தென்மராட்சி வலயத்தை சேர்ந்த 10 கிராமப்புற பாடசாலைகளுக்கு முதல் கட்டமாக தென்மராட்சி பவுண்டேசன்(Canada),
IMHO-USA,ரட்ணம் பவுண்டேசன்(UK) என்பவற்றின் நிதிப்பங்கீட்டில் திறன் பலகைகளுடனான திறன் வகுப்பறைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இவற்றுள் ஒர் அங்கமாக மேற்படி வலயம் சார் அனைத்து பதவிநிலை உத்தியோகத்தர்களையும் பயிற்றுவிக்கும் செயலமர்வு IMHO-USA,ரட்ணம் பவுண்டேசன்(UK) என்பவற்றின் அனுசரணையில் ஏப்ரல் 7ஆம்,8ஆம் திகதிகளில் மேற்படி வலயத்தின் முகாமைத்துவ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இச்செயலமர்வில் இவ்வலயத்தின் பிரதிக்கல்விபணிப்பாளர்கள், உதவிக்கல்விபணிப்பாளர்கள், சேவைக்கால ஆலோசகர்கள், ஆசிரிய மத்திய நிலைய அதிகாரிகள் மற்றும் வலயத்தின் கணனி கற்கை நிலைய வளவாளர்கள் என 30 பேர் வரையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சியின் மூலம் திறன் பலகை வழங்கப்பட பாடசாலைகளில் அதன் பயன்பாடு தொடர்பான கிரமமான மேற்பார்வை அறிக்கைகள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே மேற்படி பாடசாலைகளில் ஆரம்ப மற்றும் இடைநிலை வகுப்புக்களில் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் மூன்று நாடகள் கொண்ட பயிற்சி வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுமுள்ளன.
இவ்வகையிலான திறன் பலகைகளை பயன் படுத்தும் பயிற்சிகளினூடு ஆசிரிய-மாணவ இடைவினை செயற்பாடுகள், கற்றல்-கற்பித்தலில் பாரிய முன்னேற்றங்களுக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது மாணவர்களின் சுயசிந்தனை கிளர்வு மற்றும் அவர்களது தன்னம்பிக்கை போன்ற வற்றை வளர்த்தெடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்பதும் திண்ணம்.