-ஆயரின் பெயரில் இரண்டு வீதிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது.
(மன்னார் நிருபர்)
(01-04-2022)
மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் முன்னை நாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (01) மன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள வர்த்தக கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
மன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஜார் பகுதியில் அமைக்கப்படவுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதி மற்றும் சந்தைக் கட்டிடத் தொகுதி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மன்னார் பேருந்து தரிப்பிட பகுதியில் அமைக்கப் படவுள்ள கடை தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் முன்னை நாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மன்னார் நகர சபை பிரிவில் உள்ள இரண்டு வீதிகளுக்கு ஆயரின் பெயர் சூட்டப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-மன்னார் வைத்தியசாலை சந்தியில் இருந்து சாந்திபுரம் செல்லும் பிரதான வீதிக்கும், செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து சின்னக்கடைக்கு செல்லும் பிரதான வீதிக்கும் ஆயர் இராயப்பு ஜேசேப்பு வீதி என பெயரிடப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-குறித்த நிகழ்வுகளில் சர்வமத தலைவர்கள்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், மன்னார் நகர சபையின் செயலாளர், நகர சபையின் உப தலைவர், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.