சிவா பரமேஸ்வரன் & கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
இது சமூக ஊடகங்களின் காலம். எனவே எதையும் மறைக்க முடியாது, அடக்கி ஒடுக்க முடியாது. பல நாட்டு உச்சநீதிமன்றங்கள் சமூக ஊடகங்களில் வந்துள்ள காணொளிகளையும் புகைப்படங்களையும் சாட்சிகளாக ஏற்றுக்கொண்டுள்ளன.
வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா“ என்கிற ஹேஸ்ஹ்டாக் டிவிட்டரின் டிரெண்ட் ஆக ஆரம்பித்தவுடன் அது தீயாகப் பற்றிக்கொண்டது. உள்நாட்டில் மட்டுமல்ல அந்த தீ வெளிநாடுகளுக்கும் பரவியது. அந்த தீ இன்னும் அணையவில்லை, அணைக்கப்படும் என்றும் தோன்றவில்லை.
போ, போ என்று சமூக ஊடகங்களில் கோட்டாவையும் அவரது சகோதரர்களையும் சபிக்கும் விதமாக மக்கள் கழுவுக்கழுவி ஊற்றுகின்றனர். “ஆனால் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா“ என்று அரசரும் அலரி மாளிகையும் அதை துடைத்திறிந்துவிட்டு கவலைப்படாமல் உள்ளனர்.
இது தனிநபர் ஒருவருக்கு எதிரான போராட்டம் அல்ல; ஒரு குடும்பத்திற்கு எதிரான போராட்டம். நாட்டை சொந்த நிறுவனம் போல் நடத்தும் ராஜபக்ஷ்களுக்கு எதிரான கோபாவேசம். இதில் பதவி விலகல் என்று ஒரு நாடகம். துப்பியதை மீண்டும் வாயிற்குள் போட்டுக்கொள்வது போல் மீண்டும் நால்வருக்குப் பதவி. அதில் ஒருவர், ஒரே நாளில் பதவி வேண்டாம் என்று ஓடிவிட்டார். மற்றொரு நன்றியுள்ள மற்றும் எஜமானருக்கு விசுவாசமாக அவர் போடும் எலும்புத் துண்டிற்காக குறைக்கும் பைரவர் போன்று, ஒரு அமைச்சர், “எக்காரணத்திற்காகவும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார்“ என்று ஊளையிடுகிறார். மஹிந்த வீட்டில் நாயாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று கூறிய மெர்வின் சில்வாவை விட ஜொன்ஸ்டன் ஃபெர்ணாண்டோவின் வாலாட்டும் விசுவாசம் ஒருபடி மேலே சென்றுள்ளது.
ராஜபக்சக்களின் ஆட்சி இவ்வளவு விரைவாக இவ்வளவு கேவலமாக மக்களால் வெறுக்கப்படும் நிலை ஏற்படும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
ஈவு இரக்கமற்ற வகையில் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்பட்ட உள்நாட்டு யுத்த வெற்றியை ஏதோ வெளிநாடொன்றுடன் சண்டையிட்டு வெற்றிவாகை சூடிக்கொண்டது போலப் பாற்சோறு சமைத்து பட்டாசு கொளுத்திக் கொண்டாடி மகிழ்ந்து கட்அவுட் வைத்து மகாராசாவே நீவிர் நீடுழி வாழ்க என்று வாழ்த்திய அதே கூட்டம் 2015இல் அதே மகாராசாவை தேர்தலில் தோல்வியுறச் செய்து வீட்டுக்கு அனுப்பியது.
`நல்லாட்சி என்று கூறி` என்ன நோக்கத்திற்காக ஆட்சி மாற்றம் நடைபெற்றதோ அந்த நல்லாட்சியை நாட்டைவிட நாற்காலியே முக்கியம் என்று சிந்தித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய காரணத்தால் 2019இல் நல்லாட்சி அரசாங்கம் மீது ஏற்பட்ட காழ்ப்புணர்வினாலும் இதன் பின்னர் ஏற்பட்ட குண்டு வெடிப்பினாலும் ராஜபக்சக்களால் மாத்திரமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என்றும் இஸ்லாமியத் தீவிரவாதம் நாட்டை விழுங்கிவிடும் என்ற மாயை உருவாக்கப்பட்டதாலும் அறுதிப் பெரும்பான்மையுடன் ராஜபக்சக்களால் மீண்டும் ஆட்சிபீடம் ஏறமுடிந்தது.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கிவிடும் என்ற ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டதன் விளைவே ராஜபக்சேக்களே நாட்டின் மீட்பர் என்ற மாயத்தோற்றம் மக்கள் மனதில் குடிகொண்டிருந்தது. அந்த மாயத்தோற்றமே ராஜபக்சேக்கள் மீண்டும் மகுடம் சூட்டிக்கொள்ள வழிவகுத்தது. அதேவேளை கோட்டும் சூட்டும் போட்டு வெயிலிலும் திரியும் ரணில், யானை பலம் கொண்டிருந்த ஐக்கியமில்லாத தேசியக் கட்சியை சுய லாபத்திற்காக பலிகடா ஆக்கினார்.
இரண்டாம் ராஜபக்ச ஆட்சியைக் கொண்டுவருவதில் பெரும்பான்மைச் சிங்கள மக்களது வாக்குகளே பிரதான காரணியாகச் செயற்பட்டது என்பதை “நான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி“ என்று போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள கோட்டாபய ராஜபக்ச வெளிப்படையாகக் கூறியதான் மூலம் நிரூபணமாகியது. இனவாதத்துடன் இணைந்து நாட்டில் `வியத் மக ` என அழைக்கப்பட்ட சிங்கள பௌத்த கற்றோர் குழாத்தின் வழிகாட்டலும் பௌத்த விகாரைகளை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கு எதிரான அரசியல் பிரசார நடவடிக்கைகளும் மக்களின் வாக்குகளை அவருக்கு அள்ளிக் குவித்தன.
இத்தாலி போன்ற மேற்குலக நாடுகளில் வாழும் சிங்கள மக்கள் சார்டட் விமானங்களைப் பதிவு செய்து வாக்களிப்பதற்காக இலங்கைக்கு வந்தனர். அசைக்க முடியாத ஒரு பெரும்பான்மையுடன் சிறுபான்மையினக் கட்சிகளின் பேரம் பேசல்களின் அழுத்தங்கள் முற்றிலும் இன்றி தனிச் சிங்கள ஆட்சியாக அந்த ஆட்சி அமைந்திருந்தது. மிகவும் பலம் பொருந்திய இந்த அரசாங்கத்தை அடுத்துவரும் தசாப்தங்களுக்கு அசைக்கவே முடியாது என்று வெகுசன அபிப்பிராயம் நிலவியது. ஆனால் அத்தனையும் தவிடுபொடியாகி இரண்டே ஆண்டுகளில் எந்த மக்கள் சிம்மாசனத்தில் இருத்தினார்களோ அவர்களே இப்போது வீட்டுக்குப் போ என்கிறார்கள் வேறுசிலர் வீட்டுக்கு அல்ல சிறைக்கு அனுப்ப வேண்டும் என்கிறார்கள் மொத்த திருடர் கூட்டத்தையும் பிடிக்க வேண்டும் என்கிறார்கள். அரசாங்கமும் ஜனாதிபதியும் கூண்டோடு ராஜினாமா செய்யவேண்டும் என்கின்றனர். ராஜபக்ஷர்களால் வீடுகளில் இருக்க முடியவில்லை. அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி ஊரடங்குச் சட்டமிட்டு சமூக ஊடகங்களைத் தடை செய்து ஏற்பட்டுவரும் எதிர்ப்பலையைச் சமாளிக்க ராஜபக்ச அரசு முயன்றாலும் மக்கள் அலை வேகமாக வீசிவருகிறது.
எந்த ஒரு அரசியல் பின்புலங்களும் இன்றி மக்கள் தாமாகவே கைக்குழந்தைகளுடன் வீதியில் இறங்கி எதிர்ப்பு கோஷம் இடுவதைக்காண முடிகிறது. கைது செய்யப்பட்டவர்களை மீட்க நூற்றுக் கணக்கில் வக்கீல்கள் நீதிமன்றங்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் இலவசமாக ஆஜராகின்றனர். இது முன்பொரு போதும் காண இயலாத ஒன்று. அரசியல் வாதிகளால் வெளியில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் இருக்க முடியாதுள்ளது. அவ்வாறு நிலைமை பாதகமாக மாறுவதைக் கண்டு ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்களும் அவர்தம் தொண்டரடிப்பொடிகளும் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு விமானம் ஏறுவதைக் காண முடிகிறது.
அவுஸ்திரேலியா நியூஸிலாந்து இத்தாலி இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் வாழும் இலங்கையர்கள் ராஜபக்சேகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். முன்னர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகையில் அது பிரிவினை வாதம், விடுதலைப் புலிகளின் தூண்டுதல், நாட்டை துண்டாடும் முயற்சி, வெளிநாட்டுச் சதி என்று இதே ஆட்சியாளர்கள் கூரைமேல் ஏறிக் கூவினர்.
அத்தோடு அமைச்சரவை ராஜினாமா செய்தது. ஜனாதிபதியோ பிரதமரோ ராஜினாமாவைப் பற்றிப் பேசவில்லை. மாறாக சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தூண்டில் வீசப்பட்டது. ஆனால் அதற்குச் சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை. அரசாங்க அலுவல்களைக் கவனிக்க நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயினும் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி 24 மணிநேரத்தில் தமது பதவியை இராஜிநாமா செய்திருக்கிறார். நிதியமைச்சின் செயலாளரும் மத்திய வங்கி ஆளுநரும் பதவி துறந்துள்ளனர். இந்தப் பதவிகளை நிரப்ப சிலரது பெயர்கள் அடிபடுகின்றன. இப்போதைய நெருக்கடி நிலையில் மக்கள் முழுமையான ஆட்சி மாற்றத்தையே விரும்புவது தெரிகிறது.
ஆனால் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பதவி துறப்பது இலகுவில் நிகழக் கூடியதல்ல. சிலவேளை அது இப்போதுள்ள பிரச்சினையை இன்னமும் மோசமாக்கக் கூடும். மாறாக அவ்விருவதும் தமது கதிரைகளைத் தக்க வைத்துக்கொண்டு இப்போது தமக்கு எதிராக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளித்து விட்டால் நிலைமையைத் தமக்கு சாதகமாக மாற்றி விடலாம் என நம்புவதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் நிதியமைச்சர் மத்திய வங்கி ஆளுநர், நிதியமைச்சுச் செயலாளர் ஆகிய மூன்று பதவிகளும் வெற்றிடமாகியுள்ளன. இந்த மூன்று பதவிகளுக்கும் நியமிக்கப்பட உள்ளவர்கள் எவராயினும் பொதுநிதியியல் பொருளியல் முகாமைத்துவம் சர்வதேச பொருளியல் கணக்கியல் போன்ற துறைகளில் பாண்டித்தியமும் அனுபவமும் மிக்கவர்களாக இருத்தல் அவசியம்.
ஏழு மூளைகளைக் கொண்ட ஓருவராக புகழப்பட்ட பசில் ராஜபக்ஷ போன்ற ஒரு அரைவேக்காட்டை நிதியமைச்சராக நியமிப்பதன் மூலம் இலங்கை தனது இயலாமையையே மீண்டும் வெளிப்படுத்தக் கூடும். அத்தகைய ஒரு திறமைசாலி பாராளுமன்றத்திலும் தேடிப்பிடிக்க முடியாதிருக்கக் கூடும். இத்தகைய சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்கே பட்டியல் எம் பி பதவிகள் உள்ளன. அவற்றைப்பயன்படுத்தி அனுபவமுள்ள பொருத்தமான ஒருவரை அப்பதவிக்கு நியமிக்கலாம். அலிசப்ரி ஒரு சிறந்த வக்கீல் ஆனால் நிதியமைச்சராக பொருத்தமானவரல்ல.
ஒரு அவசர சத்திரசிகிச்சைப்பிரிவு எவ்வாறு இயங்குமோ அவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை இயக்கிச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும். பொருளாதார நெருக்கடிகளோடு அரசியல் நெருக்கடிகளும் சேர்ந்து கொள்ளும் போது நிச்சயமற்ற தன்மைகள் மேலும் தீவிரமடைந்து நாட்டை இலகுவில் மீளமுடியாத பாரிய வீழ்ச்சிக்குள் இட்டுச்சென்று விடும்.
எந்த மக்களின் வலிகளுக்காக எந்த மக்கள் இப்போது மக்கள் விதியில் இறங்கிப்போராடுகிறார்களோ அந்த வலிகள் ராஜபக்ச குடும்பமும் அவர்களது வால்களும் பதவி நீக்கப்படுவதன் மூலம் மாத்திரம் தீர்ந்துவிடாது. இப்போதைய நிலையில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. மாறாக நாட்டில் இருந்து அவர்கள் செய்யக் கூடாததை செய்தமைக்காகவும் செய்யவேண்டியதைச் செய்யாமல் விட்டமைக்காகவும் பொறுப்புக் கூற நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.
ஆட்சி மாற்றம் ஒன்றுக்காகத் தேர்தலுக்கு செல்வது மிகவும் செலவு கூடிய ஒன்று. இப்போதைய நிதிநிலைமையில் அது பொருத்தமானதாகவும் இருக்காது. தொடர்ந்து கடன்களை நம்பி வாழ்க்கை நடத்தும் இலங்கையின் பொருளாதாரத்தை வெளிநாட்டில் வாழம் இலங்கையர்களால் தூக்கிநிறுத்த முடியும். ஆனால் இங்கு வாழம் இனவாதிகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களை பயங்கரவாதிகள் என அர்த்தம் கற்பிக்கின்றனர். எனவே வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் பணமோ முஸ்லிம்களின் பணமோ நாட்டிற்குள் முதலீடாக வருவதை பயங்கரவாத பணமாகப் பார்க்க இந்த நெருக்கடியான நிலையிலும் முயல்கின்றனர்.
இலங்கையை இப்போதைய நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்ற இந்தியாவால் முடியும். 10 தொடக்கம் 15 பில்லியன் டொலர்கள் என்பது சுமார் 600 பில்லியன் டொலர் ஒதுக்குகளைக் கொண்டுள்ள இந்தியாவுக்குப் பெரிய தொகை அல்ல. ஆனால் அது அவ்வளவ இலகுவான முடிவாக இருக்காது.
எனினும், ஒரு முக்கிய விஷயத்தை மனதில் கொள்ளவேண்டும். இப்போதுள்ள அரசு பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் பெரும்பான்மை சிங்கள மக்கள், வரும் காலத்தில் தமிழர்களுக்கு சர்வதேச அனுசரணையுடன் அரசியல் தீர்வுவொன்றை எட்ட முயற்சிகள் எடுக்கப்படும் சமயத்தில், அப்படி எந்த தீர்வும் வழங்கக் கூடாது என்று இதைவிடத் தீவிரமான ஆர்ப்பாட்டத்தில் இறங்குவார்கள் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை.
இப்போது நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அந்த மீட்பர் யார் என்பதே இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வி.
கட்டுரையாளர்கள் பற்றி:
சிவா பரமேஸ்வரன்: மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி: பேராசிரியர். பொருளாதார பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்.