சமூக ஆர்வலர்கள் விசனம்
(மன்னார் நிருபர்)
மன்னார் மாவட்டம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (10) வியாழக்கிழமை மதியம் தொடக்கம் வீதி முழுவதும் வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஒரு புரம் வரிசையில் காத்திருக்க மறுபுரம் கேஸ்,மற்றும் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று வருகின்றனர்.
தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்ற போது மன்னார் நகர சபை இவற்றைக் கணக்கில் கொள்ளாது வீண் களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதே நேரம் கொரோனா தொற்றும் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் அதிகளவான மக்களை ஒன்று கூட்டும் விதமாக மன்னார் நகர் மத்திய பகுதியில் களியாட்ட நிகழ்வுக்கு மன்னார் நகரசபை அனுமதி வழங்கியுள்ளது.குறித்த விடயம் குறித்து சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் சைனா பஜார் வளாகம் மற்றும் பேருந்து நிலையம் முழுவதும் ஒலிபெருக்கிகளை பொருத்தி களியாட்ட நிகழ்வு இடம் பெற்று வருகின்ற நிலையில் அதன் எதிர் பகுதியில் மக்கள் பெற்றோலுக்காகவும் மண்ணெண்ணெய்கவும் வரிசையில் நிற்கும் அவலம் மன்னாரில் அரங்கேறி வருகிறது.