மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா
(மன்னார் நிருபர்)
(17-03-2022)
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அரசு தெரிவித்துள்ள கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு, 12 வருடங்களாக நாங்கள் நஷ்டஈட்டை பெற்றுக் கொள்ள போராடவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று வியாழக்கிழமை (17) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
-நாங்கள் அன்று முதல் இன்று வரை கூறிக்கொண்டு வருகிறோம் எமக்கு நஷ்டஈடு தேவை இல்லை என்று. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் குறித்து எங்களுக்கு நீதி தான் தேவை.அரசாங்கம் தரும் நிதி தேவை இல்லை.
இவ்வாறான சலுகைகளை தந்து தாய்மார்களின் போராட்டத்தையும் ஏக்கங்களையும் திசை திருப்ப இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
-எமது உறவுகளின் உயிர் அரசுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியாக இருக்கலாம்.ஏன் என்றால் அவர்கள் தான் எம் உறவுகளை பிடித்துக் கொண்டு சென்று சித்திரவதை செய்துள்ளனர்.எங்களினால் எமது உறவுகளை விலை மதிக்க முடியாது.எங்கள் உயிர் எமது பிள்ளைகள்.
-நாங்கள் பிச்சை எடுத்தாவது ஒரு லட்சம் இல்லை பல லட்சத்தை எமது உறவுகளுக்காக தருகின்றோம். இந்த அரசாங்கம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
நாட்டில் இன்று எத்தனையோ பிரச்சினைகள் தலை தூக்கி உள்ளது. ஒரு நேர உணவு உண்பதற்கு உணவு பொருட்கள் தட்டுப்பாடு , டீசல் பெட்ரோல் உட்பட எரிபொருள் தட்டுப்பாடு. ஒரு இறாத்தல் பாணின் விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த மக்கள் இலங்கையில் வாழ்வதா? அல்லது சாவதா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
-இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் அரசால் எவ்வாறு எமக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முடியும்?
சர்வதேச ரீதியில் மீண்டும் மீண்டும் கடன்களை பெறுவதற்காகவும் ஜெனிவாவில் நடை பெறும் மனித உரிமை சார்ந்த இலங்கை விடயங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் அரசாங்கம் கபட நாடகம் ஆடுகிறது.
அதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ற உண்மையை மட்டும் எம்மிடம் கூறுங்கள்.
அரசாங்கத்தின் கபடத்தனத்தை இனி மேலும் எந்த ஒரு தாய்மாரும் நம்ப போவதில்லை.
நீங்கள் எமக்கு தருவதாக கூறிய ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வைத்து தற்போது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணவு தட்டுப்பாடு களையும் எரிபொருள் தட்டுப்பாடு களையும் நிவர்த்தி செய்து இலங்கையில் மக்கள் பஞ்சம், பசி பட்டினி , இல்லாமல் வாழ்வதற்கு உரிய வழிமுறைகளை செய்து கொடுங்கள்.என அவர் மேலும் தெரிவித்தார்.