கதிரோட்டம் 08-04-2022
இலங்கையின் அதிகார பலத்தையும் இராணுவம், கடற்படை போன்ற பாதுகாப்புப் படைகளை தங்களைப் பாதுகாக்கவும் தங்களுக்குச் சார்பான நீதிபதிகளை உயர் நீதிமன்றங்களில் நியமனம் செய்து நீதித்துறையை தமது கட்டுப்பாடுகளுக்குக் கீழ் வைத்திருந்தும் தான் செய்ய எண்ணித் திட்டமிட்ட பாதகமான செயல்களை அரங்கேற்றிய ராஜபக்ச சகோதர்களின் ‘ராஜபக்ச ராஜ்யம்’ தனது உண்மையான முகத்தை திரையை விலக்கிக் காட்டிவிட்டது.
ஜனாதிபதி. பிரதமர். நிதி அமைச்சர் மற்றும் முக்கியமான அமைச்சுக்களை தங்கள் வசம் வைத்திருந்த இந்த ‘ராஜபக்ச ராஜ்யம’அமைத்திருந்த சகோதரர்கள் மற்றும் புத்திரர்கள் நாட்டு மக்களை காட்டுவாசிகள் போல் ஆக்கிவிட்டார்கள். ஆனால் அவர்கள் நால்வருக்கு மேல் எண்ணிக்கைக் கொண்டவர்கள் உலகின் இராஜாக்கள் ஆகிவிட்டார்கள்.
இலங்கை அரச இயந்திரம் ஸ்தம்பிதம் அடையும் நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்துள்ள இந்த ‘ராஜபக்ச ராஜ்யம்’ என்னும் கூட்டுக் கொள்ளையர்கள் பற்றி இலங்கை என்னும் மாங்கனித் தீவே கொந்தளித்து எழுந்து நின்று போராடத் தொடங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்த அழகிய நாட்டின் வளங்கலிருந்து கொள்ளையடிக்கப் பெற்ற 19.9 பில்லியன் டொலர்கள் தொடர்பிலும், ராஜபக்ச ராஜ்யம் என்னும் கூட்டுக் கொள்ளையர்களுக்குள் அடங்கும் ராஜபக்சக்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அமெரிக்காவில் வைத்துள்ள பெரும் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தி இலங்கைக்கு சொந்தமான சொத்துக்களை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க தூதரகத்திடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த கைங்கரியத்தை முன்வந்து ஆற்றியவர்கள் சட்டத்துறைகளில் முன்னின்று உழைத்து வரும் சமூக அக்கறை கொண்டவர்கள் என நம்பப்படுகின்றது.
பேரணியாக அமெரிக்க தூதரகத்தை அடைந்த குழுவினர் அமெரிக்க தூதரகத்திடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர். இந்த மனுவில், உலகளாவிய நிதி ஒருமைப்பாட்டு அறிக்கையின்படி 2005 மற்றும் 2013 க்கு இடையில் 19.9 பில்லியன் டொலர்கள் இலங்கையிலிருந்து கடத்தப்பட்டதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சரியான புள்ளி விபரங்கள் இந்த மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்டுகின்றது.
இந்த ‘பெருங் கொள்ளையை’ ஆட்சியில் இருந்தவர்கள் நடத்திய ‘பெருமைக்குரியவர்களாகத் திகழும்’ ‘ராஜபக்ச ராஜ்யம்’ என்னும் இந்த அணி இலங்கையின் அரசியல் மற்றும் ஆட்சி செய்யும் வரலாற்றில் செய்த மாபெரும் குற்றத்திற்காக என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே
தற்போது புத்திஜீவிகள் ஆராய்ந்து வரும் விடயமாகும்.
இந்த மனு தயாரிக்கும் முயற்சியில் ரூடவ்டுபட்ட குழுவினர் மேற்கொண்ட ஆய்விகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.9 பில்லியன் டொலர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்படுகின்றன, மேலும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா தலைமையிலான அரசாங்கம் தொடக்கம் மற்றும் ராஜபக்சக்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அமெரிக்காவில் பெரும் சொத்துக்களை வைத்துள்ளனர். இவை அனைத்தும் இலங்கையின் அரச வளங்களைச் சுரண்டிச் சேர்த்வை எனபது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில் கூட்டாட்சி தேவை என்றும் கோரப்பட்டுள்ளது. அவர்கள் எப்படி சொத்து வாங்கினார்கள் என்பது குறித்து விசாரணை செய்து இந்தச் சொத்துக்கள் இலங்கையில் இருந்து திருடப்பட்ட செல்வத்தின் மூலம் சம்பாதித்தவை என்பது உறுதியானால், அந்த சொத்துக்களை தடை செய்து இலங்கைக்கு செல்வத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மனுவைக் கையளித்த குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
2014ல் இந்த குடும்பம் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தது என்று சொன்னோம், ஆனால் பின்னர் எங்களை துரோகிகள் என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால் இன்று ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை எமது நாட்டுக்கு வழங்க வேண்டும் என்பதே முழு நாட்டின் கோரிக்கையாக உள்ளது.
நாட்டு மக்களின் பிள்ளைகளின் சொத்துக்களை அபகரித்துவிட்டு, அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று சுகமாக வாழ ராஜபக்சக்களை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள இந்த குழுவினரின் கருத்துக்கள் உலகெங்கும் பரப்பப்பட வேண்டும் என்றே நாம் கருதுகின்றோம்.
நாட்டின் சொத்தை கொள்ளையடித்தவர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஜனாதிபதியும் பிரதமரும் ஆகிய ராஜபக்ச சகோதரர்கள் இருவரும் பதவிகளை விட்டு வெளியேற முடியாது என்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றம் அரசியலமைப்பு ரீதியாக அவர்களை நீக்க முடியும் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு நின்று சாதிக்க முடியும் என்று நாம் நம்புகின்றோம் நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப முடியும்.
மேலும், கல்வியில் சிறந்து விளங்கும் இந்த நாட்டில் உள்ள அனைத்து திறமையான தொழில் வல்லுநர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைவரும் இந்த நாட்டைக் காப்பாற்ற முன்வரவேண்டும் என்றும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.