வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே ஒருவரின் கனவுகளுக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து காட்டும் விதமாக 56 வயது பெண் ஒருவர் அனைவரையும் வியக்கவைக்கக்கூடிய செயல் ஒன்றை செய்துள்ளார். கேரளாவை சேர்ந்த மினி என்கிற பெண் பைக் ஒட்டுதிலும், பயணம் செய்வதிலும் மிகுந்த ஆர்வமுடையவர். இந்த பெண் அவரது 500cc புல்லட்டில் டெல்லி முதல் லே நகரம் வரை சுமார் 2400கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார், அந்த இடத்தை அடைய அவருக்கு 18 நாட்கள் ஆனது. இந்த வயதில் இவ்வளவு தூரங்கள் ஒரு பெண் பைக்கில் பயணம் செய்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மினி தனது சிறு வயதிலிருந்தே அவரது சகோதரர்களுடனேயே வளர்ந்தவர், பெரும்பாலான நேரத்தை அவர்களுடனேயே கழித்துள்ளார். சிறுவயதில் அவர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டுவது, நீண்ட தூரம் சைக்கிளில் பயணம் செய்வது போன்றவற்றை செய்து வந்துள்ளார். பின்னர் கொஞ்சம் வளர வளர அவரது ஆர்வம் பைக் ஓட்டுவதில் இருந்துள்ளது, அதனையடுத்து பைக்குகளை ஓட்ட தொடங்கினார். இவரது கனவிற்கு குடும்பத்தினர் தடையேதும் போடவில்லை, மினியின் பெற்றோர்கள், சகோதரர்கள், கணவன் மற்றும் குழந்தைகளில் என அனைவரும் இவருக்கு ஆதரவு அளித்தனர்.
குடும்பத்தினரின் ஆதரவை தொடர்ந்து இவர் கனமான பைக்குகளை ஓட்ட தொடங்கினார். இவரது கணவர் புல்லட் 350 பைக்கை எவ்வாறு ஓட்ட வேண்டும் என்று கற்று கொடுத்ததிலிருந்து அவருக்கு பைக் ஓட்டுவதில் மேல் இருந்த மோகம் மேலும் அதிகரித்து இருக்கிறது. இதுவே இவரை டெல்லி முதல் லே வரை பயணம் செய்ய உந்துதலாக இருந்துள்ளது, இந்த நீண்ட நெடிய பயணம் தற்போது இவரது வாழ்வில் சிறந்ததொரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இந்த பயணத்திற்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக இவர் பயிற்சி எடுத்துள்ளார், முறையான பயிற்சி பெற்ற பின்னரே அவர் பாதுகாப்பாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த செயலால் தற்போது இவர் பல பெண்களுக்கும் முன் உதாரணமாக மாறியிருக்கிறார்.