– கொழும்பில் இருந்து மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ்.
13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஆறு தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளன. தமிழர் தரப்பைப் பொறுத்து இதனைத்தவிற வேறு தெரிவு ஏதும் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. மனித உரிமைப் பேரவையில் இந்தியாவின் பதில் இதற்குச் சாதகமானதாகவே உள்ளது. இது ஆறு தமிழ்க் கட்சிகளுக்குக் கிடைத்தவெற்றியாகவே கருதவேண்டியுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தம்
தமிழர்களின் அரசியல் பரப்பில் 13 வது அரசியலமைப்பு திருத்தம் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகின்றது. குறிப்பாக ஆறு தமிழ்க் கடசிகள் கூட்டாக இந்திய மத்திய அரசாங்கத்திடம் வைத்துள்ள கோரிக்கை குறித்தே இந்தக் கருத்தாடல்கள் இடம்பெற்றுவருகின்றன.
இதில் விசித்திரம் என்னவெனில் பிராந்தியசபையாக உருவெடுத்த தமிழர் விவகாரத்துக்கான தீர்வு தனிநாட்டுக் கோரிக்கையாக எழுச்சி பெற்று தன்னாட்சி அதிகாரசபையாகவும் இறுதியில் ஒஸ்லோ உடன்படிக்கையில் சமஷ்டி தீர்வு குறித்து பரிசீலிக்க தமிழர் தரப்புதயாரான நிலையில் இன்று 13வது திருத்தத்தை தமிழர் தரப்புகையில் எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதுதான்.
போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ் மக்களை முழுமையாக தலைமையேற்று புறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையில் நோர்வே உட்பட இணைத் தலைமை நாடுகளை சமஷ்டி கோரிக்கையில் இருந்து மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வலியுறுத்தி இருக்கவேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அதனைச் செய்யத் தவறியது மாத்திரமல்ல தீர்வுப் பொதி இன்றிவெறும் கையுடன் தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்றுவெறும் கையுடனே திரும்பியதுதான் வரலாறு.
இந்த ஒரு பின்னணியில் இன்று 13 வது திருத்தத்திற்காக இந்தியாவிடம் மண்டியிட்டு நிற்கவேண்டியநிலையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக் கட்சியின் சுய நலஅரசியல் இட்டுச் சென்றுள்ளது.
13 வதுதிருத்தம் குறித்துபேசப்படுகின்ற போதும் இந்தியாவை நேக்கிய ஆறு கட்சிகளின் கோரிக்கை கடிதம் 13 வது திருத்தத்துக்காப்பாலும் விரிவாக்கம் பெற்றுநிற்பதாக கூறப்படுகின்றது.
உண்மையில் தமிழர் தரப்பில் 6 கட்சிகள் இணைந்து ஒரு கோரிக்கையை வைத்திருப்பது ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்தவரையில் மூலோபாய முக்கியத்துவமுடையது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
– ஈழப் போரும் இந்தியாவும்
ஈழப் போர் முழு அளவில் எழுச்சிபெற இந்தியா வேகாரணம் என்பது பரம இரகசியமல்ல.
இதற்கும் அப்பால் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்தை கையாள தமிழர்தரப்பை இந்தியா ஒரு கருவியாகப் பயன்படுத்தியது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
இந்த ஒரு பின்னணியில் தமிழ் கூட்டுக் கட்சிகளின் கோரிக்கை தமிழர் தரப்பின் மீதான நம்பிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டிய பாரியபொறுப்பை இந்தியா மீது சுமத்தியுள்ளது.
– 1987 ஒப்பந்தம்
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும் இடையில் 29.07.1987 அன்று இந்திய இலங்கை உடன்படிக்கைகைச் சாத்தாகியது.
இந்திய இலங்கை உடன்பாட்டில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சுருக்கமாக பின்வருமாறு:
- 1986ம்ஆண்டில்இந்தியமற்றும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவாத்தைகளின் அடிப்படையில் மாகாணசபைகளுக்கு அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
2.வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைந்த ஒரே மாகாண நிர்வாகமாக அமைக்கப்படுதல் வேண்டும்.
- மாகாணசபை செயற்படத் தொடங்கி ஓராண்டுக்குள் கிழக்கு மாகாணத்தில் ஓர் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு இணைந்த மாகாணங்கள் தொடர்ந்து இணைந்திருப்பதா அல்லது தனித்தனியாவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.
- இலங்கை – இந்திய உடன்பாட்டிட்கு அமைவாக சட்டவடிவம் கொடுக்கும்போது இலங்கை அரசு எடுக்கும் முயற்சி குறித்து இந்திய அரசுடன் கலந்தாலோசித்தே முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
- இலங்கை அரசு கொண்டு வரவுள்ள சட்டங்கள் குறித்து முன்னதாகவே இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தி அதன் சம்மதத்தைப் பெறவேண்டும்.
- சட்டமுன் வரைவுகள் இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தி இந்திய அரசின் சம்மதம் பெறப்படல் வேண்டும்.
- அத்துடன் இரு சட்டவரைபுகள் பகிரங்கமாக வெளியிடப்படல் வேண்டும்.
- இலங்கை இந்திய உடன்பாட்டில் 2ஆம் பகுதியில் 15வது பிரிவில் வரையறுக்காது விட்டுப்போன உரிமைகள் குறித்து இலங்கை இந்திய அரசுகள் கலந்தாலோசித்தே முடிவுகளை மேற் கொள்ளவேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.
13 வதுதிருத்தச் சட்டம்
இலங்கை இந்திய உடன்படிக்கையை அடுத்து 1988 இல் 13வது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது.
- இலங்கைமீறியவிதிகள்
வடக்குக் கிழக்குக்கென உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டம் வடக்குக் கிழக்குக்கு அப்பாலும் விஸ்தரிக்கப்பட்டது. இதன் மூலம் 8 மாகாண சபைகளை 13வது திருத்தச்சட்டம் மூலம் ஜேஆர் ஜயவர்தனா உருவாக்கினார். சிங்களவர்கள் தனி மாகாணம் கோரவில்லை. ஆனால் சிங்களவர்களுக்கும் சேர்த்தே மாகாண சபைகளை ஜேஆர் உருவாக்கினார்.
அதாவது தமிழர்களுக்குத் தீர்வாக 13வது திருத்தத்தை வழங்க இலங்கை அரசு விரும்பவில்லை என்பதை மிக அழுத்தமாக இந்தியாவுக்கும் தமிழர்களுக்கும் உணர்த்த ஜேஆர் விரும்பியதன் விளைவே இது.
- இலங்கை இந்திய உடன்பாட்டில் 2ஆம் பகுதியில் 15வது பிரிவில் வரையறுக்காது விட்டுப்போன உரிமைகள் குறித்து இலங்கை இந்திய அரசுகள் கலந்தாலோசித்தே முடிவுகளைமேற் கொள்ளவேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்குமாறாக இலங்கை அரசு தன்னிச்சையாக சட்டங்களை நிறைவேற்றியது.
- வடக்குக் கிழக்கு இணைப்பை நிர்வாக உத்தரவின் மூலமே ஜே.ஆர். ஜயவர்தனா மேற் கொண்டிருந்தார். இதனை மற்றொரு உத்தரவின் மூலம் ரத்துச் செய்யமுடியும். ஏனெனில் இந்த இணைப்பிற்கு சட்டரீதியான பாதுகாப்பு இல்லை. எனவே தான் ஜேவிபி உச்சநீதிமன்றத்தை அணுகி வடக்குகிழக்கு இணைப்பு சட்டரீதியில் செல்லுபடியற்றது என்ற தீர்ப்பைப் பெற்றது.
- அதிகாரப்பரவலாக்கள் என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட மாகாணசபைகள் குறித்த சகல அதிகாரங்களும் இலங்கை நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக வடிவமைக்கப்பட்டன.
- தமிழ் மக்களுக்கானஅரசியல் தீர்வுக்கெனதனி மாகாணம் அமைப்பது என்ற உடன்பாடே காணப்பட்டது. ஆனால் ஜேஆர் சிங்களவர்களுக்கும் அதிகாரப்பகிர்வாக மாகாணசபைகளை உருவாக்கினார்.
- வடக்குகிழக்கு இணைந்த மாகாணங்களுக்கான தேர்தல் 1988 அக்டோபரில் இந்திய இராணுவத்தின் மேற்பார்வையில் நடைபெற்றது.
- 1990 இல் இந்தியப் படை வெளியேறியது
- 2006 அக்டோபரில் ஜே.வி.பி உச்சநீதிமன்றில் தொடுத்த வழக்கின்படி வடக்கு கிழக்கு இணைப்பு செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.
- இந்தத் தீர்ப்புக்குப்பின் அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்பட்டது.
– தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்குக் கடிதம்
1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையாக வரவேற்றது.
– எனினும் இலங்கை – இந்திய உடன்பாட்டிற்கு சட்டபூர்வமான வடிவம் கொண்டுவருவதற்காக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இரு சட்டங்கள் குறித்து தங்களது அவநம்பிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் சிவசிதம்பரம் செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் துணைத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் கூட்டாக அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது
- இலங்கை – இந்தியஉடன்பாட்டிட்கு அமைவாக சட்டவடிவம் கொடுக்கும் போது இலங்கை அரசுஎடுக்கும் முயற்சி குறித்து இந்திய அரசுடன் கலந்தாலோசித்தே முடிவுகளை மேற்கொள்ளவேண்டும்.
- இலங்கை அரசு கொண்டு வந்த சட்டங்கள் குறித்துமுன்னதாகவே இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தி அதன் சம்மதத்தைப் பெறவேண்டும்.
- சட்டமுன் வரைவுகள் இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தி இந்திய அரசின் சம்மதம் பெறப்படல் வேண்டும்.
- அத்துடன் இரு சட்டவரைபுகளும் பகிரங்கமாக வெளியிடப்படல் வேண்டும்.
ஆனால் இலங்கை அரசு எதுவுமே செய்யாது தன்னிச்சையாக செயற்பட்டுள்ளது என்று தமிழர் விடுதலைகக் கூட்டணியினர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
– இந்தியாமௌனம்
- தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து இந்திய அரசுக்கு கடிதம் முலம் அறிவித்தபோதும் இந்தியஅரசுகணக்கில் எடுக்கவில்லை.
- 2006 இல் ஜே.வி.பி உச்சநீதிமன்றில் தொடுத்த வழக்கின் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பு சட்டப்படி செல்லாது என தீர்ப்புவழங்கியது.
இந்த விடயத்தில் இந்திய அரசு தலையிடவில்லை. இந்திய இலங்கை உடன்பாட்டுக்கு எதிரான செயல் என இந்திய அரசு கண்டிக்கவும் முன் வரவில்லை.
- அரசியல் சட்டபூர்வமாக வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டுமென இந்திய அரசு வற்புறுத்தவும் இல்லை.
- பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பின் வந்த இந்திய அரசுகளும் தமிழர் விவகாரத்தில் உரிமைகளைக் காக்கமுன்வரவில்லை.
- இலங்கை இந்திய உடன்படிக்கையை இலங்கை அரசு அப்பட்டமாக மீறியதை கண்டிக்கவில்லை. ஏன் கண்டுகொள்ளவும் இல்லை.
- ஆனால் தற்போதும் 13 வது திருத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழ்த் தலைமைகளை இந்தியா வற்புறுத்துகின்றது.
- மறுபுறம் இந்திய அரசின் முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்கள் இலங்கையில் என்ன நடைபெறுகின்றது எனபதை முற்று முழுதாக மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் இருந்தும் இலங்கைத் தமிழ் மக்கள் தரப்பில் இருந்தும் எழுப்பப்படுவதை இங்குகுறிப்பிடுதல் பொருந்தும்.
– தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையை அடுத்து
1 இலங்கை அரசு இலகுவில் இந்திய நகர்வுகளுக்கு வளைந்து கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
இலங்கை அரசாங்கம் மேற்படி கோரிக்கைக்கு எதிரான நகர்வைத் தொடங்கிவிட்டது.
3 பொருளாதார பொதி குறித்து இந்திய மத்திய அரசுடன் பேசத் தொடங்கிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழமை போல் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
4 இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட அதிகாரப் பகிர்வு அல்ல அபிவிருத்தியையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று இந்திய நாளிதலுக்கு வழங்கியுள்ள செவ்வியில் கூறியுள்ளார்.
5 நாட்டில் டொலர் பற்றாக் குறை. எரிபொருளுக்கு தட்டுப்பாடு நீண்டவரிசை என நாடே வரிசையில் நிற்கின்றது.
– ஆனால் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது
– வடக்குக் கிழக்கில் குடியேற்றங்கள் மும்முரமாக இடம்பெறுகின்றன.
– மகாவலி தொல்லியல் என பல திணைக்களங்கள் தாயகக் கோட்பாட்டை சிதறடிக்க களம் இறக்கப்பட்டுள்ளன.
– புதிய அரசியலமைப்பு வரைபு துரித கதியில் நடைபெறுகின்றது.
– மொத்தத்தில் தமிழர்களுக்கெதிரான நிகழ்ச்சி நிரல்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எவ்வித தடங்களுமின்றி துரித கதியில் முன்னெடுக்கப்ப்படுகின்றன.
6 தமிழர் விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு முழு வீச்சில் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது.
7 அரச இயந்திரம் உட்பட அணைத்து தென்னிலங்கைசக்திகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழர் விவகாரத்தில் ஓரணியில் செயற்படுகின்றன.
8 இலங்கை தரப்புக்கு டெல்லியில் தூதரகம் மாத்திரமல்ல செல்வாக்கு செலுத்தக் கூடியநபர்களையும் கொண்டுள்ளது.
– அமைதிகாத்த இந்தியா
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கப்பால் இலங்கையின் செயற்பாடுகள் அமைந்தபோதும் மூன்று தசாப்தங்களுக்கு மேல் அமைதிகாத்த இந்தியா மறுபுறம் தமிழர் விவகாரத்திற்கு 13வது திருத்தமே தீர்வு என தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றது.
13 வது திருத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இந்தியா இலங்கையுடன் தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றவோ அல்லது இன விவகாரத்துக்கான தீர்வை வழங்கவோ இன்று வரை முடியவில்லை .
அதே வேளையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக இலங்கையை ஏற்றுக் கொள்ளுமாறு வைக்கவும் முடியவில்லை. இதுவரை இலங்கை இலங்கை இந்திய ஒப்பந்தத்தையோ அது பிரசவித்த 13வது திருத்தத்தையோ ஏற்றுக் கொண்டதாகவும் இல்லை.
மறுபுறம் இறுதிக்கட்டபோரில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட போது அதில பார்வையாளராக மட்டுமன்றி பங்காளராகவும் இருந்து இந்தியா செயற்பட்டது என்ற குற்றச் சாட்டு தமிழர்தரப்பில் உள்ளது.
தமிழ் மக்களை பகடைக் காயாகவைத்துக் கொண்டு பிராந்திய அரசியலில் இலங்கையை தொடர்ந்தும் கையாளும் நிலையானது தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாரிய இடைவெளிக்கு இட்டுச்சென்றுவிடும் என்பது இந்தியா அறியாததல்ல. அந்தவகையில் ஆறு கட்சிகளின் கூட்டுக் கோரிக்கைபந்தினை இந்தியாவின் கைகளில் கொடுத்துள்ளது.
இந்திராகாந்தி அம்மையார் பிரதம மந்திரியாக இருந்தபோது இலங்கை விவகாரத்தில் சைப்ரஸ் அணுகுமுறையைக் கொண்டிருந்ததாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி 1984 இல் குறிப்பிட்டிருந்தார்.
மொத்தத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம் இந்தியா இலங்கை சீனா ஆகிய முத்தரப்பின் கைகளில் சிக்கியுள்ளது. இந்த முத்தரப்பிற்குள்ளும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வெளிநாடுகள் அபிப்பிராயம் கூறலாம். ஆனால் முடிவினை மேற்கொள்வது இந்தியாவின் கைகளிலேயே தங்கியுள்ளது.
அப்படியானால் ஆறு கட்சிகளின் கூட்டுக் கோரிக்கைக்கு இந்தியா எவ்வாறு பதில் அளிக்கப் போகின்றது?
- 1987 ஒப்பந்தப்படியான சரத்துக்களுக்கு அமைவான தீர்வையா?
- அல்லது இலங்கை அரசாங்கத்தால் திருத்தப்பட்டு சிதைக்கப்பட்ட 13ஜயா?
- அல்லது புதியவடிவிலான 13ஜ உருவாக்கியா இந்தியா தீர்வு வழங்கப் போகின்றது?.
- அல்லது இதனை வைத்துக் கொண்டு இன்னொரு பேரத்தை இலங்கையுடன் இந்தியா தொடங்கப் போகின்றதா?
- அல்லது நோர்வே பாணியில் இந்தியத் தலைமையில் மேற்குலக கூட்டுடன் இன்னொரு பேச்சுவார்த்தைக்கான களத்தை இந்தியாதிறக்கப் போகின்றதா?.
- அல்லது அரசியல் விமர்சகர்கள் கூறுவது போன்று தமிழர் விவகாரத்தைக் கையாள்வதற்கு சிறப்புத் தூதுவரை நியமிக்க உள்ளதா?
மேற் கூறியகேள்விகளுக்கான பதில்கள் இந்தியா வழங்க உள்ள பதிலிலும் ராஜதந்திர நகர்விலுமே தங்கியுள்ளது.
இந்தியாவின் நகர்வை மூன்று விடயங்கள் தீர்மானிக்கவல்லன.
1.பூகோள அரசியல்.
சீனாவின் பிரசன்னத்தால் கொதி நிலையில் உள்ள தென்னாசிய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு கண்டாக வேண்டும்.
- இந்திய பொருளாதார நலன்களைப் பாதுகாத்தாகவேண்டும்
- தமிழ் மக்களின் மனங்களைவென்றெடுக்க குறைந்த பட்சம் இலங்கையில் மோசமடைந்து கொண்டுபோகும் தமிழர்களின் நிலையை தடுத்து நிறுத்தித் தமிழ் மக்களைப் பாதுகாத்தல்.
- இன விவகாரத்துக்கான தீர்வினைக் காணுதல்.
- மேற் கூறியவிடயங்களுக்காக இலங்கையைக் கட்டுக்குள் வைத்தல்.
ஆனால் இந்தியாவுக்கு இந்த விடயங்கள் இலகுவாக இருக்கப் போவதில்லை.
1.தமிழர் தரப்புபலமானதாக இல்லை. 6 கட்சிகளின் கூட்டு ஒரு நெல்லிக்கனி மூட்டை. எவ் வேளையிலும் பிதுங்கி வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போதே தமிழரசுக் கட்சி தனிஓட்டத்தைத் தொடங்கிவிட்டது.
- இலங்கையின் இராஜதந்திரத்தக்கு ஈடு கொடுக்கும் வல்லமைபடைத்தவர்கள் அல்ல தமிழ்த் தலைமைகள் என்பது உண்மையாயினும் அதற்கு இந்தக் கூட்டு தம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்
- இந்தியத் தூதுவரிடம் கடிதம் கையளித்துள்ளனரே தவிற இந்தக் கோரிக்கைகளுக்காக தமிழகத்திலோ டெல்லியிலோ செல்வாக்கு செலுத்தும் வகையில் அரசியல் நேச சக்திகள் இல்லை. டெல்லியில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு சக்தி படைத்தவர்களாக தமிழ்த் தலைமைகள் இல்லை என்பதும் உண்மையே.
5.அதே வேளையில் இலங்கை அரசியலில் இணக்க அரசியல் நடத்தும் அணி இன்று பலம் பொருந்தியதாக உள்ளது.
நடத்தும் அணி இன்று பலம் பொருந்தியதாக உள்ளது.
மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பிறகான இன்றைய தமிழர் அரசியலின் தலைவிதி முற்று முழுதாக இந்தியாவின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதுவே இன்றைய யதார்த்தம்.
இன்றைய நிலையில் தமிழ்த் தலைமைகளின் விருப்பு வெறுப்புகளுக்கப்பால் அவர்களுக்கு மீட்பரும் மேய்ப்பரும் இந்தியாதான்.
இதனை உணர்ந்தால் ஆறு கட்சிகளும் திறந்துள்ள கடிதக் களம் எந்தளவுக்கு முக்கியமானது என்பது புலனாகும்.