அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணி அபிவிருத்தி (திருத்தம்) சட்டமூலம், விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சட்டமாக அமைந்துள்ளதாக, நாட்டின் பல முன்னணி தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.
32 தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில், புதிய காணி அபிவிருத்தி சட்டமூலம், சட்டமாக்கப்படுவதற்கு முன்னர், திருத்தச் சட்டமூலத்தின் 4 மற்றும் 9ஆவது பிரிவுகளை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளன.
காணி அபிவிருத்தி (திருத்தம்) சட்டமூலம் (LDO) மார்ச் 11 வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகளின் கடன் சுமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டும் அறியாமை மற்றும் அலட்சியம் அருவருப்பானது என தொழிற்சங்கங்களும் சிவில் சமூக குழுக்களும் குற்றஞ்சாட்டுகின்றன.
“விவசாயிகளின் நிலங்களை வங்கிகளில் அடகு வைப்பதுதான் அனைத்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு என அவர்களில் பலர் நம்புவதை அமைச்சர்களின் அறிக்கைகள் காட்டுகின்றன. சட்டமூலம் உள்ள உட்பிரிவுகள் முக்கியமானவற்றை விவாதிக்கும் சூழலை உருவாக்காமல் அவசர அவசரமாக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
காணி அபிவிருத்தி (திருத்தம்) சட்டமூலம், ஆடுகளின் உடையில் ஓநாய் என தெரிவித்துள்ள, தொழிற்சங்கம் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள், மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும் அவர்களின் நிலத் தீர்மானத்தின் மீது கட்டுப்பாட்டையும் அளிக்கும் ஒரு முற்போக்கான நடவடிக்கை என தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பெண்களுக்கான உரிமை
“இந்த சட்டமூலம் பெண்களுக்கு காணி வாரிசு உரிமையை அறிமுகப்படுத்த முயல்கிறது. மக்கள் விரோதச் சட்டங்களைக் கொண்டு வர பெண்களின் கோரிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உழைக்கும் மக்களின் உரிமைகளைக் குறைக்கும் நெகிழ்வான தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்தியதைப் போலவே, நிலத்தை தனியார்மயமாக்கவும், அதை ஒரு பண்டமாக மாற்றவும் பெண்களின் கோரிக்கைகளை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது.”
காணி அபிவிருத்தி திருத்த சட்டமூலம், விவசாயிகள் தங்கள் நிலத்தை அப்பகுதியின் அரசாங்க அதிபரின் அனுமதியின்றி வங்கிகளில் அடகு வைக்க உதவும் எனவும், இதன் விளைவாக, விவசாயிகளின் உரிமையை உறுதிப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டு, விவசாயிகள் தங்கள் நிலத்தை அடமானம் வைக்கும் உரிமையைப் பெறுவதற்கான அதிகாரத்தை சுட்டிக்காட்டி, இந்த சட்டமூலம் ஒரு ‘முற்போக்கான’ நடவடிக்கையாக தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும், மார்ச் 17 அன்று 32 தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளால் கூட்டாக வெளியிடப்பட்ட ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் முதலாளிகளிடம் நிலத்தை அடகு வைக்கும் சுதந்திரம் ‘சுதந்திரம்’ அல்லது ‘விடுதலை’ அல்ல என்பது ஆயிரக்கணக்கான நிலமற்ற விவசாயிகளுக்கு தெரியும் எனக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, விவசாயிகள் வேறு வழியின்றி நிலத்தை அடகு வைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“குறைந்த வருமானம் கொண்ட உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை அனுபவத்தைப் பொருட்படுத்தாமல், புதிய திருத்த சட்டமூலம், வறிய விவசாயிகளிடமிருந்து விவசாய நிலங்களை அபகரித்து விவசாயிகளின் மதிப்புமிக்க சொத்துக்களை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கொள்ளையடிப்பதை தடுக்கும் முற்போக்கான காணி சீர்திருத்த சட்டங்களை இரகசியமாக மாற்ற முயல்கிறது.”
விவசாயிகள் ஏற்கனவே கடனில் சிக்கித் தவிக்கும் வேளையில் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
“இயற்கை பசளையை பயன்படுத்துவது குறித்த திடீர் முயற்சியால் விளைச்சல் பெருமளவில் வீழ்ச்சியடைந்த அதிர்ச்சியுடன் போராடும் விவசாயிகள் ஏற்கனவே வருமானத்தை இழக்கும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
சீரழிந்து வரும் பொருளாதார நிலை விவசாயிகளின் கடனை மேலும் தீவிரமாக்கும். விவசாயிகளின் கடன்கள், கடந்த காலங்களில் அவர்களை தற்கொலைக்குத் தள்ளியது, அதே போல் தற்போதைய நுண்கடன் நெருக்கடி, முக்கியமாக விவசாயப் பகுதிகளில், விவசாயிகள் வாழும் ஆபத்தான சூழ்நிலையை விளக்குகிறது.”
இந்நிலையில், புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், விவசாய நிலங்கள் வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் கைமாறும், நிலமற்ற விவசாயிகள் கூட்டம் உருவாகும் என, தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இச்சட்டம் கடந்த காலத்தைப் போன்று சமூகத்தின் ஒரு சில பிரிவினரே காணிகளை வைத்திருந்த நிலவுடமை காலத்தை மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற்போக்குச் சட்டம் எனவும் இதனை இலங்கை மக்கள் முழுமனதுடன் நிராகரித்துள்ளதாகவும் தொழிற்சங்கங்களின் கூட்டு அறிக்கை மேலும் வலியுறுத்துகிறது. அதேவேளை, இந்த சட்டமூலத்தை முன்வைத்தமைக்கு அமைவாக இலங்கை மக்களால் முழு மனதுடன் நிராகரிக்கப்பட்ட மிலேனியம் சவால் உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் நிலத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு, மிலேனியம் சவால் சட்டத்தை தோற்கடிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்ததாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
“வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்து விவசாயிகளின் நிலங்களைப் பாதுகாக்கும் மேற்பார்வையை அகற்றுவதன் மூலம் அரசாங்கம் என்ன பெற முயற்சிக்கிறது? எஞ்சியிருக்கும் விவசாயிகளின் கடைசி சொத்துக்களில் அதிகமானவற்றை வங்கிகள், நிதி மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் உதவ விரும்புகிறதா? நமது விவசாயிகளின் கடைசி சொத்துக்களை பறிமுதல் செய்து வங்கி மற்றும் பெருநிறுவனத் துறையை வளப்படுத்துவதில் அரசாங்கம் ஏன் அக்கறை கொண்டுள்ளது?” என அவர்கள் மேலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதிய காணி அபிவிருத்தி சட்டமூலம், சட்டமாக்கப்படுவதற்கு முன்னர், காணி அபிவிருத்தி திருத்தச் சட்டத்தின் 4 மற்றும் 9ஆவது பிரிவுகளை இரத்து செய்யுமாறும், நமது நாட்டில் சிறு விவசாயிகளுக்குப் பாதகமான சட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பயன்படுத்தக் கூடாது எனவும், எதிர்காலத்தில் விவசாயிகளின் நிலங்கள் வங்கிகளிடம் பறிபோகும் போது அதற்கான பழி அரசாங்கத்தையே சாரும் என்பதையும், நிலமற்ற விவசாயிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு 32 தொழிற்சங்கங்களும் சிவில் சமூக அமைப்புகளும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.