யாழ்.அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், கோண்டாவிலை வசிப்பிடமாகக் கொண்டவருமான சமூக, சமய சேவையாளன் தம்பையா அரியரத்தினம் பத்து வெளி நாடுகளுக்குச் சென்று வந்த நிலையில் தான் பெற்ற அனுபவங்களைப் பயன்படுத்தி எழுதியுள்ள “இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வும் வாழ்வியலும்” எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(17.4.2022) பிற்பகல்-03.30 மணிக்கு இணுவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராசா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஈ.குமரன் கலந்து கொண்டு வெளியீட்டுரை ஆற்றி மேற்படி நிகழ்வை வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவரும், இணுவில் வேரும் விழுதும் அமைப்பின் அமைப்பாளருமான பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் நூலின் மதிப்பீட்டுரையை நிகழ்த்தினார். நூலின் ஏற்புரையை நூலாசிரியர் தம்பையா அரியரத்தினம் நிகழ்த்தினார்.
வாழ்த்துரைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்கினேஸ்வரன், யாழ்.பல்கலைக்கழக ஆங்கிலமொழிக் கற்கைகள் துறைத் தலைவர் கே.சண்முகநாதன் ஆகியோர் ஆற்றினர்.
நிகழ்வில் நூலாசிரியருக்கான சிறப்புக் கெளரவம் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம விருந்தினர் உள்ளிட்டோருக்கான கெளரவமும் நடந்தேறியது.
இதேவேளை, மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரியரும், இணுவில் அறிவாலயத்தில் முன்னாள் தலைவருமான இராசா பாலச்சந்திரன், மூத்த ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தா, அண்ணா தொழிலகத்தின் தொழிலதிபர் நடராஜா திவாகர், இணுவில் அறிவாலயத்தின் துணைச் செயலாளரும், வலி.தெற்குப் பிரதேச சபை உறுப்பினருமான வ.தனகோபி, இணுவில் கலை இலக்கிய வட்ட உறுப்பினர் ந.ஞானசூரியர், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்துறைசார்ந்தவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.