இலங்கையில் தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்திலே எம்மத்தியில் தோழமையுணர்வு மேலோங்கவேண்டும் என மக்களிற்கு அழைப்பு விடுப்பதாக இலங்கையின் கல்விமான்களும் புத்திஜீவிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.அத்துடன் அவர்களில் 250 புத்திஜீவிகள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி கையெழுத்திட்ட 250 பேரில் கனடாவின் மெக் மாஸ்டர் பல்கலைக்கழகம். இலண்டன் பல்கலைக் கழகம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பேராசிரியர்களும் கூட்டாகக் கையெழுத்திட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து பேராசிரியர் அறிவழகன் என்பவரும் கனடாவின் மெக் மாஸ்ட்டர் பல்கலைக் கழகத்திலிருந்து ருசினி அபயகோன் என்பவரும் கனடாவின் புரொக் பல்கலைக் கழகத்திலிருந்து சச்சின் அபேயசேகர என்னும் பேராசிரியரும் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ள மேற்படி 250 புத்திகளும் பின்வரும் விபரங்களை உள்ளடக்கி தங்கள் சம்மதத்துடன் கையொப்பமிட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எங்கள் எல்லோருக்கும் நியாயபூர்வமான எங்கள் எல்லோருக்கும் நியாயமான ஜனநாயகமான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் பெண்கள் குழுக்கள்இ ஒதுக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட அதிருப்திக்குள்ளான சமூகங்கள் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு இயக்கத்தின் உருவாக்கத்திற்காக நாம் அழைப்பு விடுகின்றோம்
எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இலங்கையை சேர்ந்த 250 கல்விமான்களும் புத்திஜவீகளும் சமூக செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்களும் கையெழுத்திட்டு கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
காலனித்துவத்திற்குப் பிற்பட்ட எமது வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராதவாறான சம்பவங்களை இன்று நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம். ஜனநாயக உணர்வு மேலீட்டின் வியப்பூட்டும் வெளிப்பாடாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தாமாகவே வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மாற்றத்துக்கான அவர்களது கோஷங்கள் உரப்புடனும், சக்தியுடனும், பிரமிக்க வைக்கும் வகையிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பொது மக்களின் கோபமெல்லாம் ஒரு பரம்பரைசார் அரசியல் பேரரசு ஒன்றினை உருவாக்கியிருக்கும் ராஜபக்சர்கள் என அழைக்கப்படும் சிறிய உயர் குழாத்தினர் மீதும், பாராளுமன்றத்தினுள்ளும், வெளியிலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அவர்களின் நெருங்கிய சகாக்கள் மற்றும் கூட்டாளிகள் மீதும், அவர்களுக்கு ஒத்தாசையாகச் செயற்பட்ட வியாபாரத் தரப்பினர் மீதும் திரும்பியுள்ளது.
கடந்த சில தசாப்தங்களில், எமது நாடு கண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடிகளிலே ஒன்று மக்களை வீதிகளுக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. அந்த மக்கள் இப்போது ஜனாதிபதியினை நோக்கி, பதவியினைத் துறந்து விட்டு வீடு செல்லுமாறு கோருகின்ற மாற்றத்துக்கான இக் கோரிக்கைகள் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தினை மாத்திரமல்லாது, அரசாட்சியின் பல வடிவங்களையும் அப்புறப்படுத்துவதுடன் தொடர்புபட்டுள்ளன. ஆர்ப்பாட்டம் செய்வோர் கடினமான பல கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
எமது பொருளாதாரக் கொள்கைகள், நீதித் துறையின் செயற்பாடுகள், சமூகங்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் இந்த விடயங்களுடன் தொடர்புபட்ட ஏனைய விடயங்கள் போன்றன இந்தக் கேள்விகளின் கருவாக அமைந்துள்ளன. பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பதிலே மக்கள் உறுதியாக உள்ளனர். உணவு, மருந்து, பால் மா, மின்சாரம், எரிவாயு (காஸ்), எழுதுபொருட்கள் போன்ற அத்தியாவசிய பண்டங்கள் போதுமான அளவிலே தமது குடும்பங்களுக்குக் கிடைக்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
சூறையாடப்பட்ட மக்களின் பணம், மீளப்பெறப்பட்டு மக்களிடையே பகிரப்பட வேண்டும் எனப் பல சமூகங்கள் கோரி வருகின்றனர். இன மத ரீதியிலான பிரிவினையைத் தூண்டும் அரசியல் ஒழிக்கப்பட்டு, கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும், வன்முறைகளுக்கும் பொறுப்புக் கூறப்பட வேண்டும் எனப் பலர் கோருகின்றனர்.
சர்வாதிகாரத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நாடு தமக்கு வேண்டும் என மக்கள் ஐக்கியத்துடன் குரல் எழுப்புகின்றனர். அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் பாலினம் சார் நியாயங்களையும், நீதியினையும் கோரும் மக்களின் இந்த பல்குரற் கோஷங்கள் கேட்கப்பட வேண்டியவை; அவற்றுக்குரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
பாரியளவில் கடன்பட்டிருக்கும் எமது அரசாங்கம், அத்தியாவசிய இறக்குமதிகளைப் பெற்றுத் தரத் திராணியற்றுப் போனமை நாட்டிலே ஏற்கனவே உருவாகி இருந்த பொருளாதார நெருக்கடியினை மேலும் சிக்கலாகியது. இந்தச் சூழலிலேயே போராட்டங்கள் வெளிக்கிளம்பின. இரசாயன உரங்களின் இறக்குமதியினைத் தடை செய்தல் போன்ற அரசாங்கத்தின் தான் தோன்றித்தனமான முடிவுகள் விவசாய உற்பத்தியினை மோசமாகப் பாதித்தன. உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் பற்றாக்குறைகளும், அபரிமிதமான விலை அதிகரிப்புகளும் மக்களினை சுமைக்குள்ளாக்கின. இந்த நிலைமைகள் உழைக்கும் வர்க்கத்தினர், கீழ்மட்ட வர்க்கத்தினர், பலவகைகளிலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் மீது பாரதூரமான தாக்கங்களை உருவாக்கின. இவர்களின் நிலைமை கோவிட்- 19 நோய்த்தொற்றின் காரணமாக மேலும் அபாயத்துக்கு உள்ளாகியது.
இந்த நெருக்கடியின் தோற்றுவாய்கள் அரசியலுடன் தொடர்புபட்டவை. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சர்வாதிகார அரசாங்கங்களின் கொள்கைகளே இன்றைய நெருக்கடிக்குக் காரணங்களாக அமைகின்றன. இவ்வாறான ஆட்சி முறையானது, சிங்கள- பெளத்த பெரும்பான்மைவாத ரீதியிலான அணிதிரட்டல்களின் ஊடாகப் பலப்படுத்தப்பட்டு வந்தது. இந்தப் போக்கின் மிக அண்மைய வடிவங்களில் ஒன்றே கோவிட்டினால் இறந்த முஸ்லிம்களின் உடலங்கள் மீது கட்டாயத் தகனம் திணிக்கப்பட்டமை. சமூகத்தின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்காது, அதிகாரம் மிக்க, தொழில்முறைசார், இராணுவப் பாங்கான குணாதிசாயங்களைக் கொண்ட செல்வந்த ஆண்களினால் நாடு முன்னடத்தப்பட வேண்டும் என்ற கருத்தியலின் மீது இந்த ஆட்சி முறையானது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இவ்வாறான கருத்தியல்கள் விளிம்புநிலை மக்கள் மீது பாகுபாடு காண்பிக்கும் அதேவேளை, பன்மைத்துவத்துக்கான சந்தர்ப்பங்களையும் மட்டுப்படுத்தியுள்ளன. இந்தக் கருத்தியல்கள் கூடியளவிலான இராணுவமயமாக்கலினையும், சமத்துவமின்மையினையும், அநீதியினையும் உருவாக்கியுள்ளன. அவை ஜனநாயகபூர்வமான கூட்டு நடவடிக்கைகளுக்கான வெளியினை மட்டுப்படுத்தி, அதற்குப் பதிலாக, மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையும், மக்கள், அரசியல்வாதிகளின் தயவில் தங்கியிருக்க வேண்டியிருக்கின்ற அரசியற் கலாசாரத்தினையும் உருவாக்கியுள்ளன.
இன்றைய நெருக்கடியினைத் தீர்க்கும் வகையிலே முன்வைக்கப்படும் தீர்வுகள் நிலைமையினை மேலும் மோசமாக்காது இருப்பது மிகவும் அவசியம். பிரச்சினைக்குத் தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு ஒன்று இடம்பெறும் என இன்று பேசப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தினை மிகவும் உன்னதமான தீர்வாக நோக்குகின்ற நவதாரளவாத பொருளாதாரச் சிந்தனை எல்லா அரசியல் நிலைப்பாடுகளினை வைத்திருப்போர் மத்தியிலும் வேரூன்றி உள்ளது. எனினும் இந்த நெருக்கடிக்கு எம்மை இட்டுச் சென்றதே பல தசாப்தங்களாக நாம் பின்பற்றி வரும் நவ தாராளவாதக் கொள்கைகள் தான் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும். நவதாராளவாதக் கொள்கைகள், சமூகம் மீதான அக்கறைகளை விடுத்து, தனிநபர் சொத்துடைமைகளையும், உரிமைகளையும், சுதந்திர சந்தைகளையுமே ஊக்குவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் போக்குவரத்து, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகள் மோசடிகளுக்கும், தனிப்பட்ட இலாபமீட்டல்களுக்குமான களங்களாகக மாறிவருவதோடு, அரசாங்கங்கள் இவ்வாறான நவதாராளவாதப் போக்குகளை ஆதரிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறான சேவைகளினை அரசு மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாது செய்யப்பட்டுள்ளது, அதேபோல, இந்த சேவைகள் பொதுமக்களுக்கு உரியவை அல்ல என்ற நிலைப்பாடும் வளர்த்தெடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக அரசின் வகிபங்கானது நலிவடைந்துள்ளதுடன், சந்தைகளின் மாறுபாடுகளின் தாக்கத்தின் காரணமாக மக்கள் பாதிப்படைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமூக நலனுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதை நாம் கண்ணுற்றுள்ளோம். கட்டுப்பாடுகளின் நீக்கமும், தனியார்மயமாக்கலும் இன்று சாதாரணமாகிவிட்டன. தன்னிறைவுக்கு இட்டுச் செல்லும் உற்பத்தியினை வளர்த்தெடுப்பதனை விடுத்து, வெளி நாட்டு வேலையாட்களின் சுரண்டப்பட்ட ஊதியத்திலும், சர்வதேசக் கடனிலும் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு இடம்பெறும் பட்சத்தில், மேற்கூறியவற்றை நாம் மனதில் கொள்ளுதல் அவசியம்.
பொருளாதார நெருக்கடிக்கான குறுகியகாலத் தீர்வாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மீள்பகிர்ந்தளிப்பு மற்றும் கூடிய சமத்துவத்தினை நோக்கிச் செல்லும் வகையில், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் மீதான செல்வ வரிகள் உள்ளங்கடலான அதிகரித்துச் செல்லும் நேரடி வரியினை நாம் கோர வேண்டும். இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவிலே குறைக்கப்பட வேண்டும் என்பதனையும், சுகாதாரம், கல்வி, மின்சாரம், நீர் விநியோகம், போக்குவரத்து போன்ற முக்கியமான பொதுச் சேவைகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அவற்றினை வலிமைப்படுத்த வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும். காணியற்றோர் வீடுகளை அமைப்பதற்கும், விவசாயத்தினை மேற்கொள்ளுவதற்கும், வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்கு உதவும் வகையில் காணி நிலங்கள் வழங்கப்பட வேண்டும்.
இன்றைய இந்த ஜனநாயகமான தருணத்தினை நாம் விரிவுபடுத்தி, திட உருவாமாக்கி, நிலைத்திருக்கக் கூடிய ஓர் அரசியல் செயற்பாடாக மாற்றியமைக்க வேண்டும். நீண்ட காலத்திலே கட்டமைப்பு மாற்றங்கள் உருவாகும் வகையில் நாம் எமது கோரிக்கைகளை முன்னிறுத்த வேண்டும். பொதுப் பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள் வாபஸ் பெறப்பட வேண்டும். இராணுவத்திற்கான நிதியைக் குறைத்து, இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை விடுவித்து, இராணுத்தினரைப் படைமுகாம்களுக்குள் மட்டுப்படுத்தி, இராணுவமய நீக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். மையங்களிலிருந்து விளிம்புகளை நோக்கி அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை, அதிகாரத்தை ஒரு மையத்தில் குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 20ஆம் சீர்திருத்தம் போன்றவை ஒழிக்கப்பட வேண்டும். மாறாக, தீர்ப்பாயங்கள், சுயாதீன ஆணைக்குழுக்கள், சுயாதீன நீதித்துறை போன்ற வழிமுறைகள் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பன்மைத்துவம் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும்.
இன்றைய வரலாற்று முக்கியத்துவம் மிக்க தருணத்திலே, எம்மத்தியிலே தோழமையுணர்வு மேலோங்க வேண்டும் என மக்களாக நாம் அழைப்பு விடுக்கின்றோம்! எங்கள் எல்லோருக்கும் நியாயமான, ஜனநாயகமான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக, தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், பெண்கள் குழுக்கள், ஒதுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட, அதிருப்திக்குள்ளான சமூகங்கள் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு இயக்கத்தின் உருவாக்கத்திற்காக நாம் அழைப்பு விடுகின்றோம்.’
என்று தெரிவித்து அனைவரும் கையொப்பமிட்டுள்ளனர்.