தமிழகத்து தமிழ்ச் சினிமாவில் கோடிக் கணக்கில் சம்பளத்தை கதாநாயர்கள் ஈட்டிக் கொள்ளும் நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கின்றது.
ஆனாலும் அந்த திரைப்படங்களைப் பார்த்தும் ரசித்தும் கொண்டாடும் இலட்சக் கணக்கான ஈழத்தமிழ் ரசிகர்கள். தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இருந்தாலும். எமது ஈழத் தமிழ்ச் சினிமாவை தட்டி எழுப்பும் எண்ணம் அவர்களிடத்தில் தாழ்ந்துதான் காணபபடுகின்றது.
ஈழத் தமிழ்ச் சினிமாவை மீண்டும் உயர்த்தி விடவும் அதற்காக ஒரு திரைப்படத்துறையை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் அவ்வப்போது முன்வந்து குரல் எழுப்பி நின்றாலும். அந்தக் குரல்கள் சில நாட்களிலேயே அடங்கிவிடுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்து திரைப்படங்களுக்கு இணையாக ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும். திரையிடப்படுகின்ற ‘ தமிழ்த்திரைப்பட விழாக்கள்’ பல நாடுகளில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. அவற்றில் பல விருதுகளைத் தட்டிக் கொண்ட ஈழத்தவர்களின் திரைப்படங்களுக்காக நாம் கைகளை தட்டிப் பாராட்டுக்களை மட்டும் வழங்கியிருந்தோம்.
ஆனால். தற்போது எம்மிடத்தில் ஒரு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிவர்களாக நாங்கள் உள்ளோம் என்பதை நாம் அறிய வேண்டும்.
இலங்கை என்னும் மாங்கனித் தீவின் மறுபாதி வடக்கில். ஈழத் தமிழ்ச் சினிமா எழுந்து நடக்கத் தொடங்கியுள்ளதுதை உணர்த்தும் வண்ணம் அங்கு தயாரிக்கப்பெற்ற ராஜ் சிவராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘ புத்தி கெட்ட மனிதர் எல்லாம்’ என்னும் திரைப்படம் கனடாவின் ஸ்காபுறோ நகரில் திரையிடப்பட்ட பின்னர் எழுந்துள்ள ஆரோக்கியமான விமர்சனங்களே. தற்போது எம்மிடத்தில் ஒரு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்திய வண்ணம் உள்ளன.
திரைப்பபடத் தயாரிப்பு மற்றும் இயக்கம் போன்ற துறைகளில் திரைப்படக் கல்லூரிகளில் கற்றுத் தேர்ந்துள்ள ராஜ் சிவராஜ் மற்றும் யாழ்ப்பாணத்து தோழர்களின் கடினமான உழைப்பில் வெளிவந்துள்ள புத்தி கெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படம் பலரை யோசிக்கச் செய்துள்ளது என்றால் அது மிகையான வார்த்தைகள் அல்ல..
யாழ் மண்ணின் இயக்குனர் ராஜ் சிவராஜ் அவர்கள் கனடாவின் ரிவிஐ தொலைக் காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளவாறு ஈழத்திலும் புலம் பெயர் நாடுகளிலும். ஈழத் தமிழ்ச் சினிமா தயாரிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் இணைந்து கரம் கோர்த்து ‘அனைத்துலக தமிழ்த் திரைப்படத்துறை’ ஒன்றை உருவாக்குவதன் மூலம் இருபகுதியினரும் பல பயன் தரும் வெற்றிகளை ஈட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை தந்துள்ளது இந்த புத்தி கெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படம்…….
இந்த மாற்றத்தை சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் மனதிற் கொண்டு மேலும் பல மாற்றங்களைக் காண காத்திருக்க வேண்டும்.
–மலையன்பன் – Canada