இலங்கையின் புதிய அமைச்சரவையில் திருடர்களுடன் சேர்ந்து நாம் பணியாற்ற மாட்டோம். அமையப்போகின்ற புதிய அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்தில் எவருக்கும் இடம் வழங்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று இலங்கை அமைச்சரவையின் முன்னாள் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர எனத் தெரிவித்துள்ளார்.
சில நாட்களில் அமைக்கவுள்ள அமைச்சரவையில் திருடர்களுக்கு இடமில்லை, திருடர்களுடன் நாம் உட்கார மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சி என்ற வகையில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு சபையினூடாக பிரதமரை தெரிவு செய்ய முற்பட்டோம்.
வீதி அமைப்பதில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ராஜபக்ஷர்கள் ஈடுபடுகின்றனர். இந்த பழைய விளையாட்டுக்களை மீண்டும் இங்கே வைத்துக்கொள்ள வேண்டாம்.
விலை கொடுத்து வாங்கி நாளை அமைக்க போகும் 113 எம்பிகளை கொண்ட அரசால் மக்களிடம் முகம் கொடுக்க முடியாது. நாளை முதல் நாமும் வீதிக்கு இறங்குவோம் என தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.
இதேவேளை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீவிரமாக ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்பனை பொருள் அல்ல. ராஜபக்ஷர்களின் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.