மன்னார் நகர பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் அதி கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை-நுகர்வோர் விசனம்.
(மன்னார் நிருபர்)
(09-03-2022)
மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் நகர பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நகர பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் சில பொருள்களில் குறிக்கப்பட்டுள்ள விலைக்கு மேலதிகமாக பணம் அறவிடப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கோதுமை மா,மிளகாய்த்தூள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்கள் பல இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் முட்டை ஒன்று 27 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மன்னார் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த வாரம் தலைமன்னார் பியர், பேசாலை, சிலாபத்துறை, முருங்கன் மற்றும் பண்டிவிரிச்சான் ஆகிய கிராமங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் முன்னெடுத்த திடீர் பரிசோதனையின் போது 12 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை காட்சி படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு பொருட்களை விற்றமை, காலாவதியான உணவுப் பொருட்களை விற்ற மை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக குறித்த 12 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டமை குறிப்பிடத்தக்கது.