கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அது இருபதாம் திகதிக்குப்பின் இடம்பெறலாம் என்று தெரிகிறது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான டெலோ கலந்து கொள்ளப் போவதிவில்லை என்று அறிவித்திருந்தது. அதற்கு டெலோ ஒருவிளக்கக் கடிதத்தை ஏற்கனவே அனுப்பியிருந்தது.
பதவியேற்றதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கோத்தாபய கூட்டமைப்போடு பேசப்போவதாக இடைக்கிடை கூறிவருகிறார். ஆனால் இன்றுவரையிலும் பேச்சுவார்த்தைகள் நடக்கவில்லை. இம்முறை பேச்சுவார்த்தை கடைசிவேளை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. முன்னைய அழைப்புக்களைப் போலன்றி இம்முறை பேச்சுவார்த்தை மெய்யாகவே நடக்குமாக இருந்தால், ஜனாதிபதி அவ்வாறு பேசமுன்வருவற்கு சுட்டிப்பாக பின்வரும் காரணங்கள் இருக்க முடியும்
இலங்கைத்தீவு மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்கியிருக்கிறது. அதற்கு பிரதியுபகாரமாக திருகோணமலையில் சம்பூரில் மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டம் ஒன்றை நிறுவுவதற்கு ஒரு இந்திய நிறுவனத்துக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. அது போலவே மன்னாரிலும் பூநகரியிலும் இருவேறு மின்சக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானிகுழுமத்துக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
அதாவது இந்தியா கடனைக்கொடுத்து கொழும்பின் மீது தனது பிடியை இறுக்கிவருகிறது. இதன் விளைவாக இந்திய அரசாங்கத்தை திருப்திப்படுத்த வேண்டிய ஒருநிலைமை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கலாம். குறிப்பாக இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கம் என்ன கேட்கிறது? 13வதுதிருத்தத்தை அடிப்படியாக வைத்து ஒரு தீர்வை வழங்குமாறு கேட்கிறது. உடனடிக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டுமென்றும் கேட்கிறது. எனவே இதுவிடயங்கள் தொடர்பாக தமிழ்த்தரப்புடன் ஒரு சமரசத்துக்கு வருவது போன்ற ஒரு தோற்றத்தை காட்டவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு.
மேலும், இம்மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்குபற்றுறுவதற்காக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் கொழும்புக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. இந்திய பிரதமர் மோடியும் கொழும்புக்கு வரக்கூடும் என்ற ஊகங்கள் அதிகமாக உள்ளன. அவர் இந்தியாவில் இருந்து நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வருவார் என்றும் பலாலி விமானநிலையத்தில் இறங்குவார் என்று ஊககங்கள் உண்டு. ஆனால் இந்தியா தனது பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயத்தை இன்று வரையிலும் உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கவில்லை.
இலங்கைத்தீவின் வடபகுதியோடு இந்தியாவை இணைக்கும் மூன்று அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா ஏற்கனவே முன்மொழிந்தது. பலாலி விமான நிலையம், காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கு இடையிலான படகுப்போக்குவரத்து, மூன்றாவது யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ள கலாச்சார மண்டபம். இதில் பலாலி விமான நிலையம் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் அவருடைய பதவிக்காலம் முடியும் கடைசி நேரத்தில் அவசர அவசரமாகத் திறக்கப்பட்டது.
அடுத்த தேர்தலில் ராஜபக்சக்கள் வெல்லகூடும் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியில் இந்தியாவின் தூண்டுதலால் ரணில் அவ்வாறு அவசர அவசரமாக பலாலி விமான நிலையத்தை திறந்தார் என்று அப்பொழுது கருதப்பட்டது. அது ஒரு மிகச்சிறிய விமான நிலையம். உள்ளூர் போக்குவரத்துக்குரிய வசதிகளைத்தான் கொண்டிருக்கிறது.
70 பயணிகள் பயணம் செய்யக்கூடிய சிறிய விமானங்கள் தான் அதில் வந்து இறங்கலாம். எனவே விமான நிலையத்தை அடுத்தகட்டத்துக்கு விஸ்தரித்து பன்னாட்டு விமானச் சேவைகளை தொடங்கவேண்டும் என்று இந்தியா எதிர்பார்த்தது. அதற்கு வேண்டிய நிதியையும் இந்தியா வழங்கக்காத்திருக்கிறது. ஆனால் பெருந்தொற்று நோயைக்காரணம் காட்டி கோத்தாபய அரசாங்கம் விமானநிலையத்தை திறப்பதை தொடர்ந்துஒ த்திவைத்து வருகிறது.
கடந்த ஜனவரிமாதம் 10ஆம் திகதி அந்த விமான நிலையம் மறுபடியும் இயங்கத்தொடங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்படி பலதடவை அறிவிக்கப்பட்டுவிட்டது.
இலங்கை அரசாங்கம் அந்த விமானநிலையத்தை விஸ்தரிக்கும் திறப்பதற்கும் பின்னடிக்கின்றது. ஏனெனில் பலாலி விமானநிலையம் அமைந்திருப்பது இலங்கைத் தீவின் வடபகுதி இராணுவ தலைமையகத்தில் ஆகும். வடபகுதி படைத்துறை கட்டமைப்பின் இதயமான பகுதியில் ஒரு விமான வழியைத்திறப்பது என்பது அதன் தர்க்க பூர்வ விளைவுகளைப் பொறுத்தவரை ராணுவமய நீக்கம் தான். ஏனெனில் ஒரு படைக்கட்டமைப்பின் கேந்திரமான இடத்தில் சிவில் போக்குவரத்தை அனுமதிப்பது என்பது அவ்வாறான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். எனவே இந்தவிடயத்தை இலங்கை அரசாங்கம் தன் படைத்துறை நோக்கு நிலையிலிருந்தே பார்க்கும். அதனால் தான் விமான நிலையத்தை விஸ்த்தரிப்பதற்கும் திறப்பதற்கும் பின்னடிக்கிறது.
அடுத்தது காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல்சேவை. இதுவிடயம் தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டு கொம்பனிகளுக்கு இடையே ஓர் உடன்படிக்கை எழுதப்பட்டது. அதற்குத் தேவையான பெரியகப்பல்கள் இப்பிராந்தியத்தில் இல்லை என்றும் அவைபிராந்தியத்துக்கு வெளியிலிருந்து வாடகைக்கு எடுக்கப்படும் என்றும் துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அவ்வாறான படகுச்சேவை ஒன்றை தொடங்குவதற்கான வர்த்தக உடன்படிக்கை ஒன்று இலங்கை மற்றும் இந்திய கொம்பெனிகள் இரண்டுக்கிடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம்எ ழுதப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை மிகவும் பாராட்டி பாரதிய ஜனதாவின் தமிழ்நாடு முக்கியஸ்தரான வானதி சீனிவாசன் தனது ருவிட்டரில் ஒருகுறிப்பை போட்டிருந்தார். அவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் கூட.
அக்கப்பல் சேவையை எதிர்பார்த்து காரைக்கால்துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. கப்பல் சேவையைதொடங்குமாறு தமிழ் தேசிய நிலைப்பாட்டைக்கொண்ட கட்சிகள் மட்டும் கேட்கவில்லை. அரசாங்கத்தோடு நிற்கும் வியாழேந்திரன் போன்றவர்களும் கேட்கின்றார்கள். கடந்த ஆண்டு வியாழேந்திரன் பாண்டிச்சேரிக்கு ஒரு விஜயத்தை மேற்கொண்டார். அங்கே வைத்து அவர் ஊடகவியலாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கம் அவ்வாறான கோரிக்கை முன்வைக்குமாறு வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்ட அரசியல்வாதிகளை ஊக்குவித்துவருகிறதா?
ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு இன்றுவரை உடன்படவில்லை. பலாலி விமான நிலையத்துக்கு சொன்ன அதே காரணம் இதற்கும் பொருந்தும். ஏனெனில் காங்கேசன் துறை என்பது வடபகுதி ராணுவபடைக் கட்டமைப்பின் கேந்திரமான இடத்தில் காணப்படும் ஒரு துறைமுகம் ஆகும். அதை சிவில் போக்குவரத்துக்கு திறந்துவிட்டால் அதுவும் நீண்டகால நோக்கில் அப்பகுதியை ராணுவமய நீக்கம் செய்துவிடும். எனவே இலங்கை அரசாங்கம் அதற்கு பின்னடிக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருவதாக இருந்தால் மேற்கண்ட திட்டங்களை அவற்றின் அடுத்தகட்டத்திற்கு நகர்த்துமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்பாரா?
அதற்கு இலங்கை அரசாங்கம் சாதகமான சமிக்கைகளைகாட்டாது என்ற ஒரு எதிர்பார்ப்பிருந்தால், மோடி இலங்கைக்கு வருவாரா?
மோடியின் வருகை ஜெய்சங்கரின் வருகை போன்றன இன்று வரையிலும் ஊகங்கள் தான். ஆனால் நெருக்கடி காலத்தில் இந்தியா இலங்கைக்கு கடன் கொடுக்கிறது. அதற்கு பிரதியுபகாரமாக இலங்கை எதையாவது செய்யவேண்டும். அந்த அடிப்படையில் கூட்டமைப்பை ஜனாதிபதி அழைத்திருக்கலாம்.
இரண்டாவதாக ஐநாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஒருதகவல் திரட்டும் பொறிமுறை உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா தீர்மானத்தின்படி இப்பொறிமுறை உருவாக்கப்படவிருக்கிறது. இப்பொறிமுறை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளை திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான சீனாவும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் மேற்படி பொறிமுறையை பலவீனப்படுத்தும் விடயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருப்பதாக கருதப்படுகிறது. அப்பொறிமுறையின் செயற்படு காலம் முன்பு ஒரு வருடம் என்று அறிவிக்கப்பட்டது. இப்பொழுது ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் அங்கத்தவர் எண்ணிக்கை முன்பு 12 என்று கூறப்பட்டது.
இப்பொழுது எட்டாகக்குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொறிமுறையைத்தரம் குறைப்பதில் இலங்கையும் அதன் நண்பர்களும் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். அதோடு உள்நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மேலும் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருதொகுதி கைதிகளை விடுதலை செய்திருக்கிறது. நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு புதிதாக நிதியை ஒதுக்கி அவைவினைத்திறனோடு செயற்படுவதாக ஒருதோற்றத்தையும் கட்டியெழுப்பி வருகிறது. இவற்றின் மூலம் ஐநாவைச் சமாளிக்கலாம் என்று அரசாங்கம் நம்புகின்றது.
இந்த அடிப்படையில் தான் கூட்டமைப்பை சந்திப்பது என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நல்லிணக்கத்துக்கு தயார் என்று ஒரு செய்தியை அவர் ஐநாவுக்கும் வழங்கலாம், இந்தியாவுக்கும் வழங்கலாம். எனவே இப்போது இருக்கும் நெருக்கடிகளின் பின்னணியில், இந்தியாவையும் ஐநாவையும் சமாளிக்கும் நோக்கத்தோடு கோத்தாபய கூட்டமைப்பை சந்திக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். அனைத்துலக அரங்கில் நெருக்கடிகளைக் குறைப்பதே அவருடைய இந்த அழைப்பின் நோக்கம்.
ஆனால் நாட்டுக்கு வெளியே அவர் நெருக்கடிகளை தணிக்க முயற்சித்துக்கொண்டிருக்க, நாட்டுக்குள்ளேயோ நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. அந்த நெருக்கடி காரணமாகத்தான் கூட்டமைப்புடனான புதன்கிழமை சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.