மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா
(மன்னார் நிருபர்)
(01-04-2022)
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (3) வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் அக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
-மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
-எதிர் வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புக்கள்,வர்த்தகர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும்.
-கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் வருகை தந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பெண்கள் , வயோதிபர்கள் என பார்க்காது போலீசார் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர்.
-குறித்த தாக்குதலை கண்டித்தும்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்து வருகின்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
-எனவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உங்களுக்கும் உறவுகள் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினரும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என எதிர் பார்க்கிறோம்.
-நீண்ட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அவர்களின் உண்மையை கண்டறியவும்,அவர்களின் நீதிக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
-எனவே எமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.