கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் கடந்த 15 ஆம் திகதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தவிர்க்கமுடியாத காரணத்தினால் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு ஓத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து எதிர்க்கட்சியினர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக இச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இருதாரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் நடைபெறும் என்று எதிர்பார்த்தபோதும் அது நடைபெறவில்லை. ஜனாதிபதி கோத்தபாயாவின் அழைப்புக்கா தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு காத்திருந்த நாட்கள் அதிகம்.
கடந்த 2021 ஆண்டு ஆனிமாதமளவில்கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் இறுதி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டது என்பதைவிட இரத்து செய்யப்பட்டது என்பதே உண்மை. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஜனாதிபதியுடன் மிக நெருக்கமான தெற்கு அரசியல்வாதிகளின் வலியுறுத்தல் காரணமாகசந்திப்பு இரத்துசெய்யப்பட்டதாக தகவல் வெளிக்கொண்டுவரப்பட்டது.
சாண் ஏற முழஞ்சறுக்குவதுபோல் இந்த திகதியும் சறுக்கியிருக்கிறதாக கூறப்பட்டாலும் ஆரிடத்தார் கூறுவதுபோல் இராகுவும் கேதுவும் ஒன்றாக சந்திப்பதற்குஇன்னும் நேரம்கைகூடப்போலவில்லை.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நாளிலிருந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைப்பார் என்று பல தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டபோதும் அந்த காரியம் இதுவரை கைகூhடாத நிலையில்தான் இலங்கைக்கு அண்மைக்காலமாக கொடுக்கப்பட்டுவரும் அழுத்தம் காரணமாகவே கூட்டமைப்பை அழைத்து பேசும் முடிவுக்கு அரசாங்கம் வந்துள்ளது என்ற கருத்து விமர்சன முறையில் எடுத்துக்கூறப்படுகிறது.
மனிதவுரிமைப்பேரவையால் ஏற்படுத்தப்பட்டுவரும் மறைமுக அழுத்தம,; இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ்க்கட்சிகளால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி (24.2.2022)ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணி அபகரிப்புக்கு எதிராக நடத்திய போராட்டம், நாட்டின் இறுக்கமான பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றை சமாளிக்கும் விதத்தில் இந்த அழைப்பை ஜனாதிபதி கூட்டமைப்புக்கு விடுத்திருக்கலாம் என்பது பொதுவான கருத்தாக கருதப்படுகிறது.
ஆனால் இந்த சந்திப்புத் தொடர்பில் புலம்பெயர் அமைப்புக்கள்தாயக பற்றாளர்கள் கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் இன்னும் தமிழ்த்தேசியத்தை முன்னிலைப்படுத்தும் கட்சியை சார்ந்தவர்கள் திருப்தியான அல்லது ஆர்வமான தமது சமிஞ்சையை காட்டவில்லை. ஏன்றே கூறலாம். காரணம். அரசுடனான பேச்சுவார்த்தை என்பது வெறும் ஏமாற்று நாடகமாவும் காலம் கடத்தும் செப்படி வித்தையாகவும் இருப்பதனால் இந்த வெறுப்பை அல்லது எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிகட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைபின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அண்மையில் கடிதமொன்ற எழுதியிருந்தார் அக்கடிதத்தில் “ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு நாம் அவசரப்படவேண்டியதில்லை. துற்போதைய சூழலில் ஏற்பட்டுள்ள உள்ளுர், சர்வதேச நெருக்கடிகளை தவிர்த்துக்கொள்வதற்காகவே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ளது ஆகவே சந்தித்து எமாறவேண்டாம்”; என்ற அவநம்பிக்கையோடு இக்கடிதத்தை அனுப்பிருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.
இதேவேளை புலம்பெயர் சமூகத்தின் சார்பில் பிரித்தானியாவிலிருந்து ஓர் அமைப்பு தமது கருத்தை பதிவு செய்தபோது கூட்டமைப்பினர் ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்பு
- ஜனாதிபதி என்ன நிகழ்ச்சி நிரலின்கீழ் பேச அழைக்கிறார். ஏன்பது தெளிவு படுத்தப்படவேண்டும்.
- ஜனாதிபதி பதவியேற்ற காலத்திலிருந்து மேற்கொண்டுவரும்காணிசுவீகரிப்பு பௌத்த சின்னங்களின் விஸ்தரிப்புக்களைஉடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- பல வருடங்களாக அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்கவேண்டும்.
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைக்கு உடன்தீர்வு வழங்க செயற்படவேண்டும்.
- பயங்கரவாத தடைச்சட்டம் உடன் நீக்கப்படவேண்டும்.
- 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
- காத்திரமான அரசியல் தீர்வு கொண்டுவரப்படவேண்டும்.
இவற்றை நடை முறைப்படுத்தும் உறுதி மொழியை ஜனாதிபதி தருவதாக நம்பினால் பேச்சு வார்த்தைக்கு செல்லுங்கள் இல்லையேல் இலங்கை ஜனாதிபதி கோத்தபாயாவின் பொறிக்குள் விழுந்துவிடவேண்டாம். அழைப்பை மறுபரிசீலனை செய்யுங்கள். என்று அந்த அமைப்பு தமது கருத்தை பதிவு செய்திருப்பதோடு இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பை ஏதேதோ காரணங்காட்டி இழுத்தடிப்பு செய்துவிட்டு ஜனாதிபதியின் அழைப்பை கனம்பண்ணி விழுந்தடித்து ஓடவேண்டுமா? என கேள்வி எழுப்பியிருக்கிறது அந்த அமைப்பு.
ஆனால் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள்“பேச்சுவார்த்தைக்கான கதவு திறக்கப்படும்போது அச்சந்தர்ப்பத்தினை கை நழுவ விட்டுவிட முடியாது. தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வினை அழுத்தமாக வலியுறுத்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் நடை பெறுகின்ற முதலாவது பேச்சுவார்த்தையாக இது அமையப்போகிறது. ஞாயமான கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. சந்தர்ப்த்தை
இது தொடர்பில் பங்காளிக்கட்சியானபுளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் விசனங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறதே இதுபற்றி தங்கள் கருத்தென்ன என்று வினவியபோது அவர் தெரிவித்த கருத்து.
“மக்களின் அபிப்பிராயத்தில் ஞாயம் இருக்கலாம் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்; தமிழ் தலைமைகளுடன் பேசுவதற்கு ஜனாதிபதி கடந்த இரண்டுவருடங்களாக ஆர்வம் காட்டவில்லை என்பது உண்மைதான் ஆனால் தற்போது பேச அழைத்திருக்கிறார் என்றால் அவர் தானாக முன்வந்து பேச அழைக்கவில்லை. சூழ்நிலை அவ்வாறு அமைக்கப்படடிருக்கிறது.
“தங்களுடனான பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கி தாருங்கள் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஏலவே கடிதம் எழுதியிருக்கிறார். இதுதவிர இன்னொரு முக்கிய விடயம் தமிழ்த்தேசியப்பரப்பிலுள்ள அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அண்மையில் (24.2.2022)ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடாத்தினோம்.அந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதியை சந்திக்கவேண்டுமென்ற கோரிக்கையை நாம் முன் வைத்திருந்தோம்.
இவை ஒருபுறமிருக்க சர்வதேசம் என்ன கூறுகிறது இலங்கை ஜனாதிபதிக்கு நாம் அழுத்தம் கொடுத்துவருகிறோம் தமிழ்க்கட்சிகளுடன் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் என்று அதேவேளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் முன்வந்து இலங்கைப்பிரச்சனையை பேசி முடிப்போம் என்று சர்வதேசமோ இந்தியாவோ கூறவில்லை இதுதான் உண்மை. ஆனால்அவர்களுடைய அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி தற்போது தமிழ்த்தரப்பினருடன் பேச முன்வந்துள்ளார் என்பது பகிரங்கமாக தெரிந்தவிடயம்.
மிகநீண்ட காலத்துக்குப்பின் அண்மையில் இந்தியா இலங்கை அரசாங்கத்தை நோக்கி ஒரு அழுத்தத்தை பிரயோகித்துள்ளது 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் என்று” இவ்வாறு ஒரு சாதகமான சூழ் நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நாம் தவற விட முடியாது.
பலப்பட்டிருக்கிறோம். அதுதான் பேச உடன்பட்டோம்”. என சித்தார்த்தன் தனது கருத்தை தெரிவித்தார்.
சித்தார்த்தனும் கூட்டமைப்பின் தலைமைகளும் இத்தகைய கருத்துக்களை கொண்டிருந்தாலும் பங்காளிகட்சியான ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தரப்பினர் திட்டவட்டமாக தாம் இச்சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டோம் எனவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள மார்ச் 25 ஆம் திகதி சந்திப்பில் கலந்து கொள்வதா இல்லையா? என்பது பற்றி ரெலோவின் மத்தியகுழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுமென அடித்துக்கூறியுள்ளனர். ரெலோ அமைப்பு மிக நீண்டகாலமாகவே கூட்டமைப்புடன் ஒருமித்து பயணித்துவரும் ஒருகட்சி என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
இவையெல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கிறபோது சந்திப்பு தொடர்பில் கூட்டமைபினருக்கிடையில் ஒருமித்த கருத்து உண்டாக்கப்படவில்லை என்பது மட்டுமன்றி தமிழ்த்தேசியப்பினருக்கிடையில் நேரொத்த கருத்துக்கள் இல்லை என்பது புலனாகிறது. இதற்குரிய வரலாற்று காரணங்கள் பலவுள்ளன என்பது மறைமுகமாக உணர்த்தப்படுகிற விடயமாக இருக்கலாம். உதாரணமாக
இலங்கை சுதந்தரம் அடைந்த காலத்திலிருந்து இலங்கை அரசாங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் வட்டமேசை மகாநாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அரசியல் மயப்பட்ட பேச்சுவார்த்தைகள் சந்திப்புக்கள் ஆகிய எவையுமே முற்பயனும் தரவில்லை பிற்பயனும் தரவில்லை என்பதுதான் உண்மை. இந்த யதார்த்தமே மக்களுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் பேச்சுவார்த்தை தொடர்பான வெறுப்பையும் விரக்தியையும் தந்து நிற்பதற்கான காரணங்களாக இருக்கலாம்.
2011 ஆம் ஆண்டு மஹிந்தராஜபக்ஷ அரசாங்கத்துடன் கூட்டமைப்பு 18 தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கிறது. முடிவில் என்ன நடந்தது ? ஆதியும் காணாமல் அந்தமும் காணாமல் அரசாங்கத் திட்டமிட்டமுறையில் பேச்சுவார்த்தையை தானாகவே முறித்துக்கொண்டது.
யுத்தம் முடிவுற்ற காலத்தில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாங்கிமூனும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைக்கு முறையான தீர்வை வழங்குவோம் என இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு என்ன நடந்தது?. 1983 ஆம் ஆண்டு இடம் பெற்ற திம்பு பேச்சுவார்த்தை, 1989 ஆம் அண்டு ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் வரையப்பட்ட மங்கள முனசிங்க தீர்வு ஆலோசனைகள், 2000 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார்காலத்தில் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட தீர்வுப்பொதி, 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் மற்றும் நிபுணர் குழு நியமனம் அதன் சிபார்சுகளும் 2016 ஆம் அண்டு ஜனாதிபதி மைத்தரிபாலசிறிசேன நல்லாட்சி கால அரசியல் நிர்ணசபை விவகாரங்கள் இவை அனைத்துக்கும் என்ன நடந்தது ?
இதற்கு அப்பால் விடுதலைப்புலிகள் காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோருக்கிடையில் நடந்த உடன்படிக்கை, 2003 ஆண்டுகளில் இடம்பெற்ற பிரான்ஸ்சுவீஸ் நோர்வே மற்றும் யப்பான் போன்ற நாடுகளில் இடம் பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகள், எல்லாமே அர்த்தமற்றவகையில் இத்துப்போனது. இந்த தோல்விகள் பற்றிய மக்களின் அவநம்பிக்கைகளே பேச்சுவார்த்தையென்று உச்சரிக்கப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் மக்கள் வெறுப்படைவதும் விரக்தியுறுவதும் அரசியல் தலைமைகள் நம்பிக்கை இழப்பதும் வழமையாகிவிட்டது.
துமிழ் மக்களின் பொதுவான எதிர்பார்ப்புக்களின் மத்தியில் பேச்சுவார்த்தை என்ற பதம் அருவருப்புக்குரியதாகவும் அவநம்பியுடையதாகவும் மாறிப்போனமைக்கு கடந்த கால வரலாற்று அனுபவங்களே காரணமாக இருக்கின்றன.
குறிப்பாக இன்றைய ஆட்சியாளர்களுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ் மக்கள் தங்கள் விசனங்களை வெளிப்படுத்துவதற்கு காரணமாக இருப்பவை ஆட்சியாளர்களின்; குறிப்பாக ஜனாதிபதியவர்களின் உதாசீனப்போக்கும் சிறுபான்மை சமூகத்திமீது அவரால் கட்டவிழ்த்துவிடப்படுகிற ஜனநாயக தன்மை மீறிய அரசியல் அதிகாரப்பிரயோகங்களுமாகும்.
கடந்த மூன்று வருடங்களாக ஜனாதிபதியின் இராணுவ மயமாக்கும் போக்குக்கள். தொல்லியல் அகழ்வாராட்சிகள், வனவிலங்கு பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு என்ற போர்வையில் தற்போது இடம் பெற்றுவரும் காணி சூறையாடல்கள், காணமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் கரிசனைகாட்டாமல் மூடிமறைப்புசெய்தல், அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் உதாசீனமாக நடந்து கொள்ளல், யுத்த காலத்திலும் அது மௌனித்த காலத்திலும் மரணித்த சிவில் சமூகம் மற்றும் ஊடகத்துறையினரை குடும்ப உறுப்பினர்களை நினைவு கூறுவதை தடுப்பதும் அவர்களை கைது செய்வதும், தமிழ் மக்களை அவர்தம் காணிகளில் மீளக்குடியேற விடாது தடுப்பது கலாசர மையங்கள் பௌத்த விஸ்தரிப்புக்கள் இராணுவ விஸ்தரிப்புக்கள் என்ற வகையில் குடியிருப்புக்காணிகள் மத தலங்களுக்குரிய நிலங்களை கையகப்படுத்தல் என்ற நிகழ்ச்சி நிரல்களை அமுல்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள். அரசாங்கத்தின் அடாவடித்தனங்களை படம் பிடித்து காட்டுவனவாக இருக்கின்றன என்று எடுத்துக்கூறப்படுகிறது.
இவை அனைத்துக்கும் அப்பால் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வழிமுறைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் உதாசீனப்படுத்துவதும் யுத்தகால குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் என்பவற்றை ஏற்றுக்கொண்டு பொறுப்புக்கூறும் விடயத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் போன்ற பல்வேறு செயலாட்டங்கள் தற்போதைய அரசாங்கத்தின்மீது சர்வதேச சமூகத்துக்கும் உள்ளுர் மக்களுக்கும் நம்பிக்கை குறைவை ஏற்படுத்தியிருப்பதனாலையே பேச்சுவார்த்தை என்ற வாசகம் தமிழ் மக்களுக்கு புளிச்சுப்போன வார்த்தைகளாக காணப்படுகிறது.
அண்மையில் இந்தியாவுக்கு சென்று நாடு திரும்பியுள்ள வெளிவவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் ஜனாதிபதி அவர்கள் தமிழ்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறியிருப்பதுடன் இந்தியப்பிரதமருக்கு கடிதம் அனுப்பலாம் அதைவிட எங்கள் பிரச்சனையை எங்கள் நாட்டிலையே தீர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் கூறியிருப்பது எந்தளவுக்கு சாத்தியமானது என்பதை சந்திப்பின் முடிவில்தான் தெரிந்து கொள்ள முடியும்.
கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் விமர்சனங்கள் விசனங்கள் முரண்பாடுகள் வெளிப்படுத்தி காட்டப்பட்டாலும் காலத்தின் நியதி கருதி கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு அவசியமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அச்சந்திப்பு பயனற்றதாக போகுமாயின் அது நீண்டகால அபகீர்த்தியை உண்டாக்கிவிடும் என்பதை சந்திப்பாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதை மாற்றும் வகையில் ராஜதந்திரங்களை கையள்வதில்தான்தமிழ் மக்கள் மத்தியில் எதிர்கால நம்பிக்கைகளை ஊட்ட முடியும்.