சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
விடுதலைப் புலிகளை கண்டே அசராத மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது மக்களின் எதிர்ப்பைக் கண்டு அதிர்ந்து போனார். மிகவும் துணிச்சலானவர், யாரைக் கண்டும், எதைக் கண்டும் அஞ்சாதவர் என்று பெயரெடுத்தவர் முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ.
அரசியல் தலைவர்கள் தலைநகருக்கு வெளியே செல்லும் போது அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவானது எந்தளவுக்கு அவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர் என்பதையும், அவர்களுக்கு கிடைக்கும் எதிர்ப்பு மக்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும். அப்படியான எதிர்ப்புகள் அந்த அரசியல்வாதியின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்பது பொதுவான அரசியல் புரிதல்.
நாடு முழுவதும் ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிராக கடுமையான அதிருப்தி நிலவும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாண விஜயத்தை மேற்கொண்டார். அவரது நிகழ்ச்சி நிரலைப் பார்த்தபோது பெரியளவுக்குச் சொல்லி கொள்ளும்படி ஏதுமில்லை. தேசியளவிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வும் ஏதுமில்லை, அரசியல் பொதுக்கூட்டங்களும் இல்லை. அவரது பயணம் பெரும்பாலும் சமய நிகழ்வுகளைச் சார்ந்தே இருந்தது. அதிலும் பெரும்பாலானவை பௌத்த சமய நிகழ்வுகளாகவே இருந்தன. வழக்கம் போல் யாழ்ப்பாணம் வரும் தலைவர்கள் தவறாமல் விஜயம் செய்யும் நல்லூர் ஆலயத்திற்குச் சென்று கந்தனையும் தரிசிக்க அவரால் முடியவில்லை; அந்தளவுக்கு மக்கள் எதிர்ப்பு.
பிறகு எதற்க்காக யாழ்ப்பாணம் வந்தார் மஹிந்த ராஜபக்ஷ?
இதற்கான பதில் அவர் பயணத்திலிருந்தே தெரிய வருவதாகக் கருதலாம். பல இடங்களில் ஏற்கெனவே உள்ள புத்த விகாரைகளுக்கு சென்று அவர் வழிபட்டார் மேலும் தேவையில்லாமல் வலிந்து அமைக்கப்படும் சில விகாரைகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளிலும் பங்குபெற்றார். இது முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்புகிறது என்று வடமாகாணத்தில் வாழும் முக்கியஸ்தர் ஒருவர் உதயனிடம் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
“ராஜபக்ஷக்களின் நோக்கம் என்பது வடக்கு மாகாணத்திலும் மேலும் இயன்றவரை வலிந்த சிங்கள குடியேற்றங்களைச் செய்து, இங்குள்ள குடிப்பரம்பல் நிலையை மாற்றியமைத்து, தமிழ்மக்களை பலவந்தமாக ஊரைவிட்டு, நாட்டைவிட்டுச் செல்ல வைப்பதாகும். புத்த விகாரைகளை மேலும் மேலும் நிருவி அதையொட்டிய பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை இராணுவ உதவியுடன் முன்னெடுத்து, உரிமை கோரப்படாத நிலங்களில் அவர்களை குடியமர்த்துவதே அவர்களின் நீண்டகால எண்ணமாகும்”
ஆதி சிவன் கோவில் அமைந்திருக்கும் குருந்தூர்மலையை பௌத்த குருமார்கள் இராணுவத்தினர் உதவியுடன் ஆக்கிரமித்துள்ளது அண்மைக்கால உதாரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், `போர் வெற்றி நாயகன்` மஹிந்த ராஜபக்ஷவிக்கு இம்முறை யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. நாட்டில் நிலவும் விலைவாசி ஏற்றம், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு, கட்டுக்கடங்காத பணவீக்கம், பொருட்களை இறக்குமதி செய்யக் கடுமையான கட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களைச் சர்வதேச சந்தையில் வாங்க கையில் அந்நிய செலாவணி (டொலர்கள்) இல்லாத நிலை என்று ஏராளமான சிக்கலில் நாடு இருக்கும் நிலையில், மக்களிடையே நாளாந்தம் அரசிற்கு எதிரான மனோபாவம் மற்றும் கொந்தளிப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நெருக்கடிகளுக்கு அப்பாற்பட்டு, போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆகும் நிலையில், காணாமால் போன உறவினர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள அவர்களின் உறவுகள் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் கடுமையான எதிர்ப்பையும் ராஜபக்ஷக்கள் சந்திக்கின்றனர். இது அவரது யாழ்ப்பாண விஜயத்தின் போதும் பிரதிபலித்தது.
பிரதமரின் வருகையை ஒட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும், காணாமல் போனோரைத் தேடும் தாய்மார்களும் துவண்டுவிடாமல் தமது போராட்டத்தை முன்னெடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் இராணுவத்தினரால் மூர்க்கத்தனமாக தடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவின.
”காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரை தாக்குவதற்கா பிரதமர் யாழ் வந்தார்?” என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் `அலங்கார கந்தனை` தரிசிக்க வருவார் என்று தகவல் கசிந்ததால், ஆலயத்திற்குச் செல்லும் அனைத்து வழிகளையும் மறித்து, காணாமல் போன உறவுகளுக்காகப் போராடும் தாய்மார்களும், பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேநேரம் ஆலயம் சகலருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் மாறாக அங்கே வருபவரை மறிக்கக்கூடாது என ஒருசிலர் கூறமுற்பட்டதனால் ஆலயச் சூழலில் இடம்பெறவிருந்த போராட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாதைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு அவர்களின் சாலைகளை நோக்கிய பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு முன்பே தடை போட்டு 10 மணி தாண்டியபோது கிடைத்த தகவல் நல்லூரிற்கான பிரதமரின் பயணம் ரத்துச் செய்யப்பட்டு `அலங்காரத்திற்கு பதிலாக காவடியை நாடிவிட்டார் பிரதமர்` என்று தகவல் வந்தது. ஆக அங்கே தடையை ஏற்படுத்திய பொலிசாருக்கும், படையினருக்கே தகவல் தெரியாதா அல்லது போராட்ட செய்திகள் பிரதமரிற்கு பதற்றத்தை ஏற்படுத்தியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் விக்கிரமாதித்தன் கதை போல் மஹிந்த ராஜபக்ஷவும் துவண்டுவிடாமல் மாவிட்டபுரம் சென்று அங்குள்ள கந்தசாமி ஆலயத்தில் தரிசனம் செய்தார்.
”மக்கள் வரிசையில் பொருட்களிற்கு காத்திருக்கும் காலத்தில் நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வாகண தொடரணியுடன் யாழ்ப்பாணம் வந்துபோனதன் பெறுபேறு எரிபொருள் செலவைத் தவிர வேறு ஏதுமில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் கூறினார். அவரது கருத்திற்கு ஏகோபித்த ஆதரவு இருந்ததும் காணப்பட்டது.
இதேபோன்று மத வழிபாடு என்னும் பெயரில் பௌத்த அடையாளங்களே இல்லாத கந்தரோடையில் ஒருபௌத்த விகாரைக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் வழிபாடு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளை காலையில் த.தே.ம.முன்னணியும் மாலையில் கூட்டமைப்பும் ஓர் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தமையினால் அந்த திட்டத்தையும் பிரதமர் கைவிட்டார்.
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் நல்லாட்சி அரசின் காலத்தில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்காக வருகை தந்த பிரதமரின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இந்து மதகுரு தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்களும் முல்லைத்தீவிலிருந்து காணாமல் போனவர்களின் உறவுகளும் பேருந்துகளில் மட்டுவிலுக்கு வருகை தந்த போது, திறப்பு விழா இடம்பெற்ற இடத்திற்கு ஆர்ப்பாட்டாக்கார்களை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, பெண்கள், தாய்மார்கள் ஆகியோரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து படையினர் அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் மோசமாக நடத்திய அவலமும் அரங்கேறியது.
இந்தக் கோபத்தின் வெளிப்பாடாக மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறிய நிலையில் அப்பகுதிகளில் பிரதமரை வரவேற்கும் முகமாக கட்டப்பட்டிருந்த பதாகைகளை அறுத்தெறிந்து அவற்றை தீயிட்டும் எரித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமதுஎதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
முன்னதாக பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முல்லைத்தீவிலிருந்து பேருந்துகள் மூலம் வந்தவர்கள் அதிலிருந்து இறங்க முடியாதவாறு தடுக்கப்பட்டனர்.
உலகளவில் ஊடகச் சுதந்திர அளவுகோல் பட்டியலில் இலங்கை மிகவும் கீழேயுள்ளது பன்னாட்டு அரங்கில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமரின் பயணத்தின் போது ஊடகவியலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்ட. குறிப்பிட்ட சில தென்னிலங்கை ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான உள்ளூர் தமிழ்ச் செய்தியாளர்களுக்கு பிரதமர் பயணத்தின் போது செய்தி சேகரிக்கவோ அல்லது அவரிடம் பேட்டி காணவோ அனுமதி மறுக்கப்பட்டது.அதேநேரம் 19ஆம் திகதி நிகழ்வுகளிற்கு செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்த பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் 20ஆம் திகதி மட்டுவிலில் திறக்கப்படும் பொருளாதார மத்திய நிலைய திறப்பிற்கு அனுமதிக்கப்படும் என மாவட்டச் செயலகம் ஊடகவியலாளர்களிற்கு தகவல் வழங்கியபோதும் போராட்டச் செய்திக்காகவே செய்தியாளர்கள் மட்டுவில் சென்றனர்.
இதேவேளை நாவற்குழிக்கு வந்த பிரதமர் பலருக்கு காணி அனுமதிப் பத்திரம் கொடுத்தார். அதனை யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போர்க்காலத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட நிலங்களில் இன்னும் உரியவர்களிடம் கையளிக்கப்படாத நிலங்கள் இன்னும் பெருமளவில் உள்ளன. பன்னாட்டு அரங்கில் பொதுமக்கள் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற்றும் என்று வாக்குறுதி அளித்த அரசு, கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மேலும் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் இன்றளவும் ஈடுபடுகின்றன என்று உள்ளூர் மக்கள் குமுறுகின்றனர்.
மக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே தமது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க குழுமியிருந்த தமிழ் மக்களின் கோபாவேசம் குறையவில்லை.
ஏன் வந்தார் எதற்கு வந்தார் என்று எவருக்கும் தெரியாத சூழலில், நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு எந்த தீர்வையும் அரசு முன்வைக்காத நிலையில், செலவுடன் கூடிய பயணத்தில் திட்டமிட்டு திணிப்புகளை மேற்கொள்ளுவது தான் நோக்கமாக உள்ளது என்கிறார் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம்.
பல வகைகளில் ஆராயும் போது இலங்கையில் ஆளுமை மிக்க தலைவராக அறியப்படும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த இரண்டுநாள் யாழ்ப்பாண விஜயம் தோல்வி என்பதே யதார்த்தம். ஆனால், அரசிற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும், பிரதமருக்கு எதிராகப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பவர்களை கடுமையாகச் சாடியுள்ளனர்.
“ஜனாதிபதியும், பிரதமரும் அரசியல் விஜயமாகவோ அலுவல் ரீதியான விஜயமாகவோ வட மாகாணத்திற்கு வருகை தரும்போது, சில அமைப்புகள் வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்பட்டு போராட்டங்களை முன்னெடுப்பது ஏற்க முடியாதது, அது அவர்களுக்கு எந்த பலனையும் அளிக்காது” என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
பல போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றிகண்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு யாழ்ப்பாண விஜயம் காத்திரமாக ஒரு செய்தியைக் கூறியுள்ளது என்பதே யதார்த்தம். மக்களின் நியாயமான போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத அரசும் அரசியல்வாதிகளும் தோல்வியைச் சந்தித்ததே அரசியல் வரலாறு; அதற்கு இலங்கையும் விதிவிலக்காக இருக்காது.