(மன்னார் நிருபர்)
(08-03-2022)
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று திங்கட்கிழமை (7) இரவு சென்ற அரச பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை நானாட்டான் பஸ் தரிப்பு நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்காக நிறுத்திய போது பறித்துச் சென்ற இளைஞர் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
-குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,,,,
வவுனியா மெனிக்பாம் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் மன்னார் எழுத்தூர் பகுதியில் வசிக்கும் அவருடைய மகளிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு கொழும்பு பேருந்து மூலம் வவுனியாவுக்கு செல்வதற்காக மன்னாரிலிருந்து குறித்த பேருந்தில் பயணித்துள்ளார்.
அதே நேரம் குறித்த பேருந்தில் திருகோணமலையைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் முதியவரின் அருகிலிருந்து பயணித்துள்ளார்.
மன்னாரில் குறித்த பேருந்து நானாட்டான் பிரதேச பஸ் தரிப்பு நிலையத்தை சென்றடைந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்திய போது குறித்த முதியவர் வைத்திருந்த பணத்தை குறித்த இளைஞர் பறித்துக் கொண்டு பஸ்ஸில் இருந்து பாய்ந்து ஓடியுள்ளார்.
இந்த நிலையில் முதியவரின் கூச்சலை கண்ட அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் குறித்த திருடனை துரத்தி சென்று பணத்தோடு மடக்கி பிடித்தனர்.
-உடனடியாக முருங்கன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முருங்கன் பொலிஸாரிடம் பணத்தை திருடிய இளைஞரை இளைஞர்கள் ஒப்படைத்துள்ளனர்.
-உடனடியாக குறித்த இளைஞரையும், முதியவரையும் மேலதிக விசாரணைக்காக பொலிஸார் முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.