நடராசா லோகதயாளன்: யாழ்ப்பாணம்
இலங்கையின் தெற்கில் தாம் தேர்ந்தெடுக்க ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற கோசம் வலுத்துவரும் நிலையில், நாளை முதல். வடக்கிலும் தலையெடுக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கட்சிகள் கட்டியம் கூறுகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக காலிமுகத் திடலில் வயது வித்தியாசம், பாலின பேதம், சமூக ஏற்றத்தாழ்வுகள், படித்தவர்கள் படிக்காதவர்கள் என் பல்தரப்பினர் அரசிற்கு எதிராக முன்னெடுத்துள்ள போராட்டம் ஓய்வதாகத் தெரியவில்லை.
நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று இவ்வளவு பெரிய போராட்டம் நடைபெற்றுவரும் வேளையில், தமிழர்கள் இந்த விடயத்தில் பாராமுகமாவுள்ளனர், அவர்களுக்கு பொருளாதர நெருக்கடி இல்லையா? போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. இதற்கு அதே ஊடகங்களில் தமிழர் தரப்பால் பதிலும் கூறப்படுகிறது.
இலங்கையில் நிலவும் கொடிய பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலை ஏற்றம், அத்தியாவசியப் பொருட்களிற்கான தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் தடை காரணமாக தெற்கிலே இந்த அரசை கொண்டுவந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றபோதும் ராஜபக்சவினரின் குடும்ப ஆட்சிக்கு எதிராக2010முதலே போராடி வந்த தமிழ் மக்கள் மௌனிகளாக அல்லது பார்வையாளர்களாக மட்டும் இருப்பது ஏன் என ஒரு தரப்பால் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இது தொடர்பில் இரண்டுபட்ட கருத்து இருந்தாலும் கோட்டபாயவின் ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்பதில் எந்த தமிழ் தேசியக் கட்சிக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஏனெனில் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் எனத் தெரிவிக்க எதற்கெடுத்தாலும் மாற்றுக் கருத்தை மட்டுமே கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ மகிந்த அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் ஒப்பமிட்டுவிட்டது.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், மக்கள் எழுச்சி வெற்றியிலே முடிய வேண்டும் என்றே தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலும் குறிப்பிட்டதோடு தெற்கில் மட்டுமல்ல வடக்கில் என்ன இடம்பெற வேண்டும் அவை எப்படி இடம்பெற வேண்டும. என வெள்ளிக் கிழமை இளைஞர்கள் கூடி ஆராய்கின்றனர். அதிலே நாமும் அழைக்கப்பட்டுள்ளோம் நிச்சயமாக பங்குகொள்வோம் அதே நேரம் நாளை மறுதினம் சனிக்கிழமை ஓர் போராட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதற்கும் எமது முழு ஆதரவு உண்டு என்றார்.
இன்று வெள்ளிக்கிழமை பகல் வீரசிங்கம் மண்டபத்தில் இளைஞர்களுடன் கலந்துரையாடல் நாளை போராட்ட ஆரம்பம் என வடக்கும் போர்கோலத்திற்கு பிள்ளையார் சுழி இடப்படுகின்றது.
இதேநேரம் அரசியல் தலைவர்களும் இளைஞர்களும் போராட தயாராகிவிட்டலும் மூத்தவர்களின் மனநிலையை அறியும் நோக்கில் 45 ஆண்டுகளிற்கும் மேலாக சாரதியாகத் தொழில் புரியும் யாழ்ப்பாணம் நாவந்துறையைச் சேர்ந்த 67 வயதையுடைய ஜோசப் பத்மநாதன் விபரம் தெரிவிக்கையில், வாகனங்களை வாடகைக்கு ஓடுவதற்கு ஒரு நாள்தொழிலிற்கு சென்றால் மறுநாள் வரிசையில் டீசலிற்காக காத்திருக்க வேண்டும் அதுவும் உட்சபட்சமாக 2 ஆயிரம் ரூபாவிற்கே டீசல் கிடைக்கும் 2 ஆயிரம் ரூபா என்றால் 11 லீற்றர் டீசல்தான் கிடைக்கும் இந்த 11 லீற்றருக்கு மட்டுமே மறெநாள் தொழில் புரியலாம்.
இதேநேரம் தெற்கில் போராட்டாம. அதிகரித்து வடக்கில் போராட்டம் இல்லை என்ற நிலமை தொடர்பில் கருத்துரைப்பதானால் இந்த ஜனாதிபதியையும் அரசையும் கொண்டு வந்தவர்கள்தான் விரட்ட வேண்டும். இந்த அரசு தொடர்பாகவும. அதனால. பட்ட அவலங்கள் தொடர்பிலும் நாமும் போராடினோம் அப்போது இவர்கள் எம்மைகண்டுகொள்ளவில்லையே என்றார்.
இதேநேரம் இது தொடர்பாக கொடிகாமத்தில் நீண்டகாலம் வர்த்தகத்தில் ஈடுபடும் இரத்தினேஸ்வரன் நகுலன் வயது 41 கருத்து தெரிவிக்கையில் நாம் பட்ட அவலங்கள், துன்பங்கள் எமக்கு படிப்பினையாக இருந்தாலும் அந்த அவலத்தை தந்தவனிற்கு எதிராக போராடும்போது நாமும் தோள் கொடுப்பதில் தவறு கிடையாது ஏனெனில் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது நாம் வாக்களிக்காமல் விட்டமையினால்தான் மகுந்த 2 லட்சத்திற்கும் குறைவான வாக்குகளால் வென்ற நன்றிக் கடனாக எம்மில் 2 லட்சம்பேர் மரணமடைந்தோ காணாமல்போகவோ காரணமாக இருந்தார் என்ற கருத்தும் உள்ளது அதனால் நாமும் போராடியே ஆக வேண்டும் என்றார்.
இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டம் திருவையாறு பகெதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபரான க.இரேசேந்திரம் தகவல் தருகையில்,1978 ஆம் ஆண்டு சிறிமாவின் இறக்குமதி தடையின்போது விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்த நான் இன்றுவரை அதனை கைவிடவில்லை. அதன் பின்பு 1983ஆம் ஆண்டு இனக் கலவரம், 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவ போர், 1990ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப் போராட்டம் ஆகிய காலத்தில் இவற்றைவிட உச்ச தடையை எதிர்கொண்டு பொருளாதார மீட்பிலும் பங்குகொண்டோம் அதனால் இவை எமக்கு புதிது கிடையாது.
இருப்பினும் தெற்கு மக்கள் எமக்கு இதே அரசு முன்னர் செய்த கொடுமை தொடர்பில் தமது போராட்டத்தில் குரல் கொடுப்பதும் தமிழர்கள் கூறும்போது அந்த வலி தெரியவில்லை தற்போது புரிகின்றது என்பதனை கூறும்போது வாழ்க்கையின் வட்ட தத்துவம் உணரப்படுகின்றது என்றார்.
இதேநேரம் நெடுங்கேணி கமக்கார அமைப்பின் தலைவரான பூபாலசிங்கம் தகவல் தெரிவிக்கையில், 1990ஆம் ஆண்டு எமது பகுதியில் விதிக்கப்பட்ட இறுக்கமான பொருளாதாரத் தடை, எரிபொருள் தடை, விவசாய உள்ளீட்டுத் தடைகளின் காலத்தில் 1997ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் நெடுங்கேணியை அண்டிய பகுதியில் விவசாயம் மேற்கொண்ட 6 விவசாயிகளின் தலையை வெட்டிச் சென்றனர். இதேபோன்று 2006ஆம் ஆண்டு போர் மூண்டபோது நில மீட்பு போர் ஒரு பக்கம் என்றால் உணவுப்போரில் ஈடுபட்டிருந்த எமக்கு வழிகாட்டிய அரச உத்தியோகத்தரான விவசாய போதனா ஆசிரியர் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதேபோல் முள்ளிவாய்க்காலில் பால்மாவிற்கும், கஞ்சிக்கும் நின்ற எம்மீது கொத்துக் குண்டுகளை வீசி அழித்த செயலின் கர்ம வினைகளே இவை என்றார்.
தமிழ் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் எந்தளவுக்கு இந்த போராட்டத்தை தீவிரமாக இதயசுத்தியுடன் முன்னெடுப்பார்கள், அதற்கு பரந்துபட்டளவில் மக்கள் தாமாக முன்வந்து ஆதரவளிப்பார்களா அல்லது இது சிங்களத்தின் பிரச்சனை என்று மௌனிகளாக இருப்பார்களா என்பது அடுத்த சில தினங்களில் தெரியவரும்.
எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் பொருளாதர நெருக்கடி என்பது மூவின மக்களையும் பாதித்துள்ளது என்பது உண்மை. மேலும் ஆட்சி மாற்றத்தை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர் என்பதும் உண்மை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப வேண்டுமென்றால் இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு இதில் அனைத்து தரப்பினரும் போராட வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகவுள்ளது.
பலகளம் கண்ட தமிழ் மக்களுக்கு போராட்டக்களம் என்பது புதிதல்ல.