-நக்கீரன்
கோலாலம்பூர், மார்ச் 22:
பதவிக்கு வந்த அடுத்த ஆண்டே, ஏழு இலட்ச ஈழத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக அறிவித்த டோன் ஸ்டீஃபன் சேனநாயகேதான், இலங்கை இன்றளவும் சந்திக்கும் இனப் பூசலுக்கும் இலட்சக்கணகான தமிழ் மக்களின் உயிர்ப்பலிக்கும் முதன்மைக் காரணம்;
1947 ஆகஸ்ட் 14-இல் பாகிஸ்தானும் 15-இல் இந்தியாவும் விடுதலை அடைந்தபின் அதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இலங்கையும் விடுதலை அடைந்தது.
அடுத்த ஆண்டில் இலங்கை குடியுரிமைச் சட்டத்தை வரைந்தபோது, வெறும் ஐந்து ஆயிரத் தமிழர்களுக்கு மட்டும் குடியுரிமையைத் தந்துவிட்டு, மீதமிருந்த 7,00,000 தமிழர்களை நாடற்றவர்களாக அறிவித்தார் சேனநாயகே.
அப்போது, இலங்கை மக்கள் தொகையில் இது 11%.
1947 செப்டம்பரில் சுதந்திர இலங்கையில் நடைபெற்ற முதல் தேர்தலில் சேனநாயகேவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிட்டாத நிலையில், சிலோன் இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தயவில்தான் சேனநாயகே ஆட்சி அமைத்தார். இலங்கையின் முதல் ஆட்சியே தமிழரின் முட்டுக் கொடுப்பில்தான் முளைத்தது.
அப்படி இருந்தும், அனைத்து மக்களும் சக வாழ்வு வாழ்வோம் என்ற பரந்த நோக்கத்தைக் கொண்டிராத சேனநாயகே, தமிழ் மக்களை வஞ்சிக்கும் விதமாகவும் சிங்கள-தமிழ் மக்களிடையே பகைமைத் தீயை மூட்டிவைக்கும் விதமாகவும் அக்கிரமமான குடியுரிமைக் கொள்கையை நிறைவேற்றினார்.
1948 ஆகஸ்ட் 20-இல் அத்தகைய அநியாய குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்ப்ட்டபோது, சிங்கள இடதுசாரி கட்சிகள், ஜி.ஜி. பொன்னம்பலனார் தலைமையிலான அனைத்து இலங்கைத் தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றுடன் சிலோன் இந்தியர் காங்கிரஸ் கட்சியும் கைகோத்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் சேனநாயகே புறந்தள்ளி விட்டார்.
இலங்கை விடுதலை அடைந்திருந்தாலும் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஆளுமை இன்னமும் கொழும்பில் தொடர்ந்து கொண்டிருந்த நேரமது; வலிமைமிக்க ஜவர்ஹர்லால் நேருவோ இந்தியாவின் பிரதமராக மட்டுமல்ல; மௌண்ட் பேட்டன் பிரபுவுடனான நட்பின் அடிப்படையில் இலங்கிலாந்திலும் ஆளுமைப் பெற்றிருந்தார்.
அப்படி இருந்தும், சேனநாயகே இத்தகைய முடிவைத் துணிந்து எடுத்தார் என்றால், தமிழர்கள் ஒருகணம் நிதானிக்க வேண்டியுள்ளது.
பிரித்தாளுதல் என்னும் குயுக்தியில், பிரிட்டீஷ் கண்காணியரின் தூண்டுதலும் தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நேரு அணுகியதும் இதில் சம்பந்தப்பட்டிருக்குமோ என்று கருத வேண்டி உள்ளது.
இலங்கை விடுதலை அடைவதற்குமுன் ஆங்கிலேயரின் அரவணைப்பில் அமைந்த முன்னோட்ட அரசாங்கத்தில், விவசாயம் மற்றும் நில மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோதே, சேனநாயகே சிங்கள மக்கள் வாழ்ந்த பகுதியில் ஒருவிதமாகவும் தமிழர்வாழ் நிலப்பகுதியில் வேறுவிதமாகவும் நில மேம்பாட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தார்.
சிங்கள மக்களிடையே சேனநாயகே தோற்றுவித்த தமிழர் விரோதப் போக்கை, அடுத்தடுத்த வந்த சிங்கள ஆட்சியாளர்களும் அதை சிந்தாமல் சிதறாமல் தற்காத்து வருகின்றனர்.
சொந்தக் கட்சியினரிடையேயும் ஏனைய சிங்களத் தலைவர்களிடமும்கூட முரட்டு பாவணையில் சேனநாயகே நடந்து கொண்டதால்தான், ஐக்கிய தேசியக் கட்சியில் இவருக்கு அடுத்த நிலையில் இருந்த பண்டாரநாயகே, கட்சியில் இருந்து விலகி புதிதாக சுதந்திரக் கட்சியை உருவாக்கும் நிலையும் தோன்றியது.
இவ்வாறு, இறுமாப்புடன் அதிகார உலா வந்த காலத்தில் ஒரு நாள், வழக்கமான குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சேனநாயகே, குதிரையில் இருந்து விழுந்து வலிப்பு நோய்க்கு ஆளானார்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சேனநாயகேவுக்கு, குதிரைச் சவாரியின்போது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தாரா அல்லது கீழே விழுந்ததால் வலிப்பு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.
இருந்தபோதும் அவரைக்காப்பாற்ற இங்கிலாந்தில் இருந்து சிறப்பு மருத்துவக்குழு விமானம் மூலம் புறப்பட தயாரனது; வின்ஸ்டன் சர்ச்சில் ஒருங்கிணைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது; அந்த அளவுக்கு சிங்களத்தின் ஆளுமை லண்டனில் கொடிகட்டி பறந்துள்ளது;
இதற்கிடையில், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளில் இருந்து சிறப்பு நரம்பியல் மருத்துவர்களும் கொழும்பு விமான நிலையம் வந்தடைந்தனர். எல்லாம் கூடி வருவதற்குள் 32 மணி நேரம் மயக்க நிலையில் நீடித்த சேனநாயகேவின் உயிர் பிரிந்துவிட்டது.
அந்த நாள், மார்ச் 22, ஆண்டு 1952.
பொதுவாக, தலைவர்கள் என்றால் மக்களிடையே ஒற்றுமைத் தீபத்தை ஏற்றி வைப்பார்கள்; சிங்களத் தலைவர்கள் என்றால் பிரிவினைத் தீயைத்தான் மூட்ட வேண்டும் என்ற பாடத்தைப் போதித்தவர் சேனநாயகே.