(மன்னார் நிருபர்)
21-04-2022
இயற்கை முறையில் நஞ்சற்ற விவசாய செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவினால் கடந்த வருட இறுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை மூலம் பெறப்பட்ட பாரம்பரிய நெல் இன்றைய தினம் வியாழக்கிழமை (21) வைபவ ரீதியாக மன்னார் முருங்கன் நெற்களஞ்சியத்தில் களஞ்சியப் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருட இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பெரும்போக செய்கையின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விவசாயிகளுக்கு இலவசமாக மெசிடோ நிறுவனத்தால் பாரம்பரிய நெல் விதைகளான சீனட்டி,மொட்டக்கறுப்பன் போன்ற மரபணு மாற்றப்படாத விதைகள் மற்றும் நெற்செய்கை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டு இயற்கை முறையில் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி இயற்கை முறையில் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கையின் அறுவடை இவ்வாரம் இடம் பெற்ற நிலையில் 10,000 கிலோ விதை நெல்கள் இன்றைய தினம் (21) விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப் பட்டு எதிர் வரும் போக செய்கைக்காக தயார் நிலையில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் செய்கைக்காக இலவசமாக வழங்குவதற்கு என களஞ்சியப் படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்,மன்னார் மெசிடொ நிறுவன பனிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ, மெசிடோ நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டு நெல் தூய்மைபடுத்தல் மற்றும் தொற்று நீக்குதல் ,களஞ்சியப்படுத்தல் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.