“பிரதமர்; மஹிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும். சர்வ கட்சிகள் கொண்ட இடைக்கால அரசொன்று அமைப்பதற்கு அவர் வழிவிடவேண்டும். இல்லையேல் போராட்டங்கள் ஓயப்போவதுமில்லை நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதுமில்லை” என்ற கடும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து அரசாங்கத்துடன் இருந்த முக்கிய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலத்திக்கொண்டிருப்பது நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடியொன்றை உருவாக்கியிருக்கிறது.
ஜனாதிபதி பதவி விலகவேண்டும் அரசாங்கம் கலையவேண்டும் என்ற கடுமையான கோரிக்கைகளையும் கோஷங்களையும் முன்வைத்து நாடு தழுவிய போhட்டம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் நடக்கக்கூடும் என்ற பதட்ட நிலையே காணப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவொரு வித்தியாசமான களமாக மாறிக்கொண்டிருக்கிறது.
பொதுஜனபெரமுன அரசாங்கத்துக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றில் கொண்டுவர எதிர்த்தரப்பினர் தீவிரம் காட்டிவரும் நிலையில் 21 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை கொண்டுவர அரச தரப்பினரின் எத்தனிப்புக்கள் ஒருபுறமாகவும் இடைக்கால அரசாங்கம் ஒன்றை கொண்டுவந்து இலங்கையின் இன்றைய கொந்தளிப்புக்கு அமைதிகாணும் முயற்சிகள் மறுபுறமாகவும் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றவும் தீவிரம் காட்டப்படுகிறது.
ஜனாதிபதி பதவி விலகவேண்டும் அரசாங்கம் கலைக்கப்படவேண்டும் குறிப்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாக பதவிவிலகவேண்டும் நாட்டின் பொருளாதாரத்தை மறு சீரமைக்க அரசியல் உறுதிபாட்டை கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராட்டம் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் தொடர்ந்து இடம் பெற்றுவரும் நிலையில் நாளுக்க நாள போராட்டமானது உக்கிரம் அடைந்துவரும் நிலையில் தெற்கு அரசியலில் எந்நேரமும் திருப்புமுனை ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு நீண்டுகொண்டு செல்கிறது. அதே நேரம் 21 ஆவது அரசியல் சீர்திருத்தம,; இடைக்கால அரசாங்கம் அமைத்தல் நம்பிக்கையில்லாப்பிரேரணை என்ற முன்னெடுப்புக்களும் முயற்சிகளும் நாட்டின் அரசியலை அலைமோத வைத்துக்கொண்டிருக்கிறது.
இத்தகைய கொதி நிலைகொண்டதாக நாடு இருக்கும்போது தமிழ் மக்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் அதன் தலைவர்களும் ஆமையைப்போல் தங்கள் நடவடிக்கைகளை மடக்கி மௌனம் காத்துவருகிற நிலையும் காணப்படுகிறது. குறிப்பிட்டு கூறப்போனால் குடா நாட்டிலும,; வன்னியிலும் அங்கொண்றும் இங்கொண்றுமாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கிழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தலைமையில் பிள்ளையான் மற்றும் வியாழேந்திரனுக்கெதிரான சின்னளவு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன அம்பாறையிலும் திருகோணமலையிலும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் இடம் பெற்றாலும் வட கிழக்கு தமிழ்ப்பேசும் மக்கள் புதினம் பார்க்கும் மூன்றாந்தரப்பினராகவே நடந்து கொள்கிறார்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
தமிழ்த்; தலைமைகள் சிலர் இப்போராட்டம் தொடர்பில் தமது ஆதங்கமான கருத்துக்களை இடைக்கிடை தெரிவித்தும் வருகிறார்கள் “நாட்டின் ஆட்சியை ஒருவருடத்துக்கு தமிழ்த்தரப்புக்கு வழங்குகங்கள் இந்த நாட்டினை நிமிர்த்தி காட்டுகிறோம்” என்று சூளுரைத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பின் செல்வம் அடைக்கலநாதன். உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இது தெடர்பில் கருத்து தெரிவிக்கையில் “தென்னிலங்கையில் போராடுகிறவர்கள் எவரும் எமது மக்களின் உயி;ர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அவர்கள் போர் வெற்றியை கொண்டாடினார்கள.; பாற்சோறு வழங்கி நடனமாடினார்கள் அந்த துன்பங்களை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது. அதே நேரம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.காலி முகத்திடலுக்கு புறப்படும் இளைஞர்கள் அங்கு செல்வதற்கு முன்னதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்; போராட்டத்துக்கு ஒன்று திரளுங்கள்” என்று வினயமாக சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்னும் சில தமிழ்த்தரப்பினர் “எந்த சிங்கள மக்கள் கோத்தபாயவை சிம்மாசனம் ஏற்றினார்களோ அந்த மக்களோ இன்று கோத்தா வீட்டுக்கப்போ ! என்று போராட்டம் நடத்துகிறார்கள்”; என்றும் தமது கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள்.
ஜனாதிபதி; மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்பில் இவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்கள் வேதனையுடனும் இழப்பக்களுடனும் வெளியிட்டுவரும் நிலையில் பின்வரும் நடவடிக்கைகளின்போது தமிழ்த்தரப்பினர் என்ன முடிவை எடுப்பார்கள் என்பது சகலராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விடயமகும்.
19 ஆவது அரசியல் திருத்தம் நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்டபோது தமிழ்த்தரப்பினர் ஏகோபித்த அளவில் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். அதற்கு காரணம் நிறைவேற்று அதிகாரமுறை ஒழிக்கப்படவேண்டும் என்பதில் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்த் தரப்பினரும் திடகாத்திரமான முடிவு கொண்டவர்களாக இருந்தார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் நிழல் பிம்பமாக கூட்டமைப்பு அன்று இருந்த காரணத்தினால் அதற்கு ஆதரவு வழங்கவேண்டிய தேவையும் இருந்தது. கோத்தபாய அரசாங்கத்தில் 19 ஆவது திருத்தத்துக்கு சாவுமணி அடித்து 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது தமிழ்த்தரப்பினர் அதை கடுமையாக எதிர்த்தார்கள்.
இன்றைய நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்கும் தந்திரோபாயத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச 21 ஆவது அரசியல் திருத்தத்தை கொண்டுவர கடந்த திங்கட்கிழமை (25.4.2022) அமைச்சரவைக்கு அத்திருத்தத்தை சமர்ப்பித்துள்ளார். அத்திருத்தம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது. இத்திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படுகிறது. இன்னொருவகையில் கூறுவதானால் 19 ஆவது திருத்தம் மீண்டும் 21 ஆவது திருத்தம் என்ற வடிவில் மீண்டும் நடை முறைக்குவரவுள்ளது.
21 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் ஏலவே ஒரு யோசனையை சபாநாயகரிடம் கையளித்துள்ளார்கள்.அதே நேரம் தனித்து இயங்கும் குழுவினர் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் சுயாதீனக்குழுவினர் 40 பேர் இது தொடர்பான யோசனையை முன் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேபோன்றே ஐக்கிய மக்கள் சக்தி யினர் சபாநாயகரிடம் இத்திருத்தம் தொடர்பான ஒரு யோசனையை கையளித்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலையே பிரதமர் மஹிந்த தன் யோசனையை முன் மொழிந்திருப்பதாகம் இதற்கு ஆளுந்திப்பிலுள்ள பெருப்பான்மையினர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையில் சுயாதீன அணியினரால் சமர்ப்பிக்கப்பட்ட 21 ஆவது திருத்தத்தை மையப்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எந்த திருத்தத்தை அவசரம் அவசரமாக கொண்டுவந்து தனது நிறைவேற்று அதிகாரத்தை மீள் நிரப்பு செய்தாரோ அவரே இப்பொழுது “20 ஆவது திருத்தத்தை இல்லாது ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களுக்கும் நான் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறேன”; என ஜனாதிபதி கூறியிருப்பது போராட்டத்தின் வலிமையை காட்டுகிறதா அல்லாது ஜனாதிபதி தனது பிடிவாதத்திலிருந்து இறங்கிவிட்டாரா? என்பது கவனமாக சிந்திக்கவேண்டிய விடயம்.
இத்திருத்தத்தினூடாக நிறைவேற்று அதிகாரமுறை குறைக்கப்பட்டு சட்டவாக்க சபையை பொறுப்பாக்கும் வகையில் 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சிறந்த விடயங்கள் உள்ளடக்கிய புதிய அரசியல் சீர்திருத்தத்தை காலதாமதமின்றி கொண்டுவர தான் நடவடிக்கை எடுக்கவிருப்பதோடு அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு உடன்தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என தனது உடன்பாட்டை பௌத்த பீடங்களான மல்வத்து மகாபீடம் அஸ்கிரிய மகாபீடம் அமரபுர மகாபீடம் ராமாஞ்சய மகாபீடம் ஆகியவற்றுக்கு அண்மையில் அறிவித்துள்ளார் ஜனாதிபதி.
“இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க தான் தயாராகவுள்ளதுடன் 21 ஆவது திருத்தத்தை கொண்டுவர முயற்சிக்கிறேன”; என்ற முடிவை ஜனாதிபதி பௌத்த பீடங்களுக்கு பகிரங்கமாக அறிவித்திருப்பது தற்போதைய அரசியல் நெருக்கடியிலிருந்தும், சவால்களிலுமிருந்தும் மீள்வதற்கான நாடகமாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும் போராட்டக்காரர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருப்பது ஒரு இயல்பான விடயமே !
பிரதமரால் கொண்டுவரப்படவுள்ள 21 ஆவது அரசியல் சீர்திருத்தத்துக்கு தமிழ்த்தரப்பினர் ஆதரவை நல்கவேண்டுமா? நல்குவார்களா? அன்றி நடப்பது நடக்கட்டும் என்று அமைதி பேணுவார்களா? என்பது கேள்விக்குரிய விடயம்.. 20 ஆவது திருத்தத்தை இல்லாது ஆக்கி 21 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதன்மூலம் தம்pழ் மக்கள் அல்லது சிறுபான்மை சமூகம் நேரடியாக ஏதாவது நன்மையை அடையமுடியுமா ? என்ற வினா இங்கு முக்கியம் கொண்டது.
முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தனாவால் கொண்டுவரப்பட்ட இந்த நிறைவேற்று முறையை இல்லாது ஆக்குவோம் என்று ஆட்சி பீடம் ஏறிய அனைவருமே, நிறைவேற்று அதிகாரத்தை தமிழ் மக்களின் போராட்டத்துக்கு எதிராகவே பாவித்தார்கள். அரசியல் தீர்வுக்காகவோ தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காகவோ அது பயன்படுத்தப்படவில்லை . என்பதேயுண்மை. நெருக்கடிகள் நிறைந்துபோன இக்காலத்திலும் 21 சீர்திருத்தத்தை தங்கள் மேலாதிக்கத்துக்கு சாதகமாக்கப்பார்க்கிறார்கள் ஆட்சியாளர்கள் என்ற சந்தேகமே தமிழ் மக்கள் மத்தியில் தலை தூக்கி நிக்கிறது.இருந்தபோதிலும் அண்மையில் (24.4.2022) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய தமிழ்; த்தேசியக்கட்சிகள் மற்றும் வட கிழக்கு சிவில் அமைப்புக்கள் 19 ஆவது திருத்தத்தை இல்லாது ஆக்கி 21 ஆவது திருத்தம் கொண்டுவருவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியம் என்ற கருத்தை முன்மொழிந்துள்ளனர்.;
ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டுவருவதற்கான அதிவேக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்பிரேரணைகள் கொண்டுவரப்படுமாக இருந்தால் தமிழ்த்தரப்பினர் என்ன தீர்மானத்துக்கு வருவார்கள் வரவேண்டும் என்ற விடயம் கால முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப்பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சிகள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும். இப்பிரேரணையை தயாரிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இடைக்கால அரசொன்றை அமைக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் செயற்பட்டுவரும் எதிர்த்தரப்பினர் மற்றும் சுயாதீனமாக இயங்கும் குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஜனாதிபதி உதாசீனம் செய்வாராக இருந்தால் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை மீது அவதானம் செலுத்தவேண்டிவரும் என்பதை ;ஆளும் கட்சி சுயாதீன செயற்பாட்டாளர்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க எச்சரித்துள்ளார். ஆனால் ; ஆர்ப்பாட்டக் காரர்களோ ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர முயற்சிப்பதாகவும் அதை தன்னிடம் ஒப்படைத்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பத்திரிகை பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதிக் கெதிரான குற்றிவியல் பிரேரணையை தற்போது கொண்டுவருவது நிறைவேற்றுவதும் நடைமுறை சிக்கல்களை உண்டாக்கும் என்பதால் அதில் உள்ள முக்கிய விடயங்களை உள்வாங்கி ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை தயாரிக்க முடியுமென்ற ஆலோசனையை தான் கூறியிருப்பதாக அவர்தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் கருத்துப்படி ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையொன்று வெற்றி அளிக்கவேண்டுமாயின் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய எந்த அடிப்படையில் குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும். குற்றச்சாட்டுக்கள் உண்மையென உச்ச நீத மன்றம் கண்டறிந்தால் அதன் அறிக்கை பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டு அதன்பின் பதவி நீக்கம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்ற நடைமுறை இருப்பதால் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை கொண்டுவருவது சாத்தியமற்றது என்பதை சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
சுமந்திரன் கூறியதுபோல் குற்றப்பிரேரணைக்கு பதிலாக ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்டால் அது ஆகுக்குறைந்தது 113 வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டும்;. இப்போதைய நிலையில் நிறைவேற்ற முடியுமென்று கூறப்பட்டாலும் தடம் புரண்டு போகிற சம்பவமும் ஏற்படலாம். தமித்தரப்பினரும் சிறுபான்மையினரான முஸ்லீம் கட்சிகள் மற்றும் மலையக கட்சிகள் ஆதரவு நல்கின் நம்பிக்கையில்லாப்பிரேரணை வெற்றி பெற வாய்ப்பிருக்கலாம். ஆனால் அது சாத்தியமானதா என பரீட்சித்து பார்ப்பது விஷப்பரீட்சையாகவும் மாறலாமென எதிர்த்தரப்பினர் பின்வாங்கும் நிலமையும் காணப்படலாம்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 2018 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராகவும் தேசிய அரசாங்கத்துக்கு எதிராகவும் ( 4.4.2018) கூட்டு எதிர்க்கட்சியாலும் அதேயாண்டு வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதினுக்கு எதிராகவும் 2019 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணைகளுக்கு என்ன நடந்தது என்பது நாடறியும்.
பிவிதுரு ஹெலஉறுமய தலைவர் உதய கம்மன்பில கருத்துப்படி நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க 120 உறுப்பினர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் எனவே நம்பிக்கையில்லாப்பிரேரணையை கொண்டுவரும்படி ஐக்கிய மக்கள் சக்தியை வலியுறுத்தியுள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியைச்சேர்ந்த 65 உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கும் 39 உறுப்பினர்கள் பின்வரிசை ஆசனக்காhர்10 பேர் மற்றும் டலஸ் அழகப்பெரும சரித ஹேரத் உட்பட 120 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தயாரகவுள்ளனர் என உதய கம்மன்பில கணக்கு காட்டினாலும் பிரதமர் மஹிந்த இதை மறுத்துள்ளதோடு பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவாசம் நாம் 124 பேர் ஆட்சியாளர்கள் பலத்துடன் இருக்கிறோம் என பிரேரணையை கொண்டுவந்து பாருங்கள் என எதிர்த்தரப்பினர்க்கு சவால் விடுத்துள்ளார்.
அரசுக்கு எதிராகவோ அன்றி ஜனாதிபதிக்கெதிராகவோ நம்பிக்கை இல்லாப்பிரேரணை ஒன்று பாராளுமன்றில் கொண்டுவரப்படுமானால் தமிழ்த்தரப்பினரின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்பது இன்னும் தீர் மானிக்கப்படாத ஒன்றாக இருந்தாலும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் இல்லாது ஆக்கப்படவேண்டும் என்பதில் நீண்ட தீhமானம் கொண்டவர்களாக தமிழ்த்தரப்பினர் காணப்படுவதனால் பிரேரணைக்கு ஆதரவு அளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்; என்று வைத்துக்கொண்டாலும் புத்தி ஜீவிகள் இவ்விவகாரத்தை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று ஆருடம் கூறமுடியாது.
“தற்போதைய சூழலில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் விடயம். மறுபுறம் ஜனாதிபதி பதவி விலகினால் அது அரசியல் ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கிவிடும் எனவே அரசியல் சாசனத்தில் கூறியபடி தொடர்ந்து பதவியிலிருப்பேன் நான் பதவி விலகப்போவதில்லை” என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அல்லது அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப்பிரச்சனைக்கு ஆதரவு நல்குவதா அன்றி நடு நிலைவகிப்பதா? என்பதை தீர்மானிப்பதில் தமிழ்த்தரப்பினர் தீர்க்கதரிசனத்துடன் நடந்து கொள்ளவேண்டுமென்பது தமிழ் மக்களின் ஆழமான எதிர்பபர்ப்பாக இருக்கப்போகிறது.
நாட்டின் இன்றைய நெருக்கடியை கடினமாக்கிவரும் இன்னொரு விவகாரமாக காணப்படுவது பாராளுமன்றில் அங்கம் பெறும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி கலப்பு இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குங்கள் என்ற கோரிக்கை வலுவடைந்து வருவது. இக்கோரிக்கையை கட்சிகள் என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தியினரும் அதேபோன்று இடைக்கால அரசை ஸ்தாபித்து அதனூடாக இன்றைய நெருக்கடிக்கு தீர்வு காணுங்கள் என 11 பங்காளிகட்சியை சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இதே விடயத்தை சுயாதீன குழுவினர் 40 பேரும்; தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.
பிரதமர் மஹிந்த பதவி விலகி சர்வ கட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைக்க வழிவிடவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியது கட்சிக்குள் புயலை உருவாக்கியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக பௌத்த பீடங்கள் நான்கை சேர்ந்த மகாநாயக்கர்கள் கூட்டாக கடந்த 4 ஆம் திகதி (4.4.2022) ஜனாதிபதியை நோக்கி பின்வருமாறு ஒரு அறிக்கையை விடுத்திருக்கிறார்கள்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை உள்ளடங்கிய யோசனைகளை அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதில் சகல கட்சிகளும் உள்ளடங்கியவாறு கலப்பு கூட்டரசாங்கம் ஒன்றை உடனடியாக அமைத்து நெருக்கடிக்கு தீர்வு காணுங்கள் என்பது அக்கோரிக்கையின் அர்த்தமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதி கோத்தபாய மற்றும் “பிரதமர் பதவி விலகவேண்டும் இடைக்கால அரசாங்க மொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” என்று கூறி இடைக்கால அரசாங்கத்தின் பிரதமரானவர் பாராளுமன்றின் நம்பிக்கையை பெறக்கூடியவராகவும் மந்திரிசபைக்கு தலைமை தாங்கும் ஆளுமை கொண்டவராகவும் இருக்கவேண்டும் அரசியல் அமைப்பின் 42 பிரிவின்படி அமைச்சரவையில் 12 பேரே நிமிக்கப்படவேண்டும் என்ற தனது ஆலோசனையையும் முன்வைத்துள்ளார்.
இவையெல்லாவற்றையும் நோக்கும்போது இடைக்கால அரசொன்றை உடனடியாக நிறுவுவதன் மூலமே நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு பரிகாரமாக அமையும் என்ற முடிவு சகலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி அவர்கள் பௌத்த பீடங்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசொன்றை நிறுவ யான் தயாராகவுள்ளேன் என்ற சாதகமான முடிவுக்கு வந்துள்ளதாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகிறது.
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி தயாராக இருந்தாலும் அது நிறுவப்படுவதிலுள்ள சிக்கல்கள் சவால்கள் அதிகமாக காணப்படலாம் என்பது அரசியில் துறைசார்ந்தோரின் கருத்தாகும். ஏலவே நெருக்கடி தலை தூக்கிய காலத்தில் ஜனாதிபதி புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க “சகல கட்சிகளை சேர்ந்தவர்களும் வாருங்கள் என்று அழைப்பு விட்டிருந்தபோதும் அதுயாராலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை இவ்வழைப்பு தொடர்ந்துவிடப்பட்டுவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் எவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதியை பதவி விலகுமாறு தொடர்ந்து போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதியின் தலைமையை அங்கீகரித்து புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வார்களா? போராட்டக்காரரர்களும் மக்களும் என்பதை உறுதிப்படுத்த முடியாது.
இடைக்கால அரசு ஒன்று தாபிக்கப்படவேண்டுமாயின் அது எனது தலைமையில் தாபிக்கப்படவேண்டும் பிறி தொரு தரப்பினரை பிரதமர் ஆக்க பெ ரும்பான்மையானவர்கள் தயாரில்லை நான் பதவி விலகப்போவதில்லை என பிரதமர் அடம்பிடித்துவருகிறார். இது இவ்லாறு இருக்கு இடைக்கால அரசாங்கத்துக்கு யாரை பிரதமர் ஆக்குவது என்பது இன்னொரு சங்கடமான நிலை உருவாகிவிடும்
இடைக்கால அரசாங்கத்துக்கான அமைச்சர் நியமனங்களில் எத்தகைய யுக்திகளை கையாளமுடியும் ஏலவே புதிய தலைமுறையினர் நியமனம் தொடர்பில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தமது கடும் ஆட்சேபனையை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தினர் எவ்வாறு உள்வாங்கப்படுவார்கள் கூட்டரசாங்கத்தை உருவாக்கும் கட்சிகளுக்கு பதவிகளை எப்படி பங்கு போட்டுக்கொள்ள முடியுமென்பது இருக்கும்பிரச்சனைகளை இன்னும் தூண்விடக்கூடிய நிலமையும் உருவாகலாம்
இவ்வாறான சாவால்களும் சங்கடங்களும் கொண்ட ஒரு அரசு நிறுவப்படமுhனால் அந்த அரசாங்கம் எத்தனை காலத்துக்கு நீடித்து உயர் வாழ முடியும். இடைக்கால அரசாங்கம் ஒன்று உயிரோட்டம் உள்ளதாக நீடித்த உயிர் கொண்டதாக இருக்கவேண்டுமாயின் பாராளுமன்றில் அங்கம் பெறும் அனைத்து கட்சிகளுடைய மலிவான மற்றும் பலமான ஆதரவு தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதுடன் அறுதிப்பெரும்பான்மைக்கு மேற்பட்டவர்கள் குறித்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் பலம் இருந்து கொண்டேயிருக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் இவை பலன் அளிகக்கூடியதா? என்பது பரீட்சித்துப்பார்க்கும்போதே அனுமானிக்க முடியும் அதுவமன்றி இந்த இடைக்கால அரசாங்கத்துக்கு தமிழ் மக்கள் முஸ்லீம் சமூகம் மலையக கட்சிகள் எவ்வாறு ஆதரவு வழங்கப்போகிறது என்பது யதார்த்தத்தில் நின்று கவனிக்கப்படவேண்டிய விடயம்.
அதுவுமன்றி ஐக்கியமக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளைப பொறுத்தவரை தாம் ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்பதில் கண்கொத்திப்பாம்புபோல் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் பிரதமர் வீடு செல்லவேண்டும் என்பதை தமது தாரக மந்திரமாகக்கொண்டு செயற்பட்டுவரும் மேற்படி இருகட்சிகளும் தொடர்ந்து இடைக்கால அரசுக்கு ஆதரவு நல்கும் நிலை இருக்குமா? என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. எனவே இடைக்கால அரசாங்கத்தை உரிய காலம் மட்டும் தொடர்ந்து நடத்தி செல்வதில் உள்ள சவால்களை யர்ருமே ஆருடம் கூறிவிடமுடியாது. அதுவுமன்றி தமிழ்த் தரப்பினரின் நீண்டகாலப்போராட்டத்துக்கு பரிகாரம் காண முடியாத எந்தவொரு அரசாங்கத்தையும் அவர்கள் ஆலிங்கனம் செய்ய மக்கள் அங்கீகரிப்பார்களா? என்பது பகற்கனவாகவும் ஆகலாம்.