்டு. ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரல் உண்டு. முழு வளத்தையும் ஒரு மையத்தை நோக்கி அவர்கள் குவிக்கிறார்கள்.
இம்முறை ஜெனிவா கூட்டத் தொடருக்கு தமிழ் மக்கள் பக்கமிருந்து யாரும் போகவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்துக்கும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் ஐநாவுக்கும் இடையே உரையாடல் உண்டு. அது தவிர ஐநாவுக்கு கூட்டாக கடிதம் எழுதிய ஐந்து கட்சிகளின் கூட்டுக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் சேர்ந்த சில அதிகாரிகளுக்கும் இடையே கடந்த வாரம் ஒரு சூம் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இவை தவிர தமிழ்த் தரப்பில் இருந்து யாரும் இம்முறை ஐநாவுக்கு போகவில்லை.
மேலும், வழமையாக நடப்பதைப் போல பக்க நிகழ்வுகளும் இம்முறை அதிக தொகையில் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்த ஆண்டு 17 பக்க நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும், இந்த ஆண்டு அதை விடக் குறைவாகவே இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. நிதி உதவி வழங்குவோரின் தொகை குறைந்ததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஒருவித சோர்வான சூழ்நிலை காணப்படுவதாக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால் அரசுத் தரப்பிலிருந்து ஒரு பலமான தூதுக்குழு சென்றிருக்கிறது. அங்கே அவர்கள் மேற்சொன்ன பொறிமுறையை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார்கள். அப்பொறி முறை எப்படிப்பட்டது ? அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டது? அது எவ்வளவு காலத்துக்கு இயங்கும்? இப்பொழுது பொறிமுறையின் நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் விளக்கங்கள் இல்லை. ஆனால் அப்பொறி முறையை இல்லாமல் செய்யும் முனைப்போடு அரசாங்கம் திட்டமிட்டு தனது வளங்கள் அனைத்தையும் திரட்டிச் செயல்படுவது தெரிகிறது. ஜெனிவா கூட்டத் தொடருக்கு சென்ற அரச தூதுக்குழு நாடு திரும்பிய கையோடு ஒரு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன்படி நிலைமாறுகால நீதிக்குரிய அலுவலகங்கலான காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் மற்றும் இழப்பீடு நீதிக்கான அலுவலகம் ஆகிய இரண்டுக்கும் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது அரசாங்கம் ஜெனிவாவில் ஒப்புக்கொண்ட எதையோ செய்ய விழைகிறது என்பதனை இது காட்டுகிறதா? மேலும், தகவல்களைத் திரட்டுவதற்கான பொறிமுறைக்குரிய நிபுணர்களின் மொத்த எண்ணிக்கை குறைக்கப்பட்டமை என்பது அப்பொறிமுறையை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் வெற்றி பெறத் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறதா?