கவிஞர் தியாரூ
வலைதனில் சிக்கிய மீன்களுக் கெல்லாம்
விடுதலை வழங்கிட வேண்டும்!
இலையுதிர் காலத்தில் மரங்களுக் கெல்லாம்
பொன்னாடை கொடுத்திட வேண்டும்!
அலைகளின் தேடுதல் என்னென்ன என்று
அறிந்துநான் உதவிட வேண்டும்!
சிலைகளாய் நீள்நெடுங் காலமாய் நிற்கும்
சிலைகளுக்(கு) உயிர்தர வேண்டும்!
மண்சிறு குடில்களில் ஏங்குவோர்க் கெல்லாம்
மாளிகை நான்தர வேண்டும்!
கண்ணிழந் தாடிடும் கயவருக் கெல்லாம்
காலனாய் நான்வர வேண்டும்!
விண்ணுயர் ஆலயம் கோயில்கள் யாவும்
வறியோர்க்கு வீடாக வேண்டும்!
புண்ணிலா வாழ்வென மானுடம் ஓங்க
பெரும்பணி நான்செய வேண்டும்!
கானலும் என்விழித் தீண்டலில் நல்ல
கங்கையாய் மாறிட வேண்டும்!
கூனலும் கோணலும் என்னொரு சொல்லில்
குறைநீங்கிச் சீர்பெற வேண்டும்!
வானமும் பூமியும் என்கவி கேட்க
வாய்பார்த்து நின்றிட வேண்டும்!
ஞானமும் கானமும் செல்வமென் றாக
ஞாலமே கைகூப்ப வேண்டும்!
வற்றிய ஓடையின் தாகத்தைத் தீர்க்கும்
வான்மழை நானாக வேண்டும்!
பற்றிய சொந்தங்கள் யாவர்க்கும் நானோர்
பந்தலென் றாகிட வேண்டும்!
கற்றவை பெற்றவை யாவுமே ஞானக்
கலைகளாய்ப் பொலிந்திட வேண்டும்!
கொற்றவன் கோலென மாகவி என்றன்
எழுதுகோல் அரசாள வேண்டும்!