(மன்னார் நிருபர்)
(09-03-2022)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக ‘இலங்கையை பசுமையாக்கி மக்களை வாழ வைத்தல்’ எனும் திட்டத்தின் அடிப்படையில் மர நடுகை நிகழ்வு இன்று புதன்கிழமை (9) காலை 9 மணியளவில் மன்னார் துப்பாசி ஆலம் பகுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இடம்பெற்றது.
-எதிர் வரும் வருடம் இலங்கை சுதந்திரம் பெற்று 75 ஆவது வருடம் பூர்த்தியாகும் நிலையில் 2023 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் 75 லட்சம் மரங்களை நட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் முதலாவது நிகழ்வாக குறித்த மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, நீர்ப்பாசன பொறியியலாளர்கள், வனத்துறை அதிகாரி, விவசாய அமைப்பின் தலைவர், மாவட்ட விவசாய அமைப்புகளின் சம்மேளன தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட சுற்றாடல் மேம்பாட்டு அதிகாரி, தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் , உட்பட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.