சென்னை அப்பலோ மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் உயிரிழந்தார். மருத்துவ செலவு 5 லட்ச ரூபாய் கட்ட சொன்னதால் உடலை மருத்துவமனையிலேயே உறவினர்கள் விட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பூர்பா மெத்திநாயு மாவட்டம், கரிஸ்கா புபா மெத்தினயூர் பகுதியை சேர்ந்தவர் சௌமன்ஆதக்(23). கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த சௌமனை அவரது உறவினர்கள் கடந்த மாதம் 26ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சௌமன்ஆதக் கடந்த 7ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவரது உறவினர்களிடம் சௌமன் உயிரிழந்த தகவலை தெரிவித்ததுடன், அவரது மருத்துவ செலவு 5 லட்ச ரூபாயை கட்டி விட்டு உடலை வாங்கி செல்லுமாறு தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ந்து போன உறவினர்கள் சௌமன் உடலை மருத்துவமனையிலேயே விட்டு சொல்லாமல், கொள்ளாமல் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புற்றுநோய் மருத்துவமனை மேலாளர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.