கலாபூஷணம், திருமலை நவம்.
ஈழத்தின் கிழக்கு கரையில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வனப்புடன் கூடிய நகரம் திருக்கோணமலை. மிக நீண்ட வரலாற்றையும் இலக்கிய மற்றும் சமூகத் தொன்மையும் கொண்ட திருகோணமலை வெளிநாட்டவர்களின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட மிக முக்கியம் வாய்ந்த பிரதேசமாகவும் வடக்கு கிழக்கு மக்களின் பூகோள நடுநாயகமாகவும் விளங்கிவருகிறது.
கிழக்கு மக்களின் வாழ்க்கை முறைகளையும், வடக்கு மக்களின் பண்பாட்டு அடையாளங்களையும் இணைக்கும் பாலமாக விளங்கிவரும் திருக்கோணமலைப் பிரதேசம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக அதன் பூகோள அமைப்புக்கள், கலாச்சாரங்கள் வாழ்வு முறைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. திருமலை நாகரீகமும் மெகாஹஞ்சதாரோ நாகரீகமும் ஏறக்குறைய ஒரே காலத்தவை என வரலாற்று ஆய்வாளர்களால்; குறித்துக் காட்டப்பட்டுள்ளது.
திருக்கோணமலைப் பிரதேசத்தின் முக்கிய அடையாளங்களாக ;காணப்படுபவை கோணேசர் ஆலயம், கன்னிய வெந்நீருற்று, துறைமுகம், கந்தளாய்க்குளம், வெருகலம்பதி, தம்பலகமம் கோணேசர் ஆலயம், கங்குவேலிஅகத்தியர்ஸ்தாபனம், வில்கம் விகாரை, முத்து விளையும் கிண்ணியா, நிலாவெளி போன்ற இன்னோரன்ன அடையாளச் சின்னங்களிலிருந்து உருவாகியதே இப்பிரதேசத்தின் தொன்மைமிகு இலக்கியங்களும், கலைகளும், மரபுகளும், வரலாறுகளுமாகும்.
இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே போற்றப்பட்டுவரும் கோணேசர் ஆலயத் தொன்மங்களிலிருந்துதான் திருகோணமலை மண்ணுக்கான கலையும், இலக்கியமும் முகிழ்விடத் தொடங்கியதை முன்னைய கால புராணங்கள் இதிகாசங்கள், மற்றும் கல்வெட்டு ஆதாரங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
தோன்மையான கோணேசர்மரபை விளக்கும் அதன் புகழ்பாடும் புராணங்களான தட்ஷண கைலாசபுராணம், திரிக்கோணாசல புராணம், வாயு புராணம், கோணேசர் கல்வெட்டு திருகோணமலை அந்தாதி கோணேசர் கல்வெட்டு என்பவற்றுடன் சோழர் பாண்டியர் கால கல்வெட்டுக்கள் என்ற வகையில் பெரியகுளக்கல்வெட்டு, மாங்கணாய்க் கல்வெட்டு, பளமோட்டைக் கல்வெட்டு, கந்தளாய்க் குளக்கல்வெட்டு ( 16ற்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள்) மூலம் இச்செய்தியை அறியக்கூடியதாகவுள்ளது.
சிங்கை செகராஜசேகர மன்னன் காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் பண்டிதராசர் எனும் புலவரால் இயற்றப் பெற்ற தட்ஷிண கைலாசபுராணம், கவிராசர் எனும் புலவரால் இயற்றப் பெற்ற கோணேசர் கல்வெட்டு மற்றும் திரிகோணாசலபுராணம், திருகோணாசலவெண்பா, திருக்கரசை புராணம் ஆகிய மரபுவழி இலக்கியங்கள் திருக்கோணேஷ்வரத்தின் பெருமைகளை எடுத்துக்கூறுபவை. இவை 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதை பல ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர். 17 ஆம் நூற்றாண்டை திருமலை இலக்கியத்தின் எல்லையாகக் கொண்டாலும் இவற்றின் தோற்றம் ; முன்னைய காலத்திலிருந்தே தொடங்குகிறது.
18ம் நூற்றாண்டில் திருகோணமலையில் எழுந்ததாகக் கருதப்படும் திருக்கரைசைபுராணம், சித்திரவேலாயுதர் காதல், கோணமலை அந்தாதி என்பன முன்னைய காலப் புராணங்களின் தொடர்பரம்பரைப் பாடுகளின் பிறப்புக்களாக, திருமலையிலுள்ள ஆலய வரலாறுகளையும் அவை சார்ந்த முறைகளையும், சம்பவங்களையும், நம்பிக்கை மற்றும் மரபுகளையும் எடுத்து சொல்பவையாக காணப்படுகின்றன.
புராண இதிகாச இலக்கியங்கள் தோன்றிய 17ம், 18ம் நூற்றாண்டை தொடர்ந்து மறுமலர்ச்சி நூற்றாண்டென கூறப்படும் 19ம் நூற்றாண்டின் மாற்றங்கள், இலக்கிய வளர்ச்சிகள் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில்தாக்கத்தை ஏற்படுத்தியதைவிட திருகோணமலைப்பிதேசத்தின் கலை இலக்கியப்போக்கிலும் சமூக மரபு சார்ந்த விடயங்களிலும் கனதியான மாற்றங்களை கொண்டு வந்ததற்கு பல ஆதாரங்களுண்டு.
எனவேதான் 19ம் நூற்றாண்டின் மாற்றங்கள் நேரடியாகவே திருகோணமலைப்பிரதேசத்தில் கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றங்களையும் வளர்ச்சியையும் உடனடியாக தெரிந்துகொண்டவர்களாக திருக்கோணமலை அறிஞர்களாகிய திரு.தி.த.கனகசுந்தரம்பிள்ளை, அவருடைய சகோதரரான பண்டிதர் தி.த.சரவணமுத்துப்பிள்ளை ஆகியோரை குறிப்பிடலாம்…
19 நூற்றாண்டின் ஈழத்து இலக்கிய மாற்றம் இவர்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று கூறக்கூடிய அளவுக்கு இவர்களுடைய பணி காணப்படுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டை ஈழத்தவர்களின் காலம் என சுட்டிக்காட்டும் அளவிற்கு இவர்கள் இருவருடைய இலக்கியப்பணியும் ஏனைய ஈழத்து தமிழ் அறிஞர்களின் பங்களிப்பும் முக்கியம் பெற்று காணப்படுகிறது.
நவீன வரவுகள் எனப்படும் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், மெல்லிசை எனும் வடிவங்கள் தமிழகத்தில் காலூன்றத் தொடங்கிய அதே காலப்பகுதியில் திருக்கோணமலையிலும் அவை வளரத் தொடங்கியதற்கு ஆதாரமாக தமிழின் மூத்த நாவல்களான பிரதாப முதலியார் சரித்திரம்,(1879) கமலாம்பாள் சரிந்திரம் (1896); எழுந்த அதே முன்பின்னான காலப்பகுதியில் திருகோணமலை அறிஞர்கள் ஆக்கித் தந்தவையே ஊசோன் பாலந்தை (1891), மோகனாங்கி (1895) ஆகிய இரு நாவல்களும்.;
திருக்கோணமலையைச் சேர்ந்த எஸ்.இன்னாசித்தம்பி, பண்டிதர் சரவணமுத்துப்பிள்ளை ஆகியோர் இவ்விரு நாவல்களையும் படைத்துள்ளனர்.
தமிழின் மூத்த நாவல்களான பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் ஆகிய நாவல்கள் போலவே திருக்கோணமலை அறிஞர்களால் எழுதப்பட்ட இவ்விரு நாவல்களும் சரித்திர சான்றுடைய பாத்திரங்களையும் சம்பவங்களையும் வைத்து பின்னப்பட்டுள்ளது. கல்கி, அகிலன் சாண்டிலியன் போன்ற இலக்கிய வல்லுனர்கள், சரித்திர நாவல்களை எழுதுவதற்கு முன்பே திருக்கோணமலையை சேர்ந்த அறிஞர்கள் சரித்திர நாவல்களை எழுதியது ஆச்சரியம் தருகின்ற வரலாற்று ஆதாரங்களாகும். தமிழில் வெளிவந்த முதலாவது வரலாற்று நாவல் என்ற பெருமையை மோகனாங்கிபெறுகிறது.
ஊசோன்பாலந்தை என்ற நாவலானது போர்த்துக்கீச நெடுங்கதையொன்றை ஆதாரமாகக் கொண்டதாகவும், அதே போன்று தஞ்சை திருச்சி நாயக்கர் பரம்பரையை ஆதாரமாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்று நாவலாக மோகனாங்கி நாவலும் காணப்படுகிறது.
இவ்விரு நாவல்களும் எழுந்த காலத்திலிருந்து சுமார் 60 வருட காலம் திருகோணமலையில் நாவல் எழுவதற்கரிய வாப்பில்லாமல் போய்விட்டதோ என்னவோ இந்த இடைவெளியை நிரப்பியவர் வ.அ. இராசரத்தினம் இவர் 1956ம் ஆண்டு எழுதிய கொழுகொம்பு என்ற நாவலே மோகனாங்கி நாவலுக்குப்பின் திருமலையில் எழுந்த நாவலாகும்.
மூதூர் கிராமிய மணம் கமழும் பாத்திரங்களையும் சம்பவங்களையும் ஆதாரமாக வார்த்து வ.அ. கொழுகொம்பு நாவலைப் படைந்துள்ளார். ‘எனது கிராமத்து மாந்தர்களை கதாபாத்திரமாககொண்டு என்னால் படைக்கப்பட்ட முதல் நாவல் இதுதான். அதுவே அதன் பெருமை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்பு வ.அ. எழுதிய துறைக்காரன் (1959) வெளிவந்துள்ளது. வ.அ. ஐந்து நவால்களையும் மூன்று குறுநாவல்களையும் ஈழத்து இலக்கழயத்துக்கு தந்துள்ளார்.
பண்டிதர் தி.த.சரவணமுத்துப்பிள்ளை பரம்பரையில் வந்த ந.பாலேஸ்வரிஎன்பார் 1966 ஆம் ஆண்டு சுடர்விளக்கு என்னும் நாவலை படைத்ததுடன் நாவல் இலக்கியத்தின் புதிய பிரவாகமாக பாலேஸ்வரி பார்க்கப்பட்டார்.இவர் 12 நாவல்களுக்கு மேல் எழுதி சாதனைப் படைத்த பெண் படைப்பாளி ஆவார். இவருக்குப்பின் 1973ல் க.அருள்சுப்பிரமணியம் எழுதிய அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்ற நாவல் திருகோணமலை எழுத்தாளர்களை தேசிய நிலைக்கு கொண்டு சென்றது.
திருக்கோணமலையில் நவீன தமிழ்க்கவிதை போக்கொன்று முளைக்கொள்ளத் தொடங்கிய காலம் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். இந்த முனைப்புக்கு காரணமாக இருந்தவர்கள் பலர். வே.அகிலேசபிள்ளை, தி.த.கனகசுந்தரம்பிள்ளை, தம்பையாப்பிள்ளை, தி.த.பண்டிதர்சரவண முத்துப்பிள்ளை, தம்பலகமம் அ.அழகக்கோன், மா.முத்துக்குமாரு புலவர், சட்டம்பி தம்பையா, சு.தம்பையாபிள்ளை போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்கள் மரபுவழி இலக்கிய வல்லுனர்களாக இருந்த போதிலும் நவீன போக்கை ஆதரித்தவர்களாக காணப்பட்டார்கள்.
மறுமலர்ச்சிக் கவிதை மரபொன்று பாரதியுடன் பிறப்பெடுத்த காலத்தில் வடக்கே நாவற்குழியூர் நடராஜன், அ.ந.கந்தசாமி, சோ.நடராஜா மஹாகவி போன்றவர்கள் நவீக கவிதைகளை எழுதிய அதே சமச்சீரான காலப்பகுதியில் கிழக்கில் நவீன போக்குக்கு அமைவாக கவிதை எழுதியவர்களில் கிண்ணியாவைச் சேர்ந்த அண்ணல்(1930- 1974)பிரதானமானவராக கணிக்கப்படுகிறார்.
1945ம் ஆண்டு முதல் தன்னையொரு கவிஞராக அடையாளப்படுத்திக்கொண்ட அண்ணல் எழுதிய கவிதைகள் 1964 ல் அண்ணல் கவிதைகள் என்ற தலைப்பில் வெளியிப்பட்டது. இவரது கவிதைகளில்; தமிழ்த் தாகமும் வாலிப கனவுகளும் சமய நெறிகளும் விரவிக்காணப்பட்டன. காணப்பட்டன. அதே காலப்பகுதியில் தர்மு சிவராமு என்ற கவிஞரின் வருகை (1939-1997) தமிழ் நவீன கவிதைப் போக்கை புதிய பரிமாணத்துக்கு கொண்டு சென்றது.
கவிஞர் அண்ணலைத் தொடர்ந்து சற்று பிந்திய காலத்தில் திருக்கோணமலைக் கவிராயர் (1930 -1990) தாமரைத்தீவான், கழகப்புலவர் பெ.பொ.சிவசேகரம், கவிஞர் ஈழவாணன் போன்றவர்களின் வருகை திருக்கோணமலையின் நவீன கவிதைக்கு வளம்சேர்க்க தொடங்கியது.
இவர்களில் தாமரைத்தீவானின் பங்களிப்பு கணிசமான முக்கியத்துவம் கொண்டதாக மதிக்கப்படுகிறது. 1932 ல் ஆலங்கேணிக்கருகிலுள்ள தாமரைக்கேணியில்பிறந்த தாமரைத்தீவான் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை எழுதிக்கொண்டேயிருக்கிறார். 1992 இவரது கீறல்கள் என்ற கவிதைத்தொகுதி முதல் முதல் அச்சு வடிவம் பெற்றது தொடர்ந்து (புதிய) எட்டுத்தொகை கவிதைத்தொகுதி வரை. சுமார் 50 மேற்பட்ட கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. பாரதி பாரதிதாசன் வள்ளுவன் கம்பன் மற்றும் சங்க இலக்கியங்களின் கருத்துக்களை அள்ளித்திரட்டி அழகுமிளிர பாடுவதில் வல்லவரான தீவான் நையாண்டிக்கருத்துக்களை நறுக்கு தெறித்தாற்போல் பாடவல்லவர்.மரபுக் கவிதைகள் மீது பற்றுக்கோடும் ஆற்றலும் கொண்ட தாமரைத் தீவான் கவிதைகளில் தமிழ்ப்பற்றும் சமூக தரிசனமும் பரவிக் கிடக்கும்;.
திருக்கோணமலை பிரதேசத்தின் ஆரம்பகால சிறுகதைத்துறையின் வளர்ச்சியை நோக்கின் ஈழத்தின் வடக்கே சி.வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன், சிவபாதசுந்தரம் போன்றோர் (1930ம் ஆண்டுக்குப்பின்) இவ் வடிவத்தை ஈழத்துக்கு அறிமுகம் செய்தபோதும் அத்தகையதொரு முயற்சிகள் இதே காலப்பகுதியில் திருக்கோணமலையில் மேற்கொள்ளப்பட்டதற்கு ஆதரமெதுவமில்லை.
1950ம் ஆண்டுக்குப்பின் ஈழத்து சிறுகதை முன்னோடிகள் என்ற வகையில் செ.கணேசலிங்கம் டொமினிக்ஜீவா, கே.டானியல், எஸ்.பொ.,நீர்வைபொன்னையன் போன்றோர் சிறுகதைத்துறைக்குள் நுழைந்த காலத்தில் திருக்கோணமலையின் சிறுகதை முன்னோடியாக திகழ்கிறார். வ.அ.இராசரத்தினம். (1925—2001) இவரை ஈழத்தின் புதுமைப்பித்தன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு திருமலையின் சிறுகதை வரலாறு இவரிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது. 1948ம் ஆண்டு தினகரனில் வெளிவந்த மழையால் இழந்தகாதல் சிறுகதை மூலம் இத்துறைக்குள் நுழைந்த வ.அ. தோணி (1962) என்ற தனது அற்புதமானபடைப்பின் மூலம் திருகோணமலைப்பிரதேச இலக்கியப்படைப்புக்களை உலகத்தரத்துக்கு கொண்டு சென்றார் என்று கூறப்படுகிறது.
இவருக்கு பின்னைய தலைமுறையாக திருக்கோணமலையில் தர்மு சிவராமு, ந.பாலேஸ்வரி, க.சா.அரியநாயகம், தி.அரியநாயகம், த.பி.சுப்பிரமணியம் ராயப்பு போன்றோர் இத்துறைக்கு வளம் சேர்க்க வந்தார்கள். இதில் தர்மு சிவராமு ஒருசில சிறுகதைகளை எழுதியபோதும் அவரின் நாட்டம் கவிதைத்துறையாகவே இருந்தது. இதேவேளை பின்னாளில் தினபதி சிந்தாமணி பத்திரிகைளின் பிரதம ஆசிரியராக பணிபுரிந்த திருகோணமலையில் பிறந்த எஸ்.டி. சிவநாயகம் சுதந்திரனில் 1952 எழுதிய சோமாவதி எனும் சிறுகதை (28.12.1952) திருகோணமலையை அடையாளப்படுத்தும் இன்னொருசிறுகதையாக அமைந்து.
ந.பாலேஸ்வரி இலக்கியப்பிரவேசம் அவர் 1957 ல் தினகரன் பத்திரிகையில் எழுதிய தெய்வம் என்ற சிறுகதையுடன் இலக்கியப்பணி ஆரம்பமாகிறது.இவரது முதலாவது சிறுகதைத்தொகுதி 1973ல் சுமைதாங்கி என்ற தலைப்பில் வெளிவந்தது. தெய்வம் பேசுவதில்லை(2000) இவரது இரண்டாவது தொகுதியாகும்.
திருக்கோணமலையின் நவீன நாடக மரபுகள், நாவல்துறை போல் சற்று மாறுபட்ட முறையில் 19ம் நூற்றாண்டிலிருந்து வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றது.
மரபுவழித் தன்மை கொண்ட கூத்துக்களும், விலாசங்களும் மிக நீண்ட காலமாக திருக்கோணமலை பிரதேசத்தில் வளர்ந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். குறிப்பாக 18ம் நூற்றாண்டு காலப்பகுதியிலிருந்தே கிராமப்புறங்களிலும், நகரமையப் பகுதியிலும் ஆடப்பட்டு வந்துள்ளதை பல்வேறு ஆதாரங்களின் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.
மட்டக்களப்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் மையமாக திருகோணமலை காணப்படுவதாலும் வன்னியின் அயலாகவும் இருக்கின்ற காரணத்தினாலும் இந்த பிரதேசங்களிற்கு உரிய அரங்குகள் கலந்த வகையில் உதாரணமாக வடமோடி, தென்மோடி யாழ்ப்பாண விலாசம் ஆகிய மரபுவழி கூத்து முறைகள் இப்பிரதேசத்தில் 18ம் நூற்றாண்டில் இருந்தே ஆடப்பட்டு வந்திருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
இத்தகையதொரு கூத்து முறைகளின் தொடர்ச்சியான வரலாறாகவே நவீன நாடக மரபொன்று 19ம் நூற்றாண்டு முற்பகுதியில் திருக்கோணமலையில் தலைதூக்கிய காலம் அண்ணாவி தம்பிமுத்து காலத்திலிருந்து (1900-1960) ஆரம்பமாகின்றது. அவருக்குப்பின் சி.விசுவலிங்கம், எம்.சி.அந்தோனிப்பிள்ளை,அண்ணாவி சின்னையா, யேசுதாசன் போன்ற புதிய பரம்பரையின் வரவோடு நவீன நாடக மரபு திருக்கோணமலையில் உருவாகியதோடு பல்வேறு நாடக மன்றங்கள் உருவாகி நவீன நாடக பாரம்பரியங்கள் ஈழத்தின் எந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு வளர்ச்சிக் கண்டுள்ளது. அதற்கு காரணம் நகரத்திலும், கிராமங்களிலும் பெருந்தொகையான நாடக மன்றங்களும், அரங்குகளும் தோன்றியமையேயாகும்.
இராவண தரிசனம் கொண்ட திருகோணமலையில் கர்நாடகம், மெல்லிசை போன்ற துறைகளின் வளர்ச்சி இன்னொரு துறையாக வளர்ச்சி அடைந்தமையை 19ம் நூற்றாண்டிலிருந்து அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கோணேசர் கல்வெட்டில் கூறியதைப்போல் கோணேசர் கோயிலை மையப்படுத்தி ஓதுவார்கள், நடனமாதர், சங்கீத விற்பன்னர்கள், வாழ்ந்து பாரம்பரியக் கலைளான நடனக்கை சங்கீதக்கலை மற்றும் பல்வேறு வாத்திக்கலைகளை வளர்த்து வந்துள்ளனர் என்பதற்கு தட்ஷண கைலாசபுராணம் கோணேசர் கல்வெட்டு போன்ற நால்கள் வாயிலாகவும் பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.
19ம் நூற்றாண்டின் கடைக்கால் பகுதியில் மரபுரீதியான இசைத்துறைக்கு பங்காற்றியவர்களாக வீரக்கோன்முதலியார், வே.அகிலேசபிள்ளை, கார்த்திகேசு குருக்கள், அப்பாhத்துறைஐயர், சாம்பசிவம் ஐயர் ஆகியோரைக் குறிப்பிட்டு 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இத்துறைக்கு தொண்டாற்றியவர்களாக வே.தில்லையம்பலம்மாஸ்ரர், சிவகாமசுந்தரி விஜயரட்ணம், இராஜராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோரை குறிப்பிடலாம்.
சங்கீதம் என்னும் பாரம்பரிய கலை நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையில் இராஜராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தலைமையில் தட்ஷணகானசபா தோன்றிய காலத்திலிருந்து (1949ம்) ஆரம்பமாகிறது. செல்வி.இராஜராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தினால் (1920—1972) ஆரம்பித்த தட்ஷாணசபா அதைத் தொடர்ந்து பல்வேறு சங்கீத சபைகள் மரபு ரீதியான சங்கீத வளர்ச்சியை வளர்க்க காரணமாகின.
இதேவேளை காலத்தின் தேவைகருதி மெல்லிசை, துறை வளர்ச்சியும், திருக்கோணமலையில் வளர்சியடைய ஆரம்பிக்கிறது. இத்துறையின் பிதாமகனாக திகழ்பவர் திருமலை தாமோதரம்பிள்ளைபத்மநாதனாகும். இவருடன் இம்மானுவல். பரமேஸ் கோணேஷ் போன்ற கலைஞர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட திருகோணமலை இசைக்கழகம் (1964) பரமேஸ் கோணேஷ் இசைக்குழு (1968) கலைவாணி இசைக்குழு, கோணேஸ்வரா இசைக்குழு, (1968) நீரோ இசைக்குழு (1973) துரை இசைக்குழு(1979) ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியமானது. இதில் ஈழத்து இசைத்துறையின் ஜம்பவானாக கருதப்படும் திருமலை பத்மநாதனின் பங்களிப்பு முக்கிய பெறுமதி கொண்டது.
ஈழத்தில் முதல் முதல் தயாரிக்கப்பட்ட நிர்மலா (1966) தென்றலும் புயலும் (1968) ஆகிய திரப்படங்களுக்கு இசையமைத்த பெருமை இவரையே சாரும். இதே போன்றே 1970 ஆம் அண்டளவில் பரமேஸ் கோணேஷ் இசைக்குழுவினர் ஈழத்து மெல்லிசை வரலாற்றில் முதலாவது இசைத்தட்டை வெளியிட்ட பெருமை இவர்களையே சாரும்.
சிறுகதைத் துறையில் வ.அ.இராசரத்தினத்தைத் தொடர்ந்து 1960 பின் ந.பாலேஸ்வரி, க.அருள்சுப்பிரமணியம், தி.அரியநாயம், க.சா.அரியநாயகம் போன்றோர் சிறுகதைத்துறைக்கு வளம்சேர்த்தவர்களாகின்றனர்.
வ.அ.இராசரத்தினத்தின் கதைகளில் மண்வாசனைத் தன்மையும் அருளின் சிறுகதைகளில் தேசியத் தன்மையும், பாலேஸ்வரி அரியநாயகம் புரட்சிபாலன் தா.பி. சுப்பிரமணியம் போன்றோரின் கதைகளில் மெல்லியல் தன்மையும் க.சா.அரியநாயத்தின் கதைகளில் முற்போக்குத் தன்மையும் உள்ளீடாக இருக்க 1970ம் ஆண்டுக்குப்பின் முற்போக்கு சிந்தனை எழுத்தாளர்களான இராஜதருமராஜா, மு.ராஜ்கபூர்,க.சா.அரியநாயகம் ஆகியோர் முன் வருகிறார்கள்.
1970ம் ஆண்டுக்குப் பின் கவிதைத் துறையில் ஓர் தேசிய விழிப்பு மிளிர்வதைக் காணலாம். 1971ம் ஆண்டின் சேகுவரா புராட்சி இடதுசாரி வலுவூட்டல்கள் இந்திய கவித்துறை சஞ்சிகைகளின் வருகைகள், புதிய போக்குடைய கவிஞர்கள் இத்துறைக்கு வருவதற்கு காரணங்களாகின்றன. அதற்கு உறுதுணையாக நிறுவனமயப்படுத்தப்பட்ட சமூக இயக்கங்கள், இலக்கிய மன்றங்கள், அரசியல் விழிப்புணர்வுகள் காரணமாகின. ஊதாரணமாக திருவள்ளுவர்கழகம் 1958 திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கம் 1961பின்னாளில் முன்னோடிகள்,சங்கப்பலகை திருகோணமலை மறுமலாச்சி தமிழ் மன்றம், திருகோணமலை கலை வட்டம், முத்தமிழ் வளர்கலை மன்றம், ஈழத்து இலக்கியசோலை தாகம் கலை இலக்கியவட்டம் ஆகிய அமைப்புக்களை குறிப்படலாம்.
திருக்கோணமலையில் நல்லை அமிழ்தன் தலைமையில் இயங்கிய முன்னோடிகள் கலை இலக்கிய விமர்சகர் குழுவைச் சேர்ந்த பல கவிஞர்கள் இக்காலப்பகுதியில் தமது பல்வேறு பரிமாணங்களை கவிதை துறையில் காட்டினார்.
இராஜதர்மராஜா, திருமலை நவம், புஸ்பா கோமஸ் மு.இராஜ்கபூர், தங்க சச்சிதானந்தம், வின்சன்,புதுவை இரத்தினதுரை இரத்தின விக்னேஸ்வரன், ஆசீர்வாதம்,சிவலிங்கம்,மு. ராஜ்கபூர் மட். வெலிங்டன்ஆனந்தபிரசாத் கி.பவானந்தம் பூநகர் மரியதாஸ் தங்கமகேந்திரன் செ.நவசோதிராஜாநூலகர் ஜோன் செல்வராஜா போன்ற இடதுசாரி சிந்தனையால் ஈர்க்கப்பட்ட இளைஞர் குழாம் இலக்கியத்துறையில் பாரிய பங்களிப்பை செய்தார்கள்.பிரதிமாதந்தோறும் நடாத்தப்பட்ட இலக்கி; கலந்துரையாடல்கள், உரைகள், விமர்சனங்கள், படைப்புக்களின் அறிமுகம் என்பன நடைபெற்ற காலத்தில் ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளாகளான செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், என்.கே.ரகுநாதன, செ.கணேசலிஙகம, கே.டானியல், சில்லையூர் செல்வராஜன், இக்பால், கலைவாதிகலீல், வி.ரி இளங்கோ, ஷெல்லிதாசன், ராஜம்புஸ்பவனம், பேனா மனோகரன், வ.அ. இராசரத்தினம், ரெஜினா வில்லியம், கஜதர்மா, ந.பாலேஸ்வரி, போன்ற இலக்கியகர்த்தாக்கள் இந்நிகழ்சிகளில் கலந்துகொண்டு திருகோணமலை கலை இலக்கியத்திற்கு புதிய பரிமாணத்தை பாய்ச்சினார்கள்.
முன்னோடி அமைப்பினால் நடாத்தப்பட்ட கவிதை அரங்கில் கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம் கலந்துகொண்டது இவ்வமைப்பினாலையே புதுவை இரத்தினதுரையின் ஒரு தோழனின் காதல் கடிதம் (1974) என்ற கவிதை நூலை வெளியிட்டு வைத்தது எல்லாம் வரலாற்று பதிவுகளாகும் இதே போன்றே பிற்காலத்தில் மெல்லிய மனவயப்பட்ட கவிதைகளை எழுதிய இளைய தலைமுறையினர் இக்காலப்பகுதியில் காணப்பட்டார்கள். ஆலன், நிலா தமிழின்தாசன், திருமலை அ.சந்திரன் போன்றோரின் கவிதைகள் இதற்கு உதாரணமாகும்.
நாவல் இலக்கியப் படைப்பில் 70ம் ஆண்டுக்குமுன் ந.பாலேஸ்வரி ஆகியோரைத் தவிர வேறு எவரும் இத்துறையில் ஆர்வம் காட்டவில்லை. 1970ம் ஆண்டுக்குப்பின் வ.அ.இராசரத்தினம் அவர்கள் ஐந்து நாவல்களையும், மூன்று குறுநாவல்களையும் படைத்திருந்தார்.
சற்றும் பிந்திய காலப்பகுதியில் ந.பாலேஸ்வரி சுடர்விளக்கு,உறவுக்கப்பால்,பூஜைக்கு வந்தமலர் ஆகிய மூன்று நாவல்களை எழுதியிருந்தார். இவரது நாவல்கள் மெல்லிய உறவுகளையும், இளைய துடிப்புக்களையும், எண்ணங்களையும் சொல்லும் நாவல்களாக காணப்பட்டது. ஆனால் 1973ம் ஆண்டு க.அருள்சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்து விட்டது என்ற நாவலுடன் ஓர் தேசிய தரத்தை திருக்கோணமலை இலக்கிய படைப்புக்கள் பெற முற்பட்டன.
மேடை நாடகத் துறையில் 1970ம் ஆண்டு கணிசமான பதிவுகளை வாங்கிக் கொண்ட காலமாக இக்காலம் திகழ்கிறது. பெருந்தொகையான நாடக மன்றங்கள் உருவாகிய காலம் இதுவாகும். இம்மன்றங்களின் பெருக்கத்தின் காரணமாக இயக்குனர்கள், நடிகர்கள், காட்சி அமைப்பு விற்பன்னர்கள் அதிகமாக உள்வரத் தொடங்கிய காலமாக இது காணப்படுகின்றது.
1980ம் ஆண்டுக்கும் 1990ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் கலை இலக்கிய வளர்ச்சியில் ஒரு வரட்சி கொண்ட காலத்தன்மை நிலவியதை சகல துறைகளிலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. வடகிழக்கு யுத்த நெருக்கடிகள், இடம்பெயர்வுகள், அகதி வாழ்க்கைகள், கோரச்சம்பவங்கள், கொடிய இனநெருக்கடிகள் மலிந்துபோய் கிடந்த சூழ்நிலையில் இலக்கியவளாச்சி ஏற்பட வாய்ப்பில்லாமல் போனபோதும் மென்தன்மையான பொதுவளர்ச்சியே காணப்பட்டது. இக்காலப்பகுதியில் கவிதைகளில் பல்துறை சார்ந்த வளர்ச்சி காணப்பதற்கு அடையாளமாக கலாநிதி சி.சிவசேகரம், (நதிக்கரை மூங்கில், பாலை. போரின் முகங்கள், செப்பனிடப்பட்ட படிமங்கள், கல்லெறிதூரம் வடலி ) என பலகவிதைத்தொகுதிகளை படைத்து ஈழத்து இலக்கியப்பரப்பை வளப்படுத்திய பெருமை இவரைச்சாரும். மூதார்முகைதீன் (முத்து, இழந்துவிட்ட இன்பங்கள் 2003, ஒரு காலம் இருந்தது 2010) மைக்கல் கொலின் போன்றோரின் வீச்சுக்கவிதைகளும் அஸ்ரப்பா நூர்டீன் நில தமிழின் தாசன் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி போன்றவர்களின் நடுத்தன்மையான போக்கும், கவிதை வளர்ந்து வந்துள்ளமையினைக் காட்டுகிறது.இவர்களில் மூதார் முகைதீன் தனக்கென ஒரு தனியான வாசகர்களை சேமித்துவைத்திரு;கும் கவிவாணனாக வலம் வந்தார்.
1980 பின்னைய காலப்பகுதியில் எழுந்த யுத்தம் இனப்போர்,நெருக்கடிகள் சித்திராநாகநாதன் (கிரமத்துமண்கள்சிவக்கின்றன1990) கனகசரை தேவகாட்சம் எழுதிய (காலக்கீறல்கள் 1996) (குமுறல்கள் 1998) (குருதி மண் 2000) எம்.ஐ.எம் தாஹிர் நந்தினி சேவியர் போன்றவர்களின் படைப்புக்கள் தீருகோணமலை சிறுகதை வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பை செய்தன.
நாவல் இலக்கிய துறையின் இக்காலம் சற்றும் வேறுபட்ட முறையில் தேசியதரம் அல்லது சர்வதேச பார்வை கொண்ட நாவல்கள் எழுந்த காலமாக இக்காலப்பகுதியைக் கூறலாம். அ.அ.ஜெயராஜாவின் சேகுவரா, (1979) அப்பா (1979) போரும் மனிதனும் (1986) மற்றும் (சூ.நோபேட்) கோவிந்தனின் புதியதோர் உலகம் (1985); ஆகிய நாவல்கள் மிக முக்கியம் கொண்ட நாவல்களாக காணப்படுகின்றது. ஜெயராஜாவின் நாவல்கள் சேகுவரா போராட்டத்தை மையப்பொருளாக கொண்டு எழுந்த நாவல்களாக காணப்பட கோவிந்தனின் நாவல் விடுதலைப் போராட்டத்தில் காணப்பட்ட இயக்க முரண்பாடுகள் ஈழப்போரின் அரசியல் கொதிநிலைகளை சொல்லும் நாவலாக காணப்படுகிறது.
இதேவேளை ந.பாலேஸ்வரியின் கோவும் கோயிலும் 1980 உள்ளக்கோயில் 1983 பிராயசித்தம் 1984 உள்ளத்தினுள்ளே 1990 தத்தைவிடுதூது 1992 வி.தில்லைநாதன் இதய தந்திகள் மீட்டப்படுகின்றன (1978) புரட்சிபாலன் செல்வகுமார், எழிலோன் கா. இரத்தினலிங்கம் வீ.என்.சந்திரகாந்தி ஆகியோரின் நாவல்கள்; பொது வாழ்வை சித்தரிப்பவையாக காணப்படுகின்றன 2000ம் ஆண்டுக்குப் பின்போராட்ட வடிவங்கள் சர்வதேச முக்கியத்துவத்துடன் உலக வல்லரசுகளின் ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள் வலுப்பெற்ற போதும் அவற்றின் தாக்கம் திருக்கோணமலை கலை இலக்கியத்தில் சொல்லக்கூடிய மாற்றங்களை கொண்டு வரவில்லை. இருந்த போதிலும ஓடையின் நீரோட்டம் போன்ற ஒரு வளர்ச்சி மிக மெதுவாக ஊர்ந்து கொண்டு போவதை பொதுவாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அதிலும் கிண்ணியா, மூதூர் பிரதேசத்தின் புதிய கவிஞர்களின் பங்களிப்பு இக்காலப்பகுதியில் திருக்கோணமலையின் கவிதை துறையை சரியவிடாது காத்து நிற்கின்றது.
சிறுகதை துறையில் திருமலை சுந்தா, ச.அருளானந்தம், வீ.என் சந்திரகாந்தி, கிண்ணியா அமீரலி, கனகசபை தேவகடாட்சம், ராணி சீத்ரன் போன்றவர்கள் போதியளவில் எழுதி வந்தபோதும் தற்கால சூழ்நிலை நெருடல்களை அனுபவ துருவல்களை இவர்களது கதைகளில் காணமுடியவில்லை. இருந்தபோதும் மூதூர் ஏ.எஸ்.உபைத்துல்லா, (ஜலசமாதி 2008) நிழலைத்தேடி 2017) எம். எஸ.; அமானுல்லா (வரால் மீன்கள். 2007 ஒருபெண்ணின் கதை (2017) கனகசபை தேவகடாட்சம் காலக்கீறல்கள்(1996 குமுறல்கள் 1998) சூசைஎட்வேட் இங்கு வீசியது ஒரு சமாதானக்காற்று (2019,) ஆகியோரின் படைப்புக்கள்; பிரதேச மண்வாசைன செழுமைகளையும் இஸ்லாமிய மற்றும் தமிழ் மக்கள் வாழ்வுகலந்த பண்புகளையும் சித்தரிப்பவையாக காணப்படுகின்றன.
2000 ஆம் ஆண்டுக்குப்பின்னுள்ள நாவல் வளர்ச்சியை நோக்கின் மீண்டும் வ.அ.இராசரத்தினத்தின் வருகை புரட்சி பாலன் அன்வர்டீன், மைக்கல் கொலின்காதல் வெண்ணிலா கையில் சேருமா ? (2003) வீணையடி நீஎனக்கு (2021)போன்றவர்களின் ஒரு சில நாவல்கள் பிரதேச வரலாற்றை நிரப்பிய பெருமை கொண்டவையாக இருக்கின்றன. பிற்காலத்தில் திருமலை மதன், ஆனந்தபிரசாத் போன்றோரின் படைப்புக்கள் அவதானம் கொண்டவையாக விளங்கியது.
மேடை நாடக துறையிலும், நாடக இலக்கிய துறையிலும் இக்காலப்பகுதி குறிப்பாக 2000ம் ஆண்டுக்குப்பின் பாடசாலை நாடகங்கள் அதிசயத்தக்க வளர்ச்சியை அமைந்துள்ளமையை பாடசாலை தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக ராணி ஜெகசோதி, பிலிப் ஆனந்த ரமணன் நக்கீரன், தில்லை முகிலன், இரட்ணசிங்கம், எஸ்.பற்குணம், த.அமரசிங்கம், திருமலை நவம் போன்றோரின் உழைப்பினாலும் திருமறைக் கலாமன்றம், கீழைத்தென்றல் கலாமன்றம் போன்றவற்றின் பங்களிப்பினாலும் பாடசாலை நாடகங்கள் காத்திரமான வளர்ச்சியை காணுகின்றது.
நாடக இலக்கியம் என்ற துறையில் 1887ம் ஆண்டு அகிலேசப்பிள்ளை என்பால் எழுதிய கண்டி நாடகத்தில் இருந்து வளர்ச்சி ஒன்று கருக் கொள்கிறது. ஏனைய மாவட்டங்கள் போல் நாடக இலக்கியத்தின் செம்மை சான்ற வளர்ச்சி திருக்கோணமலையில் குறிப்பிடக்கூடியதாக இல்லாது இருந்தபோதும் 1990ம் ஆண்டுக்குப் பின் பாலசுகுமார், த.அமரசிங்கம், த.பி.சுப்பிரமணியம், கா.சிவபாலன், திருமலைநவம் போன்றோர் ஆங்காங்கே எழுதிய நாடக இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளை தவிர நாடக இலக்கியத்தின் நெறி சார்ந்த வளர்ச்சி திருக்கோணமலை பிரதேசத்தில் குறைவாகவே இருந்துள்ளது.
அதேவேளை நாவலின் வரவு மிக அருந்தலாகவே இருந்துள்ளது. ஆனால் சிறுகதையில் தேவகடாட்சம், திருமலை சுந்தா, என்.சித்திரவேல், அ.ச.பாய்வா, வீ.என்.சந்திரகாந்தி கிண்ணியா ஏ.எம்.எம் அலி போன்றோரின் படைப்புக்கள்; திருமலை சிறுகதைகள் இலக்கியத்தை தூக்கிப்பிடிக்கும் கைங்கரியமாக இருந்தது.திருக்கோணமலை கலை இலக்கியத்துறையின் வளர்ச்சி ஓர் மந்தத்தன்மை கொண்டதாக இருந்தபோதிலும் நாவல், சிறுகதை, நாடகம், தொலைக்காட்சி, மெல்லிசை, சங்கீதம் என்ற தொகை வகைப்பட்ட கலை இலக்கியத்தின் கூட்டுமொத்த வளர்ச்சியையும் ஓரளவு காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக கவிதை துறையில் மூதூர், கிண்ணியா போன்ற கிராமங்களில் இருந்து பெருந்தொகையான கவிஞர்கள் எழுத முற்பட்டதும் பல்வேறு கவிதைகள், ஏடுகள் இக்காலப்பகுதியில் வெளி வந்தமையும் இதற்கு அடையாளங்களாகும். எஸ் ஆர். துனபாலசிங்கத்தை ஆசிரியராகக்கொண்ட நீங்களும் ஏழுதலாம் கவிதை ஏடு புதிய தலை முறையினருக்கு களமாக அமைந்தது.
2012 ம் ஆண்டுக்குப்பின், திருக்கோணமலை பிராந்தியத்தில் இலக்கிய வடிவங்களின் உருவாக்கம் அருந்தலாக இருந்தபோதும் கவிதைத் துறையை பெரும்படியாக தேர்ந்தெடுத்த இளைய சமூகமொன்று அதிகமான வரவை பதிவு செய்துள்ளார்கள்; அவ்வகையில், தில்லைநாதன் பவித்திரனின் ரசவாதம் (22010) குறியிடல் (2012) திருமலை அஸ்ரப்பின் கவிதைகள்கிண்ணியாவை சேர்ந்த ஜே. பிரோஸ்கான் என் எல்லா நரம்புகளிலும் 2013. தீ குளிக்கும் ஆ, ண்மரம் 2012, நாக்கு 2017, ஆண்வேசி 2014, இதுவும் பிந்திய இரவின் கனவுதான் 2009, மாயனின் சிறையிலிருந்து மடல்கள் 2016. ஏ. நஸ்புள்ளா காவிநரகம் 2013, கிண்ணியா சபருள்ளா. வியத்தொழுகும் மழைப்பொழுது 2009, கவிஞர் யோகானந்தனின் என்மனவானில் 2009, சுஜந்தன் நிலம் பிரிந்தவனின் கதை 20011, ஷெல்லிதாசனின் செம்மாதுளம் பூ 2010, நகரவீதிகளில் நதிப்பிரவாகம்2013 ஆகிய தொகுதிகளில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் ஈழத்து இலக்கியப்போக்கின் செழுமையையும் வளத்தையும் படம் பிடித்து காட்டுபவையபாக அமைந்துள்ளன.
இதேவேளை புலம் பெயர்ந்து சென்று திருகொணமலை இலக்கிய பார்வையூடாக புலம்பெயர் இலக்கியத்துக்கு வளம் சோத்து வருபவர்கள் என்ற வகையில் ஆழியாள் அவுஸ்திரேலியா ஆனந்த பிரசாத் கனடா பாரதிபாலன் டென்மார்க் மதிவதனி சுவீஸ்லாந்து சித்திரா நாகநாதன் இங்கிலாந்து மு. வே யோகேஸ்வரன் இந்தியா க.ரமணிதரன் அமெரிக்கா எஸ். சேல்வகுமார்.கனடா புரட்சிபாலன் கனடா .உவர்மலை வி.எஸ். குமார். இங்கிலாந்து. மயில் மகாலிங்கம் ஜேர்மன் த.லிங்கரெட்ணம் நெதர்லாந்துபோன்ற புலம் பேயர் இலக்கிய கர்த்தாக்களின் படைப்புக்கள் திருமலை பங்களிப்பை எடுத்துக்காட்டி நிக்கின்றன.