வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் முதியோர்களின் நலவாழ்வு தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்ட முதியோர் சங்கத் தலைவரும் சிரோஷ்ட பிரஜையுமான சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் இழப்பிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அஞ்சலிக்கின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இறுதியா இடம்பெற்ற சபையின் விசேட அமர்வில் அன்னாருக்கு அ;ஞ்சலியைத் தெரிவிக்கும் முகமாக கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், அமரர் சுப்பிரமணியம் கனகராஜா அவர்கள் எம்மை விட்டுப் பிரிவடைந்துள்ளார். அவர் எமது பிரதேசத்தில் முதியோரின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு சிரோஷ்ட பிரஜைகளின் நலவாழ்விற்கான பல விடயங்களைச் சாதித்து இருக்கின்றார்.
வலிகாமம் கிழக்கில் சிரோஷ்ட பிரஜைகள் ரம்யமாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என தன் உடல் நலனையும் பாராது சிந்தித்துச் செயற்பட்ட ஓர் கல்வியாளர் ஆவராவார். சிறுப்பிட்டியில் முதியோர் சங்கத்தின் தலைவராக நல்ல பல காரியங்களை நிறைவேற்றியுள்ளார். அவர் சிரேஷ்ட பிரஜைகளின் நலவாழ்வு தொடர்பில் சகல அரச திணைக்களங்களுடனும் கடிதத்தொடர்பு வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகளைப் பேணியவர். சிறந்த ஆங்கிலப் புலமையும் கல்விப் புலமையும் மிக்க அதிபருமாவார்.
அவர் ஏற்கனவே சி.வை. தாமேதரம்பிள்ளை நற்பணி மன்றம் உள்ளிட்ட பல தாபனங்களினால் கௌரவிக்கப்பட்டவராவார். தான் ஒரு மூத்த பிரஜையாக இருந்து இள நிலையாளர்களை வழிநடத்தும் தன்னலமற்ற ஆளுமை அவரிடம் காணப்பட்டது.
பிரதேச சபையின் ஒவ்வொரு அபிவிருத்தி விடயத்திலும் அவர் அக்கறை கொண்டிருந்தார். தவிசாளரான எனக்கும் ஏனைய பல உறுப்பினருக்கும் அடிக்கடி வழிகாட்டல்களை தொலைபேசி ஊடாக வழங்கும் ஓர் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வலிகாமம் கிழக்கின் பொக்கிசத்தினையே நாம் இழந்திருக்கின்றோம்.
சின்னச்சின்ன மாற்றங்கள் பல முன்னேற்றங்களை எம்மிடத்தில் கொண்டு வரும் என அரச உத்தியோகத்தர்கள் முதல் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் வரையில் அவர் தெரிவித்து குறை நிறைகளைச் சுட்டிக்காட்டும் அவர் போன்ற பெரியவர்களை இழப்பது வேதனைக்குரியது.
முதியவர்கள் வாழும் போதே கௌரவமளிக்கப்பட வேண்டும் என பலதடவைகள் வலிகாமம் கிழக்கில் முதியோர் தினத்தினை வருடாவருடம் சிறப்புற நடத்தியவர். சிரேஷ்ட பிரஜைகளின் உரிமைக்காகவும் செயற்பட்டவர். சிரேஷ்ட பிரஜைகள் ஓய்வூதியர்கள் நாட்டுக்குச் சுமையாகக்கூடாது வளமாக அமையவேண்டும் என உழைத்த நல்ல மனிதரை இழந்துள்ளோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.