நேற்று மகிந்த இராசபக்சவை சந்திப்பதற்கு வணக்கத்திற்குரிய சோபிதா தலைமையில் பவுத்த தேரர்கள் குழுவொன்று அதி சொகுசு கார்களில் செல்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். பல பவுத்த துறவிகள் ஆடம்பர மெர்சிடிஸ் பென்ஸ்ஸில் சாரதி சகிதம் அதிகார தரகர்களாக மாறுவதைப் பார்ப்பது வழமையான காட்சியாகும். காவி அங்கி அணிந்த ஒரு குண்டர், ஞானசாரர், இனவாதத்தைப் பரப்புவதற்காக தேசத்தின் சனாதிபதியின் ஆதரவுடன் ஆடம்பரமாகச் சுற்றித்திரிகிறார், அதைவிட மோசமானது எம்மால் சபிக்கப்படும் முட்டாள் சனாதிபதி, தேசத்துக்காக “நீதியான சட்டங்களை” உருவாக்க அவரை நியமிக்கிறார்! அவரது மிகப்பெரிய தகுதி இனங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி வெறுப்பை உபதேசித்ததாகும்!
மீண்டும், பவுத்த தேரர்கள் பொது இடங்களில் மோசமான மற்றும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்ப்பது இப்போது வழக்கமான காட்சியாகிவிவிட்டது. அவர்கள் பயன்படுத்தும் சில சொற்கள் அருவருப்பான கெட்ட சொற்களாகும்.
“பவுத்த பிக்குகள் ஆடம்பரமாகப் பயணம் செய்து கொண்டு அரசியலுக்கு வருவதில் என்ன தவறு?” என்று ஒருவர் கேட்கலாம். அது ஏன் என்பதற்கான காரணம் இருக்கிறது.
ஏறக்குறைய 2600 ஆண்டுகளுக்கு முன்பு, புத்தபெருமானின் குறிக்கோளானது இந்தப் பூமியில் நமது இருப்புப் பற்றிய இறுதி உண்மையைத் தேடுவதாகும். மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்? நோய்வாய்ப்படுகிறார்கள்? இறக்கிறார்கள்? என்பதற்கான விடைகளைத் தேடிக்கொண்டிருந்தார். துன்பத்திற்கு ஒரு பொதுவான அம்சம் உள்ளதா? மேலும் அவர் புத்தர் நிலையை அடைந்த பின்னர், உயர்ந்த விழிப்புணர்வு கொண்டவராக இருந்து, துன்பத்திற்கான காரணம் “தன்ஹா” அல்லது “தாகம்” என்று போதித்தார். ஒருவர் துன்பத்தை நீக்க வேண்டுமானால் அவர் ஆசையை ஒழிக்க வேண்டும் என்று உபதேசித்தார். பின்னர் அவர் கர்மா, வாழ்க்கை சுழற்சி, இறப்பு மற்றும் மறுபிறப்பு ஆகியவற்றை தர்க்கரீதியாக விளக்கினார். இத்தகைய போதனைகளை நாம் பொதுவாக புத்த தர்மம் என்று அழைக்கிறோம், இது உண்மையில் கிமு முதல் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஓலைச் சுவடிகளில் இலங்கை நாட்டில் எழுதப்பட்டது,
ஆறாம் நூற்றாண்டிலிருந்து பவுத்தம் எழுத்தில் எழுதப்படும் வரை, புத்தரின் கதையும் அவரது உபதேசங்களும் சற்றே சிதைந்து, கடவுள்களை வணங்குவது மற்றும் அவர்களின் தெய்வீக தலையீட்டிற்காக பிரார்த்தனை செய்வது ஆகியவை புத்தரின் உபதேசங்களில் கலந்தன. புத்தர் ஒருவரின் முக்தி முற்றிலும் அந்த நபரைப் பொறுத்தது என்றும் எந்தக் கண்ணுக்குத் தெரியாத சக்திகளும் உதவ முடியாது என்றும் உபதேசித்தார்.
ஆசையை நீக்குவதே பவுத்தத்தின் சாரம் என்றால், பவுத்தத்தின் தூதர்களாக இருக்க வேண்டிய நமது தேரர்கள் சிலரின் ஆடம்பரத்தையும் அதிகாரத்தையும் தேடும் வாழ்க்கையை எவ்வாறு விளக்குவது?
இந்த உயர்ந்த பவுத்த இலட்சியங்களை நிலைநிறுத்துவதற்கும், புத்தரின் வார்த்தையைப் பரப்பும் உன்னதப் பணியைச் செய்வதற்கும், நாங்கள் அவர்களை வணங்குகிறோம், அவர்களுக்கு உணவு, தங்குமிடம், பணம் போன்றவற்றை வழங்குகிறோம். கொல்லாமை, திருடாமை, பொய் சொல்லாமை, கள்ளாமை போன்ற புத்தரின் ஒழுக்க விழுமியங்களை மக்களுக்கு உபதேசிப்பதில் பவுத்த துறவிகளின் பங்கு மறுக்க முடியாதது. புத்தர் பவுத்த தேரர்களுக்கான தார்மீக நெறிமுறைகளையும் கோடிட்டுக் காட்டிச் சென்றிருக்கிறார்.
எந்த மதமாக இருந்தாலும், ஒரு சமூகத்திற்கு ஒரு தார்மீக திசைகாட்டி தேவை, அல்லாவிட்டால் எங்களை நாம் எளிதாக விலங்கு உலகிற்கு இழுத்து விட நேரிடும்.
பவுத்த தேரர்களுக்கு மக்கள் அளிக்கும் மரியாதைகள் புத்தரின் போதனைகளின்படி அவர்களின் ஒழுக்க நடத்தையுடன் நேரடியாக தொடர்புடையது.
தந்திரமான மற்றும் அதிகார வெறி கொண்ட அரசியல்வாதிகள் பவுத்த தேரர்கள் மற்றும் மற்றும் விகாரைகளைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றுவதை அடிக்கடி மேற்கொள்கின்றனர். சில அரசியல்வாதிகள் இனப் பிளவுகளுடன் இணைந்து வாக்குகளைப் பெறுவதைப் போல, ஒரு தேரருடன் அல்லது கோவிலில் இருப்பதன் மூலம் இலட்சக்கணக்கான இதயங்களையும் அதன் மூலம் வாக்குகளையும் வெல்ல முடியும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். கோட்டாபய என்ற நபர் சிங்கள பவுத்த உணர்வுகளைப் பயன்படுத்தி 6.9 இலட்சம் வாக்குகளால்
வென்றது நினைவிருக்கிறதா?
சில நாட்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாச, கொழும்புக்கான நீண்ட போராட்ட நடைபயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் கண்டி தலதாமாளிகைக்குச் சென்று பவுத்தமதா பீடாதிகளிடம ஆசி மற்றும் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொண்டார். பிரசித்தி பெற்ற கங்கராமய விகாரைத் (Gangaramaya Temple in Colombo) தலைமைத் தேரரும் சஜித் அவர்களின் தந்தையின் காலத்தில் உயர்மட்ட அதிகாரத் தரகராக இருந்ததை நான் நினைவில் கொள்கிறேன்.
இராசபக்ச குடும்பத்தினர் அடிக்கடி கோவில்களுக்குச் சென்று பெரிய அளவில் பூசை வாத்தியங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர். இவை அனைத்தும் மக்களின் பணத்தில் வழங்கப்பட்டன. ஜே.ஆர்.ஜே, இரணில், எம்.ஆர் மற்றும் பல உயர்மட்டத் தலைவர்கள் பவுத்த விகாரையைப் பயன்படுத்தித் தம்மை “நல்ல பவுத்தர்கள்” எனச் சித்தரித்து பொதுமக்களை முட்டாளாக்கினர். மறுபுறம் நம் தேசத்தை கொள்ளையடித்து, நம் நாட்டை வறுமையில் தள்ளினார்கள்.
வெட்கமற்ற அதிகாரப் பசி காரணமாக சிறிலங்கா பொதுசன பெரமுனையில் இருந்து ஓடிப்போன விமல் மற்றும் கம்மன்பில கூட அண்மையில் ஒரு செல்வாக்குப் படைத்த பவுத்த தேரர் ஒருவரைச் சந்தித்தனர். இராசபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவதிலும் ஆபத்தான 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் அவர்கள் பங்குபற்றவில்லையா? ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவில் இருந்தும் இராசபக்சாக்கள் மூழ்கும் கப்பல் அதில்
ஒன்றும் இல்லை என்பதால் அவர்கள் அதிலிருந்து குதிக்கவில்லையா?
எனவே ஒரு தேசமாக, 95% அரசியல் தலைவர்களாலும் பல பவுத்த தேரர்களாலும் ஏமாற்றப் பட்டதில் நாம் குற்றவாளிகள் அல்லவா? எளிமையாகச் சொன்னால், நவீன உலகில், பவுத்த தேரர்கள் அரசியலில் ஈடுபடுவது ஒருபுறமிருக்க, அரச பதவியையும் தேடுகிறார்கள்.
அவர்கள் வணக்கத்திற்குரிய மஞ்சள் அங்கியைப் பயன்படுத்தி அதிகாரபலத்தைத் தேடுகிறார்கள். அதே நேரத்தில் சும்மா இருந்து கொண்டு இலவசங்களைப் பெற்று வாழ்க்கையிலிருந்து பயனடைகிறார்கள். ஆம், அவர்கள் அதிகாரபலத்தைத் தேடி அரசியலில் ஈடுபடுவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் முதலில் அந்த காவி அங்கியை வெளியே வீசியெறியுங்கள். அதன் பின் உழைத்து அவர்கள் அரசியல் நுழைந்து விரும்பியதைச் செய்யட்டும். (மூலம் https://www.colombotelegraph.com/index.php/shaming-buddha-his-teachings/. தமிழாக்கம் கனடா நக்கீரன்)