மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார்
(மன்னார் நிருபர்)
(28-04-2022)
மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி உள்ளது என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் தெரிவித்தார்.
-முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் மிசறியோ நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட 20 வீடுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மிசறியோ நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட பணிப்பாளர் கெசுமா சாடட், இலங்கைக்கான பரிந்துரை இணைப்பாளர், இலங்கை செ டெக் நிறுவனத்தின் தேசிய இயக்குனர் அருட்தந்தை மகேந்திரா குணதிலக்க,வாழ்வுதய நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை அன்ரன் அடிகளார்,,மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் ரஜீவ் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த வீடுகளை வைபவ ரீதியாக கையளித்தனர்.
-இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
-முள்ளிக்குளம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 20 வீடுகளை திறந்து வைத்துள்ளோம்.விசேட விதமாக மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் அயராத முயற்சியின் காரணமாகவே குறித்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் பல வருடங்களுக்கு முன் கண்ட கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.
முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்து சென்ற அனைத்து மக்களும் மீண்டும் தமது இடங்களுக்கு வர வேண்டும்.அந்த மக்களை எப்படியாவது தமது சொந்த இடங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆயர் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
அதன் விளைவாக மிசறியோ நிறுவனத்தின் நிதி உதவியுடன் முள்ளிக்குளம் கிராமத்தில் 20 வீடுகள் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடுகளை கட்டி முடிக்க உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.