-மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை.
(மன்னார் நிருபர்)
(15-03-2022)
இலங்கை அரசானது ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து நீதியை நிலைநாட்ட தவறியுள்ளது. இதனால் இலங்கை கத்தோலிக்க திருச்சபை சர்வதேசத்தின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
அத்துடன் இறுதிப் போரில் நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கு நீதியை நிலை நாட்டாமல் சர்வதேசத்தின் கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக செயல்படும் ஓர் அரசாங்கமே இன்று ஆட்சியில் உள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் நினைவு கூறும் தவக்காலத்தில் ஒவ்வொரு மறைமாவட்ட ஆயர்களும் தங்கள் மறைமாவட்ட மக்களுக்கு தவக்கால திரு மடலை எழுதியுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட மக்களுக்கு எழுதியுள்ள திருமடலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
-குறித்த தவக்கால திருமடலில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
ஆட்சியாளர்களின் அசமந்தப் போக்கினால் அனைத்து மக்களும் ஆழ்ந்த அதிருப்தியிலும் ஏமாற்றத்திலும் உள்ளனர்.
ஆகவே பவுலடியாரின் கூற்றுப்படி இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய் தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும் உயர் நிலையில் உள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுவோம்.
அருளின் காலமாகிய தவக்காலத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் மீண்டும் காலடி பதித்துள்ள இவ்வேளையில் நாம் மனமாற்றம் பெறுவதற்கும் நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் திருமறையில் தெரிவித்திருப்பது போல் ‘இதுவே தகுந்த காலமாகும்’ ‘உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக’
நாங்கள் மட்டுமீறிப் பற்றுதல் களிலிருந்து விடுதலை பெற்று நிலையற்றவற்றில் மனதை ஈடுபடுத்தாது நிலையானவற்றில் மேன்மேலும் மனதைச் செலுத்துமாறு எங்களை தூண்டுகின்ற காலமே இவ் தவக்காலம் ஆகும்.
இத்தவக்காலத்தில் செபம், தவம், தான தருமம் ஆகிய மூன்றும் இன்றியமையாதவை. ஆகவே அவற்றை நோக்கி நம்மை இட்டுச் செல்ல வேண்டும்.
இந்நாட்களில் நம்மை நாமே புதுப்பிப்பதோடு மற்றவர்கள் மட்டில் நமக்குள்ள கடமைகள் பொறுப்புக்களையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
நம்முடன் வாழ்கின்றவர்களின் ஆன்மீக உலகியல் தேவைகள் மட்டிலும் நாம் அக்கறையும் கரிசனையும் காட்ட வேண்டும். இதைதான் இந்த ஆண்டுக்கான தவக்காலச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ரோமாபுரியில் உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவுள்ளது. ‘ஒரு கூட்டொருங்கியக்கத் திருஅவைக்காக ஒன்றிப்பு பங்கேற்றல் பணி’ என்ற கருப்பொருளில் அதற்கான ஆயத்தப் பணிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. இதில் மன்னார் மறை மாவட்டமும் ஈடுபடுத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
-மேலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் தனது தவக்கால திருமடலில் நாட்டின் இன்றைய சூழ்நிலை தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,,,
இலங்கை நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு விலைவாசி உயர்வு மின்சாரத் தடை போன்றவை சாமானிய மக்களை மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரையும் வெகுவாகப் பாதித்து வருகின்றன.
இது மட்டுமல்ல இலங்கை அரசானது ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து நீதியை நிலை நாட்ட தவறியுள்ளது.
இதனால் இலங்கை கத்தோலிக்க திருச்சபை சர்வதேசத்தின் உதவி நாட வேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
அத்துடன் இறுதிப் போரில் நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கு நீதியை நிலை நாட்டாமல் சர்வதேசத்தின் கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக செயல்படும் ஓர் அரசாங்கமே இன்று ஆட்சியில் உள்ளது.
இவ்வாறு ஆட்சியாளர்களின் அசமந்தப் போக்கினால் அனைத்து மக்களும் ஆழ்ந்த அதிருப்தியிலும் ஏமாற்றத்திலும் உள்ளனர். என குறித்த திருமடலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.