பிரதமர் மஹிந்தராஜபக்ஷவின் குடாநாட்டுக்கான திக் விஜயம் குடா நாட்டைகொந்தளிப்படைய வைத்திருப்பதுடன் விஜயத்தின் பாதுகாப்பு கெடுபிடியால் காணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் தாக்கப்பட்டதும்; அவமதிக்கப்பட்டதுமான சம்பவமானது குடாநாட்டை மாத்திரமன்றி தமிழ்த்தேசியப்பரப்பையே கோபம் கொள்ள வைத்திருக்கிறது. இன்றைய ஆட்சியாளரின் அராஜகப்போக்குப்பற்றிய தவறான எண்ண அலைகளை யாழ்; மக்களுக்கு மீண்டும் இச்சம்பவம் பதிய வைத்துள்ளது.
பிரதமர் என்பவர் ; ஒரு நாட்டின் தலைவர் அவரை வரவேற்பதும் புறக்கணிப்பதும் மக்களின் அபிப்பிரயம் சார்ந்த ஜனநாக உரிமை. பிரதமரின் யாழ் விஜயத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜனநாக முறையில் எதிர்ப்பைக்காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த விஜயத்தின்போது வன்னியிலிருந்து வந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஈஸ்வரி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஜெனிற்றா ஆகியோர் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமானது வட கிழக்கு வாழ் மக்களை கவலைபட வைத்திருப்பதுடன் ஆத்திரம் அடையவும் செய்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த சனி ஞாயிறு ஆகிய இருநாட்களும் (19.3.2022- 20.3.2022) வரலாற்று புகழ் கொண்ட நயினாதீவு நாகபூசணி ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். யாழ் நல்லூர் முருகன் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு செல்லவிருந்த பிரதமர் நல்லூர் ஆலயத்துக்க முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது என்று கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே அதை தவிர்க்கும் முகமாக மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆலய வழிபாட்டை தடுக்கும் அளவுக்கு குடநாட்டு மக்கள் அநாகரிம் கொண்டவர்களாக எப்போதும் அவர்கள் நடந்து கொண்டதாக தெரியவில்லை.
இதேவேளை பிரதமர் யாழ் நாகவிகாரை வழிபாட்டிலும் பங்கு கொண்டதோடு உரையும் ஆற்றியுள்ளார். சிலசெய்திகளின் பிரகாரம் சுண்ணாகப்பகுதியில் விகாரையொன்றுக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்திலும் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவலும் பெரிதாக பேசப்பட்டுள்ளது. இதன் பின்னணியிலையே புpரதமரின் யாழ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டங்களை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
அதன் எதிரொலியாகவே மட்டுவிலில் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. புதிதாக மட்டுவில் கிராமத்தில் அமைக்கப்பட்ட பொருளாதார நிலையத்தை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைப்பதற்காக பிரதமர் (20.3.2022) ஞாயிற்றுக்கிழமை வருகைதந்தபோது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உறவுகள் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர். அப்போராட்டத்தில் கலந்து கொள்ள முல்லைத்திவு மாவட்டத்திலிருந்து வந்தவர்களை மட்டுவில் அம்மன் ஆலயத்துக்கு அருகில் வைத்து பொலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பொலீசாரின் தடுப்பையும் மீறி உறவுகள் வீதியில் புரண்டு அழுது கத்தி தமது எதிர்ப்பை காட்டியதோடு பிரதமரை வரவேற்கும் பதாதைகளை கிழித்தும் எரித்தும் தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர். இந்த கள நிலையால் முல்லைத்திவிலிருந்து வருகை தந்திருந்த முல்லைத்திவு மாவட்ட தலைவி ஈஸ்வரி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஜெனிற்றா ஆகியோர் சிறிய கயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அசம்பாவிதங்கள் யாழ் குடநாட்டை நிலை குலைய வைத்திருப்பதோடு யாழ்ப்பாணத்தில் பதட்ட நிலையையும் உருவாக்கியுள்ளது.
இதே வேளை மட்டுவிலில் இடம் பெற்ற தாய்மார் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தாய்மார்களுடன் இணைந்து ஒரு சில உள்ளுர் தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தலைவர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் பதாதைகள் எரிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்காக சாவகச்சேரி பொலீசாரால் இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
யுத்தத்தினால் தங்களுடைய பிள்ளைகளையும் கணவன் மாரையும் சகோதரர்களையும் உறவுகளையும் பறிகொடுத்த மக்களை கண்மூடித்தனமாக மிலேச்ச முறைகொண்டு தாக்கியது எந்தளவுக்கு ஜனநாக முறைகொண்ட செயல்? இலங்கை நாட்டில் எங்கே ஜனநாயகம் இருக்கிறது
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரை தாக்குவதற்காகவா பிரதமர் யாழ் வந்தார்? வலிந்து காணாமல் ஆக்கனப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனநாயக ரீதியில் நீதி கேட்டு போராட முயற்சித்தபோது அவர்களை வழிமறித்து பஸ்ஸிலிருந்து இறங்கவிடாமல் அச்சுறுத்தி தாக்கிய சம்பவங்கள் ஆட்சியாளர்களின் அராஜகத்தை காட்டுகிறதென பலரும் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டமானது தொடர்கதையைப்போல் பலவருடங்களாக தொடர்ந்து இடம் பெற்றுவரும் ஒரு ஜனநாகவழிப்போராட்டமாகும். ஆயுதமின்றி ஆர்ப்பாட்டமின்றி அகிம்ஷை வழிமுறை தழுவிய போராட்டங்களையே அவர்கள் நடாத்தி வருகிறார்கள்.
இறுதி யுத்தத்தின்போதும் அதன்பின்னரும் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வடகிழக்கில் பல போராட்டங்களையும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருகிறார்கள். இது அவர்களின் ஜனநாயக உரிமையாகவே எண்ணி மேற்கொண்டுவருகிறார்கள்.
கொழும்பு உட்பட குறிப்பாக வட கிழக்குப்பிராந்தியங்களில் பெருந் தொகையானோர் கைது செய்யப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.வெள்ளைவானில் ஏற்றிச் செல்லப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஊதாரணமாக கொழும்பு தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உட்பட 11 பேருக்கும் இதுவரை என்ன நடந்தது என்ற விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. ஏலவே இறுதி யுத்தத்தில் சரண் அடைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் உறவினர்களால் நேரடியாகவே கையளிக்கப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். இவையெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நடந்த கொடூரங்கள். இவற்றை உலகுக்கு எடுத்துக்காட்டவே அவருடைய வருகையை இலக்குவைத்து இந்த போராட்டங்களை உறவுகளாகிய நாம் மேற்கொண்டு வருகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இக்காலப்பகுதியிலையே பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற பாரிய குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறன. எனவேதான் இந்த போராட்டம் தொடர்பாக ஒரு சங்கலித்தொடரான வரலாறு காணப்படுகிறது என்பது வெளிப்படையாக எடுத்துக்காட்டப்படுகிற விடயம் .
உண்ணாவிரதப்போராட்டங்கள்ரூபவ் சுழற்சிமுறை உணவு தவிர்ப்புபோராட்டம்ரூபவ் தொடர் போராட்டங்கள்ரூபவ் ஆர்ப்பாட்டங்கள் என பல போராட்டங்களை நடாத்தி இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் தமது எதிர்ப்பை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இந்த போராட்டங்கள் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து இடம் பெற்றுவருகின்றன.
காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஐக்கியநாடுகள் மனிதவுரிபமைப்பேரவையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து பல தீர்மானங்கள் முன் கொண்டுவரப்பட்டன. உதாரணமாக 2017 ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் மனிதவுரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஐந்து பிரேரணைகளில் ஒன்றாக இந்த விவகாரம் காணப்பட்டது. இப்பரச்சனைக்கு விரைவான தீர்வு காணப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.
முன்னாள் மனிதவுரிமைப்பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையவர்கள் இலங்கைக்கு இப்பிரச்சனை தொடர்பில் கேட்டறியவும் ஆராயவும் வந்தபோது காணாமல்போனவர்களின் உறவுகள் இப்பிரச்சனை தொடர்பாக எடுத்துக்கூறுவதற்க அவரை சந்திப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டபோது அது திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தால் தடுக்கப்பட்டது. இருந்தபோதும் உறவுகள் பிள்ளையவர்களை சந்தித்து தங்கள் முறைப்பாடுகளை முன்வைத்தார்கள். அதுவுமன்றி ஆணையாளர் அவர்கள் இரகசியமான முறையில் திருகோணமலை மன்னார் முல்லைத்தீவு பொன்ற பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விடயங்களை கேட்டறிந்து கொண்ட சம்பவங்களும் இடம் பெற்றள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குவேண்டுமென்ற கோரிக்கையை உறவுகள பல சந்தர்ப்பங்களில் ; முன்வைத்ததோடு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென்ற கொரிக்கையையும் பல சந்தர்ப்பங்களில் முன்மொழிந்து வந்திருக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த அவர்களால் பரணகம ஆணைக்குழுவும் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது.
பரணகம ஆணைக்குழு வட கிழக்கில் பல்வேறு அமர்வுகளை நடாத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தியபோது சுமார் 19 ஆயிரத்துக்கு மேற்பட்ட எழுத்து மூல முறைப்பாடுகளை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டது. ஆனால் நடந்தது என்ன ஆணைக்குழுவால் குறித்தவிவகாரத்துக்கு தீர்வு காண முடியவில்லை. இதேபோன்றே நல்லிணக்கக்குழு மற்றும் காணாமல் போனோக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவை மஹிந்த நியமித்திருந்தார். இக்குழு நாடு தழுவிய விசாரணைகளை மேற்கொண்டபோதும் இவர்களாலும் காணாமல்போனோர் தொடர்பாக தீர்வை பெற்றுத்தரமுடியவில்லை.இவ்வாறானதொரு சூழ் நிலையில்தான் காணாமல் போனோரின் உறவுகள் தீவிரமாக போராட்டங்களை நடத்த முற்பட்டார்கள்.
2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்திலாவது தங்களுக்கு நீதி கிடைக்கும் தீர்வைப்பெற முடியுமென்ற அத்தே நம்பிக்கை கொண்டவர்களாக உறவுகள் காணப்பட்டார்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் அதற்கான துணையாளர்களும் மைத்திரிபாலசிறிசேன தலைமையிலான நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிவந்த நிலையில் தங்கள் நீண்டகாலப்பிரச்சனைக்க விரைவில் தீர்வ கிடைத்துவிடும் என்ற முழு நம்பிக்கை இவர்களை சமதான நிலை அடைய வைத்தது. ஆனால் நாம் ஒன்று நினைக்க ஆட்சியாளர்கள் ஒன்று நினைக்கின்றார்கள் என்பதுபோல் எல்லாம் மாறுநிலையாகவே நடந்து கொண்டிருந்தது.
நல்லாட்சி உருவாக்கப்பட்ட காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஒரு நிரந்தர அலுவலகத்தை அமைக்க சட்டமொன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இவ்வலுவலகத்தை திறக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்தது.
2017 ஆம் ஆண்டு யூலை மாதம் அளவில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாழுக்கு விஜயம் செய்தவேளை உறவுகள் அவரை சந்தித்து தடுப்பு முகாமில் உள்ள காணாமல் போனவர்கள் தொடர்பான பெயர் விபரங்களை வெளியிடவேண்டும் காணாமல் போனோர் தொடர்பான உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ;வலியுறுத்தினார்கள். ஜனாதிபதி இதற்கு பதில் அளிக்கையில் “இது தொடர்பில் பாது காப்பு சபை கூட்டத்தில் கலந்துரையாடி தடுத்துவைக்கப்பட்டவர்களின் பெயர்விபரங்களை வெளியிட உத்தரவிடவுள்ளதாக வாக்குறுதியொன்றை நல்கியிருந்தார். முடிவு எப்படி இருந்தது. பாதுகாப்பு படையினர் அவ்வாறு யாரும் தடுப்பு முகாமில் இல்லையென படையினர் கூறுவதாக முடிவு அவரால் தெரிவிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டளவில் நல்லாட்சி காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அம்மையார் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையில் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா ? என்பதை கண்டறியவேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் அப்படி எவரையும் யாரும் முகாங்களில் மறைத்துவைத்திருக்கவில்லை. முன்னைய ஆட்சியின்போது கடமையாற்றிய இராணுவத்தின் பழக்கத்துக்கு ஏற்ப அவர்கள் கூட்டிச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் இவை இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை என்ற தனது சந்தேகத்தை அம்மையார்
வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் எதிரொலியாகவே 2017 ஆம் ஆண்டளவில் கிளிநொச்சி வவுனியா மல்லைத்தீவு திருகோணமலை யாழ் ஆகிய இடங்களில் காணமல் போனோரின் உறவுகள் தொடர்ந்தேர்ச்சியான போராட்டங்களை நடத்திவந்தார்கள். இலங்கை அரசாங்கந்தின் இழுத்தடிப்புக்களையும் பாரா முகங்களையும் நாடகமாடுதல்களையும் சர்வதேசத்துக்கு வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக கிளிநோச்சி கந்தசாமி ஆலய முன்றலில் 2017 ஆம் ஆண்டு ஆனிமாதமளவில் காணாமல் போனோர் உறவுகள் கவனயீர்ப்பு போரட்மொன்றை 100 நாட்கள் தொடர்ந்தேர்ச்சியாக நடாத்தினார்கள். இப்பேராட்டத்தின்போது பின்வரும் கோரிக்கையை அவர்கள் முன்வைத்தார்கள்.
காணாமல் போனோர் பெயர்பட்டியலை அரசாங்கம் விரைவில் வெளியிடவேண்டும்.
இரகசிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்படவேண்டும் அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டவர்களை பார்வையிட அவர்களது உறவினர்களை அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் அவர்களால் முன்வைக்கப்பட்டது. முடிவில் என்ன நடந்தது நல்லாட்சி அரசாங்கத்தை அலங்கரித்துக்கொண்டிருந்த பொறுப்பான அமைச்சர் ஒருவர் “காணமல்போனவர்கள் பலர் வெளிநாடுகளில் பெயர் மாற்றங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டம் நடத்துவதில் அர்த்தமில்லை” என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். இறுதி யுத்தத்தில் காணாமல் போனோர் பலர் வெளிநாடுகளில் மாற்றுப் பெயர்களுடன் வாழ்ந்துவருகிறார்கள். சர்வதேச நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள தமிழர்களின் பெயர் பட்டியலை வெளியிடவேண்டும் அதன்பின்பே காணாமல் போனோர் பெயர்பட்டியலை தயாரிக்க முடியுமென அமைச்சர் மஹிந்தசமரசிங்க தெரிவித்திருந்தார்.
இவ்வாறு நல்லாட்சி அரசாங்கத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்காத நிலையில் இப்போராட்டங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன என்பது தேசம் அறிந்தவிடயம். இன்றைய அரசாங்கத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து இடம் பெற்றுவரும் நிலையில்தான் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவின் யாழ் விஜயம் அமைந்திருந்தது.
இந்த விஜயத்தின்போது பிரதமர் கூறிய விடயம் 1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு தான் முதல் முதல் விஜயம் செய்திருந்ததாகவும் சுமார் அரை நூற்றாண்டுக்கப்பிறகு யாழ் மக்களை சந்திக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்றது. ஜனாதிபதி தேர்தலில் வட கிழக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 226009 வாக்குக்கள் கிடைக்கப்பெற்றதால்; தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்காவை தோற்கடித்து ஜனாதிபதியாகும் வாய்ப்பை அவர் பெற்றார்.
இவரின் இந்த இவ்வெற்றி தொடர்பில் விடுதலைப்புலிகளின்மீது சிலவிமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது என்பது பொதுவாக பேசப்படும் விடயமாகும். ஐக்கியதேசியக்கட்சியை வெற்றிகொள்ள இடம் அளித்திருப்பார்களேயானால் நிலமைகள் மாறுநிலை பெற்றிருக்கும் நாங்களே நம் தலையில் மண்ணை வாரிப்போட்டுவிட்டோம் என்ற கருத்துக்களும் விமர்சனங்களும் பின் நாளில் பேசப்பட்ட விடயங்களாகும். அண்மையில் யாழ் குடாவுக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாண மக்களுக்கான சில கருத்துக்களை முன்வைத்தது தொடர்பில் இக்கட்டுரையில் பார்க்கவேண்டியது அவசியமாகிறது.
யாழ் நாகவிகாரையில் உரையாற்றிய பிரதமர் அவர்கள் “வடக்கு மக்களை அன்று பாதுகாத்த நாங்கள் இன்று அவர்களை பாதுகாத்து வடக்கு மாகாணத்துக்கான அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்திவருகிறோம். இலங்கையில் வாழ் பல்லின சமூகத்தினர் மத்தியில் வரவாற்றுக்காலம் முதல் நல்லுறவு பேணப்பட்டுள்ளதாகவும் 1983 ஆம் ஆண்டுக்குப்பின்னரான காலப்பகுதியில் இடம் பெற்ற ஒருசில காரணிகளால் 30 வருடகால் சிவில் யுத்தம் தோற்றம் பெற்றது என்று தெரிவித்திருந்த பிரதமர் அவர்கள் மட்டுவிலில் உரையாற்றும் போது உயிர் இழப்புக்களைத்தவிர ஏனைய அனைத்தையும் யாழ் மக்களுக்குவழங்கியுள்ளோம் வடக்கில் 30 வருடமாக மூடிக்கிடந்த இருண்ட யுகத்தை இல்லாது ஆக்கி மக்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் மீளப் பெற்றுக்கொடுத்துள்ளோம் என விதந்துரைத்துள்ளார். பிரதமரின் இந்தக்கருத்து யாழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா அல்லது ஆமோதிக்கப்படகுpறதா? என்பதற்கு அப்பால் வடகிழக்கு அரசியல் பொருரளாதார சமூக நிலமைகளுக்கு யுத்தத்துக்கிப்பன்னான குறிப்பாக இன்றைய அரசாங்கத்தால் மேற் கொள்ளப்பட்டுவரும் முன்னேற்றகரமான பட்டியல் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் அது பூஜ்ஜியத்துக்கு கீழ் உள்ள நிலையையே காட்டுகிறது என்பது எல்லோராலும் வெளிப்படுத்தப்படும் உண்மை. தெற்கின் அபவிருத்திகளும் வாழ்க்கை வளங்களும் வட கிழக்கு மக்கள் அடைந்திருக்கிறார்களா? என்பது வெறும் கேள்விக்குறியாக இருக்கமுடியும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடாத்திவரும் போராட்டங்களுக்கு கடந்த அரசாங்கங்களினால் எத்தகைய தீர்வு வழங்கப்பட்டுள்ளது.?
அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடாக ஒருலட்சம் வழங்கப்படுமென்று ஒரு அறிவித்தல் வெளிவந்துள்ளது. இதற்கு பதில் தந்த காணாமல் போனவர்களின் உறவுகள் எங்களின் உறவுகளான பிள்ளைகள் பேரர்கள் கணவன்மார் சகோதரர்கள் சொந்த பந்தங்களின் இழப்புக்களின் பெறுமதி வெறும் லட்சத்தால் அளவிடமுடியுமா? நாங்கள் தலா 10 லட்சம் அரசாங்கத்துக்கு தருகிறோம் எங்கள் உறவுகளை எங்களிடம் ஒப்படைக்கிறீர்களா? அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூறுங்கள் என ஒரு எதிர்க்கணையையே ஏவியிருந்தார்கள்.
காணமல் போனோர் தொடர்பில் பட்டியலை தாருங்கள் என்ன நடந்தது என்று கூறுங்கள் கையளித்தவ்களை கொண்டுவாருங்கள் கடத்தப்பட்டவாகள் எங்கேயிருக்கிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துங்கள் உங்களால் முடியாவிட்டால் சர்வதேச விசாணைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கடந்த பல வருடங்களாக போரடிவரும் உறவுகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு அரசாங்கமும் அதிகாரிகளும் நடந்துகொள்ளவேண்டும். வெந்த புண்ணில் வேலைப்பாய்சுவதுபோல் நடந்து கொள்ளப்படுமானால் எக்காலத்திலும் ஆட்சியாளர்களால் ஜனநாயகத்தை கட்டி எழுப்ப முடியாத நிலையே காணப்படும்.;.அதுவுமன்றி நல்லிணக்கத்துக்கான கதவு தொடர்ந்து பூட்டப்பட்டேயிருக்கும். என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.