இலங்கையில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்கள் இம்மாத இறுதிக்குள் காலியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை சந்திக்காதப் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எரிப்பொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத நிலைப் போன்றவற்றால், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றன. இலங்கையில் பொதுபோக்குவரத்திற்கும், அனல் மின்நிலையங்களுக்கும் டீசல் பயன்படுத்தப்படுகிறது.
அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், நவம்பர் மாதம் முதல் டீசலை இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்து உதவிக்கரம் நீட்டியது. ஏற்கனவே, இலங்கைக்கு இந்தியா டீசலை அனுப்பிய நிலையில், வரும் ஏப்ரல் 15, 18, 23 ஆகிய தேதிகளில் மேலும் மூன்று கப்பல்களில் டீசல் அனுப்ப உள்ளது. எனினும், தேவை அதிகரிப்பால், இலங்கையில் டீசல் நிலையங்கள் இம்மாத இறுதிக்குள் வறண்டுபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.