(09-04-2022)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை முதல் காலிமுகத்திடல் வளாகத்தில் மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பெருந்திரளான இளைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையிலேயே காலிமுகத்திடலை அண்மித்த பகுதியிலுள்ள ஜனாதிபதி செயலகம், போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக விண்ணைப் பிளக்கும் கோஷங்களுடன் சுலோகங்களையும் அவர்கள் தாங்கி நிற்கின்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக கொழும்பு நகரிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.