(மன்னார் நிருபர்)
(10-03-2022)
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) அனுசரணையில் மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தின் ஏற்பாட்டில் ‘நிலைபேறான எதிர்காலத்திற்காக இன்றே பால்நிலை சமத்துவத்திற்காக போராடுவோம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை 10 மணி அளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் மற்றும் சிறப்பு விருந்தினராக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறடோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தின் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேச செயலகங்களின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சட்டத்தரணி திருமதி புராதனி , பிரதேச ரீதியாக செயல்படும் பெண்கள் குழுவினரும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் பெண்கள் எதிர் நோக்குகின்ற பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் குடும்ப அடக்கு முறைகள் தொடர்பாகவும் அதில் இருந்து எவ்வாறு மீள்வது தொடர்பாகவும் தற்சார்பு பொருளாதாரத்தை கட்டி எழுப்பி ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டி எழுப்புவது தொடர்பாகவும் வருகை தந்த விருந்தினர்களால் சிறப்புரையாற்ற பட்டதோடு,சிறுவர்கள் மற்றும் பெண்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.