சிவா பரமேஸ்வரன் & கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
இலங்கை பொருளாதாரம் எவ்வழி போகும், அந்த வழி எப்படியான வழி, அது வெளிச்சப் பாதைக்கு இட்டுச் செல்லுமா அல்லது இருட்டான குகையில் மூச்சு முட்டி இறக்க வழி செய்யுமா என்பதெல்லாம் அந்த புத்த பகவானுக்கே வெளிச்சம்.
இன்றிருக்கும் நிதியமைச்சர் நாளை இருப்பாரா என்கிற கேள்விகளுக்கு மத்தியில் முதல் நாள் பதவி விலகிய புதிய நிதியமைச்சர் அலி சப்ரி அடுத்த நாள் மீண்டும் பதவி ஏற்றார்……….`காலையில் சாமியார், மாலையில் மாமியார்`. நாட்டின் மத்திய வங்கிக்கும் புதிய ஆளுநர்.
இதுவரைகாலம் தமிழர்கள் என்றால் யார் அவர்கள் என்பது போய் இப்போது தேவை என்கிற போது நிதி நிர்வாகத்திற்கான புதிய குழுவில் தமிழர்களுக்கு முக்கியத்துவம். இதைத்தான் `வேண்டுமென்றால் வேரிலும் காய்க்கும்` என்பார்கள்.
நாட்டின் பொருளாதார நிலையை சிறிதேனும் தூக்கி நிறுத்தும் நோக்கில் நிதித்துறை குழாம் சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் கையேந்தியது. கடன் கொடுப்பவர்கள் சும்மா கொடுப்பார்களா? சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். ஆனால் இதற்கான பேச்சுவார்த்தைகள் இரு மாதங்களுக்கு முன்னரே தொடங்கியது.முதலில் நிகாரிப்பைச் செய்த இலங்கை அரசு பின்னர் பிச்சைப் பாத்திரத்துடன் கையேந்தியது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான தனது உறுப்புரை 4 அலோசனை நடவடிக்கைகளை பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி பூர்த்தி செய்து தனது அறிக்கையை மார்ச் மாதம் 02ஆந் திகதி வெளியிட்டது. அதில் இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திருந்ததுடன் அதிலிருந்த மீள்வதற்கான பரிந்துரைகளையும் செய்திருந்தது. இலங்கையின் மத்தியவங்கியும் நிதியமைச்சும் அரசாங்கத்தின் பேரில் கருத்துச் சொல்ல முற்பட்ட அரசியல்வாதிகளும் நாட்டில் ஏற்பட்டு வந்த நிதி நெருக்கடிகளை கையாள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே மேற்படி அறிக்கை வெளிவந்தது.
அரச நிதிமுகாமைத்துவத்தில் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள் காரணமாக அரசிறைவருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சி கோவிட் 19 நோய்த்தாக்கத்தின் விளைவாக எற்பட்ட பின்னடைவுகள் மற்றும் சர்வதேச சந்தையின் விலைப்போக்குகள் என்பன இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மீளச்செலுத்தலில் பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய சிக்கலில் மாட்டிக்கொண்ட ஒரு நாட்டிற்கு IMF பரிந்துரை செய்யும் வழமையான பரிந்துரைகளை இந்த அறிக்கையிலும் காண முடிகிறது. இதன்படி ஐந்து பரிந்துரைகளை IMFமேற்கொண்டுள்ளது.
முதலாவது பரிந்துரை இலங்கையின் அரசிறை நடவடிக்கைகளை பலப்படுத்த வருவாய்களை அடிப்படையாகக் கொண்ட கணிசமான கொள்கைமாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என்பதாகும். அதாவது அரசாங்கம் தனது அரசிறைவருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வற்வரி மற்றும் வருமான வரி என்பவற்றின் வரிவீதங்களை அதிகரிப்பதுடன் வரி அறவிடப்படும் அடிப்படைகளை விரிவுபடுத்துவதற்கான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச வருவாயை அதிகரித்தல். அரசிறை சீர்திருத்தத்துடன் சக்திவலு விலைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இறைக்கொள்கை சீர்திருத்தங்களை நம்பகரமானதாக மாற்றலாம் என்று இந்த பரிந்துரை கூறுகிறது. பெற்றோலியத்தையும் மின்சாரத்தையும் சந்தை விலைகளில் வழங்குங்கள் என்பதே இதன் கருத்தாகும். இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் மின்சார சபையும் எதிர்நோக்கும் பாரிய நட்டங்கள் அரசாங்கத்தின் செலவுகளில் பாரிய அழுத்தங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றமை நமக்குத் தெரிந்தது தான். சுருங்கச் சொன்னால் வரிகளை அதிகரிப்பதுடன் நட்டத்தில் இயங்கும் அரசமுறை முயற்சிகளின் நட்டத்தை குறைக்க வேண்டும் அல்லது இலாபமீட்டும் வகையில் அவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என்பது இப்பரிந்தரையின் சாராம்சமாகும்.
இரண்டாவது பரிந்துரை இலங்கையின் பொதுப்படுகடனை நிலைபேறுடையதாக மாற்ற விரிவான கொள்கை உபாயங்கள் வகுக்கப்படவேண்டும். என்பதாகும். அதாவது கடன்பெறல் மீளச் செலுத்தல் என்பன முறையான வகையில் முன்கூட்டிய பாதுகாப்புகளுடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதாகும். அரசாங்கங்கள் கடன் பெறுவது ஒன்றும் தவறான விடயமல்ல. ஆனால் அக்கடன்கள் மூலம் உருவாக்கப்படும் சொத்துகள் பெற்ற கடனை மீளச் செலுத்தத் தேவையான நிலைபெறுடைய வருவாய்ப்பாய்ச்சல்களை உருவாக்க வேண்டும். உதாரணமாக இலங்கையில் கடன்கள் மூலம் உருவாக்கப்பட்ட மாகம்புர துறைமுகம் மத்தளை விமான நிலையம் தாமரைத் தொலைத்தொடர்புக் கோபரம் என்பன மிகுந்த பொருட் செலவில் உருவாக்கப்பட்ட போதிலும் அவற்றிலிருந்து டொலர் வருவாய்ப்பாய்ச்சல்களை உருவாக்க இலங்கை தவறிவிட்டது. ஆனால் பெற்ற கடன்களைவ வட்டியும் முதலுமாக மீளச் செலுத்தவேண்டியது கட்டாயமாகும். அதுதவிர அரச பாதீட்டுக் குறைநிலையை நிரப்ப பெறப்பட்ட கடன்கள் இலங்கையை `வரவு எட்டணா செலவ பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா துந்தனா` என்று துந்தனா அடிக்கும் நிலைக்குத் தள்ளி விட்டுள்ளது. அண்மையில் ஓய்வு பெற்ற கணக்காளர் நாயகம் ஒருவர் குறிப்பிட்டிருந்தபடி பெற்ற கடன்களுக்கும் செலவிடப்பட்ட தொகைகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி நிலவுவதாகவும் அந்த காணாமல் போன தொகைகளுக்கு என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியாது. எனவே பொதுக்டன் முகாமைத்தவம் முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை இப்பரிந்துரையின் பொருளாகக் கொள்ளலாம்.
மூன்றாவது பரிந்துரை குறுகிய காலத்தில் பணவீக்கம் எகிறிச் செல்வதைத் தடுக்க பணக்கொள்கையை இறுக்கமாக்க வேண்டும் எனக் கூறுகிறது. 2019இல் பதவிக்கு வந்த அரசாங்கம் மலிவான பணக்கொள்கையை கடைப்பிடித்தமை நமக்குத் தெரியும் வட்டிவீதங்களை மிகவும் கீழ் மட்டத்தில் வைத்திருப்பதள் மூலம் நாட்டின் பண நிரம்பலை விரிவாக்கி அதன் மூலம் பொருள்கள் சேவைகள் மிதான மக்களின் கேள்வியை அதிகரித்து முதலீட்டாளர்களை ஊக்குவித்து நாட்டில் அதிக முதலீடுகளை உருவாக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியையும் தொழில் வாய்ப்புகளையும் பெருக்குவதே இதன் குறிக்கோளாகும். ஆனால் இலங்கை போன்ற முதலீட்டிற்கு உகந்த புறச்சூழல் இல்லாததொரு நாட்டில் அத்தகைய முதலீட்டு விரிவாக்கத்தை எதிர்பார்க்க முடியாது. அத்துடன் மக்கள் குறைவான வட்டிவீதங்கள் நிலவிய போது அதிக கடன்களை வாங்கி விடுவாசல் நிலபுலன்கள் போன்ற அசையாச் சொத்தக்களிலும் தங்கம் மற்றும் வாகனாதிகள் போன்ற அசையும் சொத்துகளிலும் செலவீடுகளை மேற்கொண்டனர். இதனால் அரசாங்கம் எதிர்பார்த்தது போன்ற பொருளாதார விரிவாக்கம் இடம்பெறவில்லை. மறுபுறம் உள்நாட்டு வட்டிவீதங்கள் வீழ்ச்சியடைந்த படியினால் வட்டிவருவாய் ஈட்டித்தரும் உள்நாட்டுப்பணச் சந்தையில் குறுங்கால முதலீடுகளை மேற்கொண்டிருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் தமது முதலீடுகளை மீளப் பெற்றுக் கொண்டனர். இது இலங்கை ரூபாவின் வெளிநாட்டுப் பெறுமதியில் கணிசமான அழுத்தங்களை ஏற்படுத்தியது. மறுபுறம் அரச செலவீட்டுத் தேவைப்பாடுகளை ஈடுசெய்ய மத்தியவங்கி டிரில்லியன் கணக்கில் ரூபாவை அச்சிட்டது. புதிய பணக்கோட்பாடு என்ற ஒரு மாயையை நம்பி செயற்பட்டதால் நாட்டின் பணவீக்க இலக்குகளை மீறி பணவீக்கம் எகிறியது. அண்மையில் நிதிஉயர் பதவிகளில் ஏற்பட்ட இருக்கை மாற்றங்களைத் தொடர்ந்து இப்போது கொள்கை வட்டிவீதங்கள் 14.5 சதவீதம் வரையிலும் இருமடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளன. உண்மையில் இது குதிரை இலாயத்தை விட்டு ஓடியபின்னர் கதவை மூடுவதை ஒத்ததாகும். ஓடிய குதிரை களைத்துத்தான் வீடு திரும்ப வேண்டும். IMF இன் பரிந்துரை பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த இறுக்கமான பணக்கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது. அடுத்துவரும் மாதங்களில் இலங்கை அரச ஊழியர்களுக்கான சம்பளங்களை எவ்வாறு வழங்கப்போகிறது என்பதே இப்போதுள்ள வினாவாகும்.
நான்காவது பரிந்துரை அரசாங்கம் கடிவாளம் போட்டு கட்டிவைத்திருந்த நாணயமாற்றுவீதத்தை படிப்படியாக சந்தையால் நிர்ணயிக்கப்படும் நெகிழ்தன்மை வாய்ந்த மாற்றுவீதமாக மாற அனுமதிக்க வேண்டும் என்பதாகும். பலமாதங்களாக செயற்கையான விதத்தில் 203 ரூபா மட்டத்தில் கட்டிவைத்திருந்த ரூபாவை ஓரிரவில் 230 ரூபா உச்ச எல்லையின் கீழ் மிதக்க விடுவதாக மத்தியவங்கி அறிவித்தது. மறுநாளே டொலர் 260ரூபாவை எட்டியது. அதன் பின்னர் அதன் பாய்ச்சல் நிறுத்த முடியாத குதிரைப்பாய்ச்சலாக இருக்கிறது. இப்போது ஒரு டொலர் 330 ருபா என்ற மிகப்பெரிய தேய்வினை எதிர்கொண்டு உலகிலேயே மிகவும் பலவீனமான நாணயம் என்ற அவப்பெயரையும் சந்தித்துள்ளது.
நாணயத்தின் வெளிநாட்டுப்பெறுமதியைகட்டுப்படுத்துவதில் நாணய அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளனர். நாட்டின் டொலர் உட்பாய்ச்சல்கள் குறைவடைந்துள்ளதோடு வங்கித்துறைக்குள் வரும் டொலர்களில் 50 சதவீதத்தை மத்தியவங்கிக்கு வழங்க வேண்டும் என்ற ஒழுங்குறுத்தலின் படி வங்கித்துறையில் நாளாந்தம் டொலருக்கு எழுப்பப்படும் கேள்வியை ஈடுசெய்யப் போதுமான டொலர் கையிருப்புகள் இல்லாத நிலையில் டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்கிறது. நாட்டின் நிச்சயமற்ற சூழல் மற்றும் நாட்டின் ஆட்சியாளர்களை வெளியேறுமாறு உருவாகியுள்ள எதிர்பலைகள் காரணமாக வெளிநாடுகளில் வாழம் இலங்கையர்கள் உழைத்தனுப்பும் பணஉட்பாய்ச்சல்கள் குறைவடைந்துள்ளன. முதலீட்டாளர்களின் வருகையும் குறைந்துள்ள நிலையில்இலங்கைக்கு செல்ல விரும்பும் உல்லாசப் பயணிகளுக்கு பல மேற்குலக நாடுகள் பணய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. இது இலங்கை அரசாங்கத்தின் கன்னத்தில் வைக்கப்பட்ட பலமான அறையாகப் பார்க்கப்பட முடியும். சுருங்கச் சொன்னால் நாணயத்தை மிதக்கவிடவேண்டும் என்ற பரிந்துரை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அது நடைபெற்றவிதம் சாட்டின் பொருளாதாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள நெடுங்காலம் எடுக்கும்.
இறுதியாக IMF குறிப்பிடும் இக்கொள்கைச் சிர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது அது சமூகத்திற்கு குறுங்காலத்தில் வலிமிகுந்ததாகவே இருக்கும். நாட்டில் இப்போதிருக்கும் பொருளாதார நிலையுடன் ஒப்பிடும் போது இன்னும் இடுப்புப்பட்டியை இறுகக் கட்ட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் இலகுவில் பாதிப்பக்கு ஆளாகக் கூடிய பெண்கள் சிறுவர்கள் முதியோரின் நிலை கவலைக்கிடமானதாக மாறும். இதனைத்தடுப்பதற்கு முறையான ஒரு சமூக பாதுகாப்பு வலைப்பின்னலை அரசு உருவாக்கி நடைமுறைக்கிடவேண்டும் என்றும் அதன்பொருட்டு அதிக செலவீடுகளை இலக்குப்படுத்திய விதத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அது கூறுகிறது.
ஆக இப்போது IMF உடன் முறையாக நிகழ்ச்சித்திட்டம் ஒன்றிற்கான ஆயத்தப்பணிகளில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது ஆயினும் காலங் கடந்த நிலையில் இது நடைபெறுவதால் பொருளாதார மீட்சி என்பது விரைவில் ஏற்பட்டுவிடாது. இலங்கை அரசு 2022 ஜனவரி மாதத்தில் ஐஆகு இடம் சென்றிருக்குமாயின் இலங்கைக்கு இப்படிஒரு அவல நிலை ஏற்பட்டிருக்காது என்பதே இது பற்றி கூர்ந்து கவனித்தவரும் அவதானிகளின் கருத்தாகும். இவ்வாறு நாட்டை வேண்டுமென்றே அவலநிலைக்கு தள்ளியவர்களுக்கு மக்கள் என்ன தண்டனை வழங்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சர்வதேச நாணய நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் வாங்கும் இலங்கை நெருக்கடியிலிருந்து மீளூமா அல்லது கசப்பான மருந்துகளை உட்கொள்ளாமல் நெருக்கடியில் மூழ்குமா என்பது மிகப்பெரும் கேள்விக்குறி.
கட்டுரையாளர்கள் பற்றி:
சிவா பரமேஸ்வரன் : மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்.
கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி: பேராசிரியர், பொருளாதார பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்.