(மன்னார் நிருபர்)
(16-03-2022)
ஒருவருக்கு கஷ்டம் வருகின்ற போது யார் வந்து தக்க தருனத்தில் உதவிகளை செய்கிறார்களோ அது தான் நட்புக்கு அழகு.அந்த உதவியையே தக்க தருனத்தில் இந்திய அரசு மன்னார் மீனவர்களுக்கு தற்போது மேற்கொண்டுள்ளது என இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன் தெரிவித்தார்.
இந்திய அரசின் உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு பொதிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (16) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
நட்பு என்பது ஒருவருக்கு கஷ்டம் வருகின்ற போது யார் வந்து தக்க தருனத்தில் உதவிகளை செய்கிறார்களோ அது தான் நட்புக்கு அழகு.தாய் ஒருவர் தனது குழந்தையின் தேவையை யாரும் கூறாமல் எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறுதான் இந்த உதவியும் அமைகின்றது.
-தற்போது கொரோனா காலமாக இருக்கலாம்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.இந்த நேரத்தில் குறித்த உதவி தக்க தருனத்தில் செய்ய வேண்டி உள்ளது.
-இன்றைய நிகழ்வு ஒரு ஆரம்பமே.முதலீட்டிற்கும்,வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும் குறிப்பாக மீனவ சமூகத்தின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
-அவற்றை சமீப காலத்தில் நிறைவேற்ற இருக்கின்றோம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார் ஆகிய மாவட்டங்களில் குறித்த உதவியை மீனவ சமூகத்திற்கு வழங்கி உள்ளோம்.இதே போன்று முல்லைத்தீவிலும் வழங்க உள்ளோம்.எமது கருத்துக்கள் மேடைப் பேச்சாக இருக்காது.
எமக்கு பக்க பலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருக்கின்றார். அவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் திணைக்கள தலைவர்கள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.