(மன்னார் நிருபர்)
(18-04-2022)
அரசாங்கத்திற்கு ஆதரவான சட்டத்தரணிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (18) முற்பகல் அலரி மாளிகையில் இடம் பெற்றது.
நாட்டில் இது வரையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதக நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதியை நீக்குவதானது ஆர்;ப்பாட்டக்காரர்கள் கூறுவது போன்று செய்வதற்கு முடியாததொரு விடயமாகும் என்றும் அரசியலமைப்பு தொடர்பில் தெளிவான புரிதல் இன்றி, தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது போன்று தோன்றுவதாகவும் இதன்போது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
88-89 காலப்பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது, அன்றைய நாட்டின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்களை படுகொலை செய்ய வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நாட்டிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியே நிறைவடைந்தது.
கடந்த காலம் மற்றும் தற்போதைய சட்டங்களைப் பற்றிய புரிதலின்றி இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தினை, நாடு முழுவதும் முன்னெடுப்பதற்கு செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது நாட்டில் மீண்டும் ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
தற்போதைய ஆர்ப்பாட்டங்களுக்கு நிதி பெற்றுக்கொடுத்தல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு சாதாரண பொது மக்கள் பணம் வழங்கியுள்ளதாக தெரியவில்லை எனவும், ஏதேனுமொரு அமைப்பொன்றினால் திட்டமிட்டு இதற்கான பணத்தை செலவிட்டு நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
பல்வேறு வழிகளிலும் நாட்டை சீர்குலைக்கும் போராட்டத்திற்கு இலங்கை ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஆதரவளிக்கக் கூடாது எனவும் இவ்வாறான நிலையில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் குறித்து தணிக்கை செய்வது காலத்துக்கு உரியது என்றும், அதை அரசு அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்களை மதிப்பிடல் காலத்திற்கு உகந்தது என்றும், அதனை அரச நிறுவனங்கள் மற்றும் அரச அதிகாரிகளிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் எனவும், மக்கள் பிரதிநிதிகள் காலத்திற்கு காலம் மாறினாலும் அரச அதிகாரிகள் மாற்றமடையாமை மற்றும் அரச நிறுவனங்களதும், அதிகாரிகளதும் ஊழல் மற்றும் மோசடிகள் இன்று அரசியல்வாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்கள் மக்களை ஈடுபடுத்தி அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு உட்படுத்துவதற்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீக்கி அவர்களது குறுகிய இலக்குகளை அடைவதற்கு முயற்சிப்பதாகவும், எனவே, இந்த நெருக்கடியை மிகுந்த புரிதலுடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றி, ஜனாதிபதியும் பிரதமரும் துணிச்சலுடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மக்களை ஈடுபடுத்தி வேறு அமைப்புகள் முன்னெடுத்துவரும் அரசியல் சதி குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான டப்ளிவ்.தயாரத்ன, ரஷிக் ஷாருக் உள்ளிட்ட சட்டத்தரணிகள் பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.