பாலசிங்கம் சேர், ஆட்டோமயூரன் வீட்டு வாசலில் நின்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார். காலை 6.00 மணியிருக்கும். கண்களைக் கசக்கியப் படி மயூரன் படலையைத் திறந்துக்கொண்டு வெளியே ஓடி வந்தான். பாலசிங்கம்சேர் எங்கேயோ அவசரப் பயணம் போவது போல் மயூரன் காதில் குசு குசுத்தார். அவரது அவசரமும் குசு குசுப்பும் சொந்த விவகாரம் பற்றியதாகத் தெரியவில்லை…. மயூரன் சாரத்தைக் கழற்றி உதறி விட்டு, முக்கால் கால் சட்டையை மாற்றிக்கொண்டு ஆட்டோவை இழுத்தான்.
இன்று விடியற் காலையில் தான் அந்த விபத்து நடந்ததாம்… அந்த ரயில் கடவையில் ராணுவ வாகனமும் ரயிலும் மோதிக் கொண்டனவாம்… ஒழுங்கான தகவல் சொல்வதென்றால் ராணுவ வண்டிதான் ரயிலுடன் மோதியுள்ளது என்று சொல்லலாம்.
“றயில் கடவையில் ராங்கித்தனம் காட்டினா..இதுதான் நடக்கும்..! ஒரு காலமும் கோச்சிக்காரன் மேல் விசாரணை கிடையாது!” பாலசிங்கம் சேர் எரிச்சலோடு முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
அரை கிலோ மீட்டர் தூரம் அந்த வாகனத்தை றயில் என்ஞ்சின் இழுத்துச் சென்றுள்ளது.
சப்பையாக்கப்பட்ட ஒரு பியர் டின்னைப் போல அந்தப் பெரிய வாகனத்தின் தகரக் கூடு ஒட்டிக் கிடந்தது.! ஊர் மக்கள்ஆண்களும், பெண்களுமாய் கூடி வாகனத்திலிருந்தவர்களை வெளியில் எடுப்பதற்கு பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அலவாங்கு, இரும்புக் கம்பிகள்…தடிகள் கொண்டு கதவுகளை நெம்பி ஒவ்வொருவராக வெளியில் எடுத்தார்கள். …
அந்த வாகனத்திலிருந்து பத்து உடல்களைத்தான் வெளியில் எடுக்க முடிந்தது. இன்னும் வாகனத்துக்குள்ளே சிலர் இருக்கலாம். இரத்தம் வடிய வடிய… சில உடல்கள் வலை மீன்களைப் போல துடிப்பதைக் காண முடிந்தது. அங்கு உடல்களைத் தூக்கி சுமந்து அந்த டிப்பர் வாகனத்தில் போட்டுக் கொண்டிருந்தவர்கள்… எல்லோரும் பெண்களேயாவர். அவர்கள் இரத்தத்தில் தோய்ந்திருந்தார்கள்… ஆண்கள் வாகனத்தை நெம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த ரயில் கொழும்புக்குப் போய்க் கொண்டிருந்த பயணயாகும். நூற்றுக் கணக்கான பிரயாணிகள் செய்வதறியாது மிரண்ட நிலையில் பார்த்துக் கொண்டிருக்க, சில பிரயாணிகள் வாகனத்திலிருந்தவர்களை வெளியில் எடுப்பதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருந்தனர்.
உயிர் பிரிந்துக் கிடக்கும் உடல்கள்… இரத்தம் கசிந்தோட…. துடித்துக் கொண்டிருக்கும் உடல்கள்.. ஓடி ஓடி உடல்களைச் சுமந்து டிப்பர் வண்டியில் வைக்கும் காட்சிகள்… அவை எல்லாமே யுத்தக் காலத்துச் சம்பவங்களை நினைவூட்டிக் கொண்டிருந்தன.
பாலசிங்கம் சேர் கல்லாய், மரமாய், ஆடாது, அசையாது, கண் சிமிட்டாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.! அவரது முகத்திலும், உடலிலும் எது வித பதட்ட உணர்வுகளும் தென்பட வில்லை. “என்ன மனுசன்..! மரக்கட்டை மாதிரி…! முகத்தில் புன்னகை வேறு…!”
விடியற்காலையிலேயே ஆட்டோ பிடித்துக்கொண்டு ஆர்ப்பரித்தவாறு ஓடி வந்த மனுசனிடம் எந்த வித சலனமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை… அந்தத் திகில் நிறைந்த துயர நிகழ்வை ரசித்துக்கொண்டிருப்பது போலவேநின்றார்!
ஆனால் மனதுக்குள்…. முன்னால் நடந்த பழைய சம்பவங்களையெல்லாம் படம் போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்… எத்தனையெத்தனை பிணக் குவியல்களை அவர் கண்டிருப்பார்..?குண்டு வெடி பட்ட உடல்கள் குற்றுயிரும் குற்றுயுயிருமாக துடிதுடிக்க குவியல் குவியலாகக் கண்டு மிரண்ட காட்சி…. எத்தனையெத்தனை ஆயிரங்கள்…! அவரது பலகீனமான உடல் அந்தக் கோர நினைவுகளை நினைக்கையில் தள்ளாடியது.
அவரது நிஷ்டையைக் கலைத்ததுபோல் திடுதிப்பென பலத்த சத்தத்துடன் ஐந்தாறு கனரக வாகனங்கள் வந்து நின்றன. திமு திமு வென பல சீரணி உடையினர் குதித்து இறங்கி வாகனம் கிடந்த இடத்துக்கு ஓடினர்.வண்டியை திறப்பதற்கு முழு முயற்சி எடுத்தனர். அவர்கள் வந்த பிறகு மூன்று சடலங்களை வெளியே எடுத்தனர். வேறு எவரும் இல்லை.
ரத்தம் தோய்ந்த நிலையில் நின்ற ஊர் மக்களைப் பார்த்து நன்றி உணர்வோடு வண்டிகளில் வந்தவர்கள் கும்பிட்டனர். மூன்று சடலங்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திரும்பிச் சென்றார்கள்.
றயில் சத்தமிட்டது. பிரயாணிகள் பாய்ந்தோடினார்கள்.
ஆஸ்பத்திரியை நோக்கி ஓடிய அந்த வாகனத்தில் ஒரு அதிகாரி மனம் நெகிழ்ந்து பேசினார். “தெவியன்கே மினிசு..! இந்த மக்கள் தெய்வப் பிறவிகள்… மனிதாபிமான இரத்தம் இவர்களிடம் ததும்பி ஓடுகிறது. … நாங்கள் தான்…. அந்த மக்களுக்கு…” அவருக்கு பேச்சு வரவில்லை. ஏதோ சொல்ல வந்தவரின் தொண்டை மனசாட்சியால் அடைத்தது..! மற்றுமொரு நடுத்தர வயதான அதிகாரி பேசத் தொடங்கினார். “எங்களது இந்த பன்னிரண்டு உயிர், அவர்களுடைய உயிர் இழப்புக்கு முன் எம்மாத்திரம்..?”என்று மனம் கலங்கியவாறு பேசினார். சில காலங்களில் கல்லுக்குள்ளும் ஈரம் கசியும் என்பார்கள்..!
விபத்து நடந்த இடத்தில் எவரும் இருக்க வில்லை. சில சீருடைகள் மட்டும், அந்த எலும்புக் கூடாய் கிடந்த வாகனத்தை உருட்டிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பாரம் தூக்கி வாகனம் வந்து நின்றது.
சில மணித்தியாலங்களுக்குள் அந்த வாகனமும் அங்கிருந்து அகற்றப்பட்டுக் கொண்டிருந்தது. பாலசிங்கம் சேர் அந்த எலும்புக் கூட்டு வாகனம், மற்ற வாகனத்தில் செந்தூக்காய் தூக்கி… மறு வாகனத்தில் போடப்படுவதை பார்த்து ரசித்தபடி இன்னும் அந்த இடத்தில் கடைசி ஆளாக … நின்றுக் கொண்டிருந்தார்.
சில மணித்தியாலங்களுக்குள் எல்லாமே நடந்து முடிந்தன. தான் மட்டுமே அந்த இடத்தில் நிற்பதையுணர்ந்து தன்னை சுதாகரித்தபடி மெதுவாக வீட்டுக்கு நடந்தார்.
—–
வீட்டுக்கு வந்ததும் மகன் லேசாகக் கடிந்துக் கொண்டான். “அப்பா..! அந்த இடத்துக்கெல்லாம் போயிருக்கக் கூடாது..! சொன்னா கேக்க மாட்டியல்…” ஒரே மௌனம்… பாலசிங்கம் சேர் என்றுமில்லாதவாறு புன்னகையோடு மகனைப் பார்த்தார்… என்ன பெருமிதம்..! எதையோ சாதித்து விட்ட களைப்பில், வீட்டு முற்றத்தில் இருந்த செவ்விளநீர் கொப்பில் ஒன்றை வெட்டி.. வீராவேசத்துடன் சீவி மட மடவென வாய் வழிய… தொண்டையும், கழுத்தும், சட்டையும் நனையும்படி குடித்துக் கொண்டிருந்தார்.ஓர் வீரா வேச மிடுக்குடன் சட்டையாhல் வாயைத் துடைத்துக்கொண்டார்.
எதிர்க்க முடியாத எதிரிக்கு கேடு வரும்போது மனம் எவ்வளவு ஆறுதலடைகிறது…? எவ்வளவு உள்ளுர வெற்றி பெருமிதம் கொள்கின்றது?
சமீப காலமாக அப்பாவின் நடவடிக்கைகளை கவனிக்கும் போது மகன் குணராசாவுக்குகவலை கூடிக் கொண்டேயிருந்தது. அப்பா கொஞ்சம் மனம் குழம்பிப் போயிருக்கிறவர்.!பெரிய ஒரு தாக்கத்திலிருந்து அவரால் இன்னும் மீள முடியவில்லை…
குணராசா. மனைவி..குழந்தை…. தாய்… மூவரையும் பறி கொடுத்து மனதைக் கல்லாக்கிக் கொண்டு நடைப்பிணமாக நடமாடுகின்றவன்…. தகப்பனை அவரது போக்கிலேயே விட்டு விடுவதின் மூலம் அவரது சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதாக நினைத்துக்கொள்கின்றான்..
அந்தி நேரம்…
இன்றைக்கு கார்த்திகை தீபம். சிட்டி விளக்குகளுக்கெல்லாம் திரி வைத்து எண்ணெய் வார்த்து விட்டு மகனை தீபம் ஏற்றும்படி சொல்லி விட்டு முருகன் கோவிலுக்குப் போனவர் எட்டு மணியாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை.!
அவர் மயூரனைக் கூட்டிக் கொண்டு விபத்து நடந்த றயில்வே கடவைக்குப் போயிருக்கிறார்.! எப்போதும் சன சந்தடி இல்லாத மரங்கள் குவிந்து இருள் கவ்வி.… மனப் பயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த இடத்துக்குப் போய் சூடம் பற்றவைத்துக் கொண்டிருக்கிறார்.!
அக்கிரமக்காரர்களை தெய்வம் இன்று தண்டித்திருப்பதாகவும் … நின்று கொன்றிருப்பதாகவும்.. அந்த தெய்வத்துக்கு நன்றி செலுத்த வந்திருப்பதாகவும் மயூரதனிடம் ரகசியமாகச்சொல்லிக் கொண்டிருக்கும் போது பொலீஸ் ஜீப் வந்து நின்றது.
“பிரின்சிபல்; சேர்..! இந்த நேரத்தில…. இந்த இடத்தில… வந்து என்ன செய்றியல்?” மரியாதையோடு ஒரு பொலிஸ் அதிகாரி கேட்டார். பாலா சேர் திக்கு முக்காடிப் போனார். ஓன்டுமில்ல தம்பி… இளம்பராயத்துப் பிள்ளைகள் செத்திருக்கினம்.. இவ்விடத்துல… ‘காத்துக் கறுப்பு’… வரக்கூடாதென்டுதான் பிளையாரை நினைச்சு… சூடம் காட்டி ஆராதனை செய்திட்டுப் போக வந்தனான்..” என்று பச்சைப் பொய்யை நுனி நாக்கில் தடவினார்…! “நல்ல காரியம் செய்த நீங்கள்..! ஜீப்ல ஏறுங்கோ வீட்ட கொண்டி விடுறன் !” அந்த அதிகாரி அவரது மாணவானாக விருக்கலாம்.. “மெத்தச் சந்தோசம் தம்பி… வீல்ல வந்தனான் அதில்லேயே போறன்!”; என்ற ஆட்டோவுக்குள் நுழைந்தார்.! ஆட்டோ ஓடும்வரை பொலீஸ் நின்றது.
“ஏன்ட அடிமனசு ஆராதனையைப்..போலீசுக்காரான் எப்படி அறியப்போறான் மயூரா!” என்று சிரித்துப்படி சென்றார்!.
—–
குணராசா திருமணமாகி நான்காவது வருடத்தில்தான் அந்தத் துயரச் சம்பவம் நடந்தது. அம்மா, மனைவி, மகள் மூவரும் மோசம் போன துயரம் நிழலாக இருவரையும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது.
யுத்தக் காலத்து…. யாழ்ப்பாணத் தென்னை மரங்கள்…. மூலியாகத் தரிக்கப்பட்டு…. சோபையிழந்திருப்பதைப் போன்று அந்தக் குடும்பம்… தாழ்ந்திருந்தது….
பாலசிங்கம் சேருக்கு இந்த பிரபஞ்சமே அவரது பேரக் குழந்தை அபிராமிதான்.! அந்த வாரிசுதான் அவரது தேவதை! எந்தவொரு மனிதனுக்கும் வயது சென்ற காலத்தில்… மனமும் உடலும் தளர்ந்து போன காலத்தில்… புத்துணர்ச்சியைக் கொடுக்கும் இன்னொரு இன்பமான வாழ்க்கையை அனுபவிக்கும் பாக்கியம்தான் பேரக் குழந்தைகளின் பிறப்புக்கள்!
அந்த மாதத்தில் நவராத்திரி பூசைகள் முடிந்திருந்தன. விஜயதசமி நாளன்று, அன்னலெச்சுமி டீச்சர் வீட்டுக்கு பாலா சேர், மனைவி ராசம்மா, மரு மகள் வதனி, பேரக் குழந்தை அபிராமி நால்வரும் ஏடு தொடக்கச் சென்று வந்தார்கள்.
வரும் வழியில் அன்னலெட்சுமி டீச்சர் “ஆனா” சொல்லிக் கொடுக்காமல்,“ப” வும்,“ட” வும்…”ம” வும் சொல்லிக் கொடுக்க, அபிராமி சிரித்துச் சிரித்து அவளே எழுத்துக்களை மிக லேசாக எழுதிக் காட்ட…பிறகு “பட்டம்” என்ற சொல்லும் பிறக்க.. பெருமையாகப் பேசிக் கொண்டு வந்தார்கள். “டீச்சர் சொல்லிக் கொடுத்திருந்தால்.. செல்லக்குட்டி ஆனாவையும் ஈனாவையும் கூட எழுதிக்காட்டியிருப்பாள்!” என்று பாலா சேர் மனப் பூரிப்போடு பேசிக்கொண்டு வந்தார்.அந்த மகிழ்ச்சி பொங்கிய தருணத்தில்தான் அது நடந்தது.
கண் மண் தெரியாமல் பின்னால் வந்த அந்தப் பிசாசு வாகனம் மூவரையும் சேர்ந்தாற் போல் அடித்துத் தூக்கி எறிந்தது.
பாலா சேர் மட்டும் தப்பினார். அவர் கண்ணாலேயே கண்டார். அந்த மாமரத்தின் உயரத்துக்கு பந்தைப் போல எறியப்பட்டு பாதையில் விழுந்து… கோழி முட்டையைப் போல நொறுங்கினாள் அபிராமி… மனைவி செல்லம்மா.. மருமகள் வதனிமூன்று சீவன்களையும் அடித்து வீழ்த்திய பெஜரோ வாகனத்தில் சீரணி சட்டைக்காரர்கள் நிறையபேர் இருந்தார்கள். அவர்கள் திரும்பிப் பார்க்காமல் ஓடி மறைந்தார்கள். மக்கள் வீதியில் நிறைந்தனர். வின்னதிர சத்தமிட்டனர். “இந்தக் கொடுமைகள கேக்க யாருமில்லையா..? இந்த அக்கிரமங்களுக்கு முடிவேயில்லையா?… வாகனத்துல அடிச்சிக்கொல்லுறதுக்கு பேரு விபத்தா?..” என்று கூடி நின்ற மக்கள் கதறிக்..கதறி அழுதார்கள். உலகத்தில் இப்படியொரு மனிதக் கொலைகள் எந்த நாட்டிலேயும் நடந்ததாக அறிய முடியவில்லை….. அவர்கள் எல்லோருமே இவ்வாறு உறவுகளைப் பறிகொடுத்தவர்கள்.அவர்களின் ஆவேசக்குரல் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டி அசைப்பதாகவிருந்தது…..
போலிஸ் வண்டி வந்தது. குப்பைகளைப் போல மூன்று உடல்களையும் வாரிச் சென்றது. நகரசபை வண்டி வந்தது. குற்றங்களை… பாவங்களை… ஆனவங்களை… அட்டுழியங்களை கழுவித் துடைப்பதைப் போன்று.. கழுவித் துடைத்து விட்டுச் சென்றது.தெருவில் மயங்கிக்கிடந்த பாலசிங்கம் ஐயாவை வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள்.
—-
எந்த நேரமும் மனதில் குமிழியிட்டுக் கொண்டிருக்கும் நினைவலைகள் சில நேரங்களில் திடீரென கொதிப்பதால் பாலசிங்கம் சேர் நேராக படுக்கையில் போய் சாய்ந்து விடுவார். அப்பா இன்று மிகவும் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறார். அவரைக் கடிந்துக்கொண்டதில் குணராசா தன்னை நொந்துக் கொண்டான். அறைக்குச் சென்றவர்.. களைப்பில் நித்திரையானார்.
இன்று அதி காலை நடந்த விபத்து மரணங்கள்… அவரின். கனவில் வந்து மனதைக் குடைந்துக்கொண்டிருந்தன. விபத்தில் செத்துப்போன சீரணிக்காரர்களையெல்லாம் ஆகாயத்திலிருந்து கொக்கி போட்டு…. அந்தரத்தில் மேலே மேலே இழுத்துக்கொண்டிருந்தார்கள்.! யார் இழுக்கின்றார்கள்? இழுப்பவர்களைப் பார்க்க முடியவில்லையே?….எல்லோரும் அந்தரத்தில் தொங்கினார்;கள்….. அவர்கள் சொர்க்கத்துப் போவார்களா?… நரகத்துக்குப் போவார்களா?… பார்ப்பதற்கு ஆசையாகவிருந்தது.!
அவருக்கு உடம்பு காய்ந்தது. காய்ச்சலில்…உருண்டு பிரண்டுக்கொண்டிருந்தார்.
—-
இன்று மாவட்ட நீதிமன்ற விசாரணை….
பாலா சேர் சாட்சிக் கூண்டில் நிற்கின்றார். அரச சார்பு வக்கீல் ஒருவர் பாலா சேரை பார்த்துக் கேள்வி கேட்பதற்கு முனைந்தார். “அந்த விபத்து நடந்தபோது நீங்கள் எங்க இருந்தீர்கள்? பாலா சேர் பதில் சொல்லவில்லை….” என்ன முழிக்கிறீர்?…. “முழிக்கல்ல..! முறைக்கிறன்!” பாலா சேரின் பதிலைக்கேட்டு அந்த வக்கீல் முழித்தார்!“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.!” “கேள்விய… பிழையா கேட்டா… எப்படி பதிலை சொல்லுவது?” நீதி மன்றத்தில் வாத பிரதி வாதங்கள் வக்கீல்களுக்கிடையிலில்லாமல் கூண்டில் நிற்பவருக்கும் குறுக்கு விசாரணை செய்பவருக்குமிடையில் நடப்பது புதினமாகவிருந்தது.
பாலா சேர் மிகவும் அடக்கமாக… நீதிமன்றத்துக்குரிய மரியாதையோடு கொஞ்சம் உரத்துப் பேசினார். “நீங்கள் திரும்பத் திரும்ப “விபத்து சம்பவம்”; என்று எனது மனைவி.. மருமகள்.. பேரக்குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பிழையாகத் திரிச்சி கேள்வி கேக்காதீர்!” என்றார். வக்கீல் தடுமாறினார் “அது வாகன விபத்துதானே?” என்றார். “அது வாகன விபத்தல்ல! வாகனத்தைக்கொண்டு.. மோதிக் கொலை செய்யும்..ஒரு புதுவகைக் கொலைகள்.!…. இங்க வாகனத்தால அடிச்சி.. சனங்களைக் கொல்லுகின்ற சம்பவங்கள் நூற்றுக் கணக்கா நடந்துள்ளன!… இந்த நவீனக்கொலைகள்… எல்லாமே விபத்துச் சம்பவங்களாக சோடிக்கப்படுது…!. எங்கட வீட்டு … மூன்டு பேரோட கொலைகள் விபத்து மரணங்களாகச் சோடிக்கப்பட்டவைதான்!. இந்தப் பாவங்களுக்குப் பரிகாரமே கிடையாது! இந்த நவீனக் கொலைகள் ஊர் முழுவதுமே நடக்குது! நீங்கள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டுமென்றால்.….. கொலைகளை விபத்துக்களாக மாற்றும் அதர்மத்தை மாற்றிக்கொள்ள கனம் நீதிபதியின் கட்டளையை நாடுங்கள்!” என்று உணர்ச்சி வசப்படாமல் தெளிவாக … நிதானமாக விரலை நீட்டினார் பாலா சேர். நீதி தேவதை வடிவில் அவர் சிரசின் பின்னால் ஒளிவட்டம் தெரிந்தது…நீதிமன்றம் ஆடி நின்றது…..
பாலா சேர் படுக்கையிலிருந்து எழும்பிவிட்டார். தான் நீதிமன்றத்தில் வாதாடிய சட்டக்கேள்விகளை மகனிடம் சொன்னார்.உண்மைகளை அறிந்த நீதிமன்றம் மௌனித்து நின்றதையும் சொன்னார்.. மகன் குணராசா அப்பாவை நினைத்து ரொம்பவும் மனம் நொந்து போனான்..
“அப்பா! நீங்கள் கனவில கேட்ட கேள்விகள் அத்தனையும் லோயர் அண்ணர் தவ ராசா நீதி மன்றத்தில..கேட்டவர்தானே.? அவர்ட கேள்விகளக் கேட்டு… பதில் சொல்ல முடியாமே.. நீதிமன்றமே ஆடிப்போகல்லையா?கடைசியில அவருக்கு என்ன நடந்தது? அவர் காணமல் போகல்லையா?…. இப்போ அவர்ட குடும்பம் பிள்ளைக் குட்டிகளோட நடுத்தெருவில வந்து நிக்கலையா?
“…………..”
மகன் கேட்டக் கேள்விகள் அத்தனையும் உண்மை.. ஒரு காலத்தில் கண்மண் தெரியாமல் விபத்து.. விபத்து என்று ஒவ்வொரு நாளும் சனங்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
“இளம்பெடியல்கள் சைக்கில்ல போக முடியாது…. முட்டி மோதித் தட்டிப் போட்டு போவான்கள்……! மாணவப்பிள்ளைகள் கூட்டங் கூட்டமாக போகமுடியாது…. இதட்டிப்போட்டுப் போவான்கள்…! பிறகென்ன?…. சாவுதான்..… இ! இந்த அட்டூழியங்களை நேரில் பார்க்க முடியாமல்தான் புத்தப்பிரான் தலையைக் கவிழ்த்து மடியையே பார்த்துக்கொண்டிருக்கிறான்…! பாவம் தவராசா.. இந்தப் புதுமாதிரி கொலைகள.. அந்தப் பிள்ளை ஒருவன்தான் தட்டிக்கேட்டான்.. வெளிச்சத்துக்கு கொண்டு வந்தான்… அவனும் காணாமல் போயிட்டான்…..
பாலா சேர் கைகளை இறுகக் கட்டிக்கொண்டு மௌனமாக அறைக்குத் திரும்பினார்….
மனைவி… மகள்… தாய் மூவரையும் இழந்து விரக்தியடைந்த நிலையிலிருக்கும் குணராசாவுக்கு அப்பா மட்டுமே துணை… அவரையும் இழந்து விட்டால் மிஞ்சிய வாழ்க்கை சூனியமாகிப் போய் விடும்..
.அவன் கோப்பி… கோப்பையோடு அவரின் பின்னால் விரைந்தான்….