களத்திலிருந்து நேரடியாக–நிறைவுப் பகுதி
நடராசா லோகதயாளன் &சிவா பரமேஸ்வரன்
வரலாறு என்பது வாழ்க்கை பாடத்திற்கான ஒரு கண்ணாடி.
காலங்காலமாக ஆட்சியாளர்கள் சந்தித்த சவால்கள், செய்யத் தவறிய செயல்கள், மதவாதிகளின் கைப்பாவையகச் செயல்பட்டு நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறந்தள்ளியது, அதனால் அவர்கள் எதிகொண்ட புரட்சிகள், அடைந்த தோல்விகள், பின்னர் தமது வாழ்நாட்களுக்கு பிறகும் அவமானச் சின்னமாக பார்க்கப்படுவது போன்ற பல விஷயங்களை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. அதுமட்டுமின்றி வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்வதற்கான பாதையையும் அது காட்டுகிறது.
ஆனால், தவறான கொள்கை மற்றும் அனைத்தும் யாமரிவோம் என்ற மமதையில் மக்களின் துன்பங்களைத் துச்சமாக மதித்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்; அதிலும் குறிப்பாக இலங்கை 30 ஆண்டுகளுக்கும் மேலான போரை எதிர்கொண்டவர்கள் இதை நன்றாகவே அறிவார்கள்.
இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் போது, இருவரை பற்றிய நினைவு வந்தது. இருவரும் மன்னர்கள் ஆனால் வீழ்ந்தவர்கள். ஒருவர் இத்தாலியின் நீரோ மன்னன் மற்றொரு பிரான்ஸின் மன்னர் 16 ஆம் லூயி ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் (வயலின்) வாசித்து கொண்டிருந்தான் என்பது, நாடு குறித்து அக்கறை கொள்ளாத அரசன் பற்றி இடித்துரைக்கும் ஒரு செலவடையாகும். ஆட்சியிலிருந்த நீரோ மன்னனின் அராஜகங்கள் உலகமறிந்தது. கொடுங்கோல் ஆட்சிக்கு ஒரு உதாரணமான நீரோ மன்னனுக்கு என்ன நடந்தது என்பது வரலாறு. 30 ஆண்டுகளே வாழ்ந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோன்று அண்மைக்காலத்தில் -சுமார் 230 வருடங்களுக்கு முன்னர்- பிரான்ஸை ஆட்சி செய்த 16 ஆம் லூயி சீராகவும் சிந்தனையின்றியும் ஆட்சி செய்து, தான் செய்த அரசியல் குளறுபடிகள் காரணமாக மக்களின் எதிர்ப்பு மற்றும் புரட்சியை எதிர்கொள்ள முடியாமல் தப்பித்து ஓடி பின்னர் பிடிக்கப்பட்டு, 39 வயதில் அதே மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்கள் இருவரும் அடிப்படையில் செய்த ஒரே தவறு, மக்களின் துன்பங்கள் மற்றும் துயரங்களை புரிந்துகொள்ளாமல், தாம் நினைத்ததே சரியென்ற வகையில் ஆட்சி நடத்தியதே. அதுமட்டுமின்றி இருவரும் முக்கியமாக கத்தோலிக்க மதகுருமார்களின் பிடியில் இருந்தார்கள்.
இவர்கள் ஆட்சி நடத்திய காலகட்டத்தில் மக்களின் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தனர். இருவருக்கும் அடிப்படையில் ஒரு ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்கிற அரசியல் முதிர்ச்சியிருக்கவில்லை.
தற்போது இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்குக் காணப்படும் கடும் தட்டுப்பாடு, அன்றாட பயன்பாட்டிற்கான பொருட்களுக்காக கூட மக்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருக்கும் நிலை, நாட்டின் நாணயத்தின் மதிப்பு தொடர்ச்சியாக அதலபாதாளத்திற்குச் சென்றுகொண்டிருப்பது, இறக்குமதிகளை செய்து மக்களுக்கு பொருட்கள் கிடைக்க வழிசெய்வதற்கு டொலர்கள் கையிலில்லை, பன்னாட்டுச் சந்தையில் கடனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை, ஆகியவை நாடு முழுவதும் மக்களை அவல நிலைக்குத் தள்ளியுள்ளது; அதிலும் குறிப்பாக தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் நிலைமை இன்னும் மோசமாகவுள்ளது.
தமிழர் பிரதேசங்களில் மக்களின் நிலையை அறிந்துகொள்ள உதயன் விரிவான கள ஆய்வுகளை முன்னெடுத்து பலருடன் உரையாடியது.
அராலியை சேர்ந்த யஸ்ரின் யூட்சன் (வயது 38) ஒரு கட்டடத் தொழிலாளி. இன்றைக்குள்ள சந்தை நிலவரத்தை அவர் பகிர்ந்துகொண்டார். “980 ரூபாவிற்கு விற்பனை செய்த சீமேந்து தற்போது ஆயிரத்து 830 ரூபா, 800 ரூபா விற்பனை செய்த கம்பி ஆயிரத்து 900 ரூபா, 400 ரூபா விற்ற மார்பிள் ஒன்று ஆயிரத்து 300 ரூபா அதாவது ஒரு சதுர அடி கட்டுமானத்திற்கு 4 ஆயிரத்து 300 ரூபா கடந்த ஆண்டு செலவானது ஆனால. தற்போது 7ஆயிரத்து 500 ரூபாவிற்கும் முடியவில்லை. இதனால் அனைவரும் கட்டுமானத்தையே கை விடுகின்றனர். இதனால் எமக்கான தொழில் வாய்ப்பும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. இதனால் வீட்டு உரிமையாளர்களிடம் சென்று வேலையை கேட்டால் என்று இந்த அரசு மாறுகின்றதோ அன்று வேலைக்கு வாங்கோ என்கின்றனர் இதனால் என்ன செய்வது என்றே எமக்குப் புரியவில்லை“ என்றார்.
இதேநேரம் சாவகச்சேரி கல்வயல் பகுதியில் ஓர் உணவகத்திற்கு இடியப்பம் அவித்து வழங்கும் `காணாமல்போன போராளி ` ஒருவரின் மனைவி, “எத்தனை நாட்களிற்கு அடுத்தவரின் கையை எதிர்பார்க்க முடியும் என்பதனால் இந்த தொழில் மூலம் வாழ்வாதாரத்தை நடாத்தினோம். அதிலும் நெருக்கடி- எரிவாயு இல்லை, மண்ணெண்னெய் இல்லை, அரிசி, மாவு நாள் ஒரு விலை என்பதனால் என்ன நிலைமையெனக் கூறவே முடியவில்லை“
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியில், போரில் தமது கணவரை இழந்து தனியொரு ஆளாக குடும்பத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள் சூழலோ மிகவும் மோசம். கிளிநொச்சியில் வசிக்கும் ஒரு பெண்மணி போரில் கணவரையும், தனது ஒரு கண்ணையும் இழந்தவர். யுத்தம் முடிந்த சில ஆண்டுகளுக்கு அவருக்கு புலம் பெயர் உறவுகள் உதவி புரிந்தனர். தற்போது அவையும் கிடைப்பதில்லை என்று அவர் `உதயனிடம்` தெரிவித்தார். அவருடைய இரு பெண் பிள்ளைகளும் வளர்ந்து ஒருவர் உயர்தரம் மற்றவர் சாதாரணம் எனக் கல்வி கற்கும் நிலைமையில் கல்விச் செலவிற்கே 25 ஆயிரம் ரூபா அவருக்கு வேண்டும். தற்போது ஓர் புத்தக கடையில் சிட்டை எழுதுநராக பணியாற்றுவதால் மாதம் 15 ஆயிரம் ரூபா கிடைக்கிறது இந்தப் பணம் பிள்ளைகளின் கல்விச் செலவிற்கே போதாது ஏனெனில் 120 ரூபாவிற்கு விற்பனையான கொப்பிகள் தற்போது 230 ரூபாவிற்கும் பெற்றுக்கொள்ள முடியவில்லை, 10 ரூபா விற்ற கோவை மட்டை 30 ரூபா, 2 ரூபாவிற்கு விற்ற பேப்பர் 5 ரூபா என்பதனால் மாணவர்களின் கல்விக்கான செலவே மிக அதிகமாகவுள்ளது என்கிற யதார்த்த சூழலில் அவரை போன்றவர்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
சுய தொழில் செய்பவர்களின் நிலை இப்படியென்றால், அரச சேவைகளில் உள்ளவர்களின் நிலையோ சொல்லவும் முடியவில்லை மெல்லவும் முடியவில்லை என்பதாகவே உள்ளது.
ஆசிரியர் ஒருவரின் உள்ளக் குமுறல்: “நான் வர்த்தக ஆரிசிரியர் என்ற ரீதியில் நாட்டின் பொருளாதார முறைமையும் ஓரளவு புரியும் ஆசிரியர்களிற்கு 43 ரூபா சம்பளம் வழங்கப்பட்ட நிலைமையில் விசேட கொடுப்பனவு 5 ஆயிரமும் சம்பள சீராக்கம் 12 ஆயிரம் என 60 ஆயிரம் ரூபா பெறும் என்னால் 5 பேரைக் கொண்ட குடும்பத்தை கொண்டு நடாத்த முடியவில்லை. ஏனெனில் பொருட்கள் யாவும் காலையில் ஒரு விலை மாலையில் ஒரு விலை 200 ரூபாவாக இருந்த டொலர் ஒரே தடவையில் 230 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏற்படும் செலவினமும் பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கும். இதேநேரம் டொலரின் வெளிச் சந்தை விலை 300 ரூபாவினையும் எட்டும் நிலையில் உள்ளது. 60 ஆயிரம் ரூபா சம்பளம் எடுத்து வரும் அன்றே கடனிற்குப் பொருள் வாங்கிய பணம், பிள்ளைகளின் டியூசன் காசு, மருத்துவச் செலவு எனச் செலுத்தினால் 10 தினங்களின் பின்பு வீதியில் செல்லவே வெட்கமாக உள்ளது என்றார்“.
அரசு கூறுவது போன்று தனியே நெருக்கடி நிலைமையினாலோ அல்லது டொலர் இன்மையாலோ மட்டும் பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை மாறாக திட்டமிடல் தவறின் காரணமாகவே அதிக பணம் தற்போதும் வீணடிக்கப்படுகின்றது. உதாரணமாக எந்த பொருட்களுடன் கப்பல் துறைமுகத்திற்கு வந்தாலும் அன்றோ அல்லது மறுநாளோ இறக்கப்படுவது கிடையாது மாறாக ஒரு வாரம் 10 நாள்கள் கழித்தே இறக்கப்படுகின்றது. இதனால் கப்பல்களிற்கு நாள் ஒன்றிற்கு தாமத கட்டணம் 15 ஆயிரம் டொலரை அரசு வீணாக செலுத்துகின்றது. கேட்டால் லொலர் இல்லை என்ற ஒற்றைப் பதிலே கிடைக்கின்றது.
அரசின் தவறான பொருளாதார கொள்கையும் நீண்டகால அடிப்படையில் திட்டமிடாததுமே நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்குக் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பு பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமுர்த்தி அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் டொலர் விலை நிர்ணயமே என்கிறார்.“ டொலர் வெளிச் சந்தையில் 240 ரூபாவாக இருக்கும்போது அரசு 200 ரூபா மட்டுமே வழங்கியதனால் எவருமே டொலரை நாட்டிற்குள் கொண்டுவரவில்லை. இதன் காரணமாக டொலரின் உள்வரவு குறைந்ததால் அரசு தற்போது 230 ரூபாவாக தற்போது அதிகரித்தமையினால் ஓரளவு நிவர்த்தியாகும் சந்தர்ப்பம் உண்டு. ஏனெனில் வர்த்தகர்கள் வெளியில் 260 ரூபாவிற்கு கொள்வனவு செய்த டொலரில் பொருட் கொள்வனவு செய்தனர் அவ்வாறானால் 60 ரூபா மேலதிகமாக இழந்த வர்த்தகர் இனி 30 ரூபாவினையே இழப்பர் இதனால் விலை தளம்பல் ஏற்படாமல் இருக்கலாம்“ .
நாடு பொருளாதாரத்திலிருந்து மீள முடியாவிட்டால் அது மக்கள் புரட்சிக்கு வழிவகுக்கும் என்பது பல நாடுகளில் காணப்பட்டுள்ளது. இந்த வாரம் கொழும்பில் எதிர்க்கட்சியில் நடத்திய மாபெரும் போராட்டம் இதற்குச் சான்று.
இலங்கை ஆட்சியாளர்கள் நீரோ போலவும் 16 ஆம் லூயி போலவும் இருக்கக் கூடாது என்பதே மக்களின் மக்களின் எதிர்பார்ப்பு.