கதிரோட்டம் 22-04-2022
நீலக் கடல் நீரால் சூழப்பட்ட இலங்கைத் தீவின் உள்ளே வீதிகளில் தீச் சுவாலைகள் பற்றி எரிகின்றன. வீடுகளில் ‘அடுப்பை’ எரிக்க முடியாதவர்கள் வீதிகளுக்கு வந்து எரிந்த நெஞ்சங்களோடு போராடத் தொடங்கியுள்ளனர். அவர்களது வயிறுகளும் பசியால் எரிகின்றன என்பதை அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நன்கு அறிவார்கள்.
ஆனால் வீதிகளில் இறங்கியுள்ள அந்த அப்பாவிகள் மீது பழியைப் போடுவதற்காக ஆயுதப் படையினரும் பொலிசாரும் பொது மக்களின் வாகனங்களுக்கு தீ வைக்கின்றனர்.
இவ்வாறாக இலங்கை என்னும் அழகிய தேசம் அழுக்கானவர்களின் கைகளுக்குள் அகப்பட்டு அலங்கோலமாகத் தெரிகின்றது. அவர்களை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவதற்காகவே இடம்பெறுகின்ற போராட்டங்கள் அரசின் காவலர்களான ‘காடையர்களால் அடக்கி ஒடுக்கப்படுகின்றன.
இன்னொரு பக்கத்தில் தேசம் ஊழல் பேர்வழிகளின் ஆட்சிக்குள் அகப்பட்டு தற்போது, பொருளாதாரச் சுமையில் சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில அமைச்சரவையில் அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் நியமனம் வழங்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆட்சி பீடத்தை ஆட்டும் வகையில் மக்கள் எழுச்சியுடன் போராடுகின்ற இந்த நெருக்கடியான வேளையில் கற்றவர்களையும் ஊழல் அற்றவர்களையும் அமைச்சர்களாக ஏற்றிருக்க வேண்டும். ஆனால், வியாழேந்திரன் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் போன்றவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுள்ளார்கள் என்கின்ற விடயம் மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
கோத்தபாய என்னும் ஆட்சி பீடக் கொள்ளையர்களின் தலைவன் பதவியை விட்டு நீங்கிச் சென்று விட வேண்டும் என்றும் நான்கு பக்கங்களிலிருந்தும் எழுச்சிக் கோசங்கள் எழுந்து நிற்கையில். அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் சொகுசுக் கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த நாட்களில் வியாழேந்திரனும் பிள்ளையானும் நாடு முழுவதற்கு எதைச் செய்து ‘சாதிக்கப் போகின்றார்கள்’ என்று மக்கள் கேள்விகளை முன்வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இவ்வாறிருக்கையில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற ரம்புக்கனை சம்பவத்தின் போது தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைத்த காணொளி தன்னிடம் உள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் நீதிபதி ஒருவரிடம் நேரடியாகத் தெரிவித்துள்ள சம்பவம் எதைக் காட்டுகின்றது என்பதை நாம் சற்று யோசிக்க வேண்டும்.
ஆட்சியாளர் எவ்வளவு கொடியவர்களாக இருப்பினும், அவர்கள் தங்கள் பதவியில் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதையே முப்படைகளும் உறுதி செய்ய வேண்டும் என்பதான ஏற்பாடுகள் உள்ளன. உழைப்பவர்கள் அல்லாதவர்களால் நிரப்பப்பட்டுள்ள ஆட்சி அதிகாரம் கொண்ட மாளிகைகளில் உள்ள ஆடம்பர மண்டபங்களில் இடம்பெறும் அவர்களது கலந்துரையாடல்களில் இந்த வகையான தீர்மானங்கள் அவர்களது நலனைக் காப்பதற்காய் எடுக்கப்பெறுகின்றன.
ஆனால் ரம்புக்கனைச் சம்பவம் இடம்பெற்ற போது இரண்டு பொலிஸாரும், இராணுவத்தினர் ஒருவரும் வருகை தந்தனர்.பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு உயரமான,மெலிந்த பொலிஸ் ஒருவரே தீ வைத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளினால் யாழ்ப்பாணம் வன்னி போன்ற பகுதிகளிலிருந்து பெருமளவு தமிழ் மக்கள் தமிழ்நாட்டை நோக்கி படகுகளில் பயணிக்கும் ‘பயங்கரப் பயணம் அந்த ஆழக்கடலின் மேலாக இடம்பெறுகின்றது.
ஒரு பக்கம் ஆழக்கடலின் அலைகளின் அகோரம். மறுபக்கம் இலங்கை இந்த கடலோரக் காவல் படையினரின் ரோந்து நடவடிக்கைகள். இவ்வாறான நெருக்கடிகளுக்குள்ளும் எமது மக்கள் தமிழகம் நோக்கிச் செல்லுகின்றார்கள் என்றால் அதன் சிரமங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறாக மாங்கனித் தீவாம் இலங்கையில் தற்போது யதார்த்தமாகத் தெரியும் அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்பில் இருந்து விடுதலை பெற அங்குள்ள மூவின மக்களை உள்ளடக்கிய உழைக்கும் பிரிவினர் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர்களுக்குள் அடங்கியுள்ள புத்திஜீவிகள் அரசியல் நாற்காலிகளை கைப்பற்ற வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம்.