(மன்னார் நிருபர்)
(22-03-2022)
மன்னார் மாவட்டத்தில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு நிகழ்வும் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட இணைப்பு அதிகாரி பாக்கியராஜா பிரதீபன் , மன்னார் மாவட்ட திட்ட பணிப்பாளர் , மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் உட்பட பிரதேச செயலாளர்கள் , உதவி செயலாளர்கள் , உதவி திட்டப் பணிப்பாளர்கள் , சமுர்த்தி தலைமைப்பீடம் , முகாமையாளர் நிர்வாக கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் 8 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டது டன் ஒரு மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு மாணவனுக்கு 20 ஆயிரம் ரூபாவும் ஏனைய மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை அரசாங்க அதிபர் வழங்கி கௌரவித்தார்.
அத்துடன் 2021ஆம் ஆண்டு இலங்கையில் முதல் 10 சிறந்த மாவட்டங்கள் என இலங்கை சமூக பாதுகாப்பு சபை தரப்படுத்தல் பட்டியலில் மன்னார் மாவட்டம் உள்வாங்கப்பட்ட மையும் இதில் குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலகம் தேசிய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் , முசலி பிரதேசம் 100 வீத அடைவு மட்டத்தை பூர்த்தி செய்துள்ளமையும் பாராட்டி அரச அதிபரினால் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் அரச ஓய்வூதிய திட்டத்தின் ஊடாக சிறப்பாக பணியாற்றிய பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவி திட்ட பணிப்பாளர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர்,நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்ட அமையும் குறிப்பிடத்தக்கது.